December 01, 2016

பொதுபல சேனாவின் அட்டகாசத்தை ஒழிக்கலாம் என, நினைத்த சமூகங்கள் ஏமாந்துபோய் நிற்கின்றன

மஹிந்த அரசாங்கத்தில் வட மாகாண முஸ்லிம்கள் அரச காணிகளை பிடிக்கிறார்கள் என பொய்யாக சொல்லி பொதுபல சேனா மன்னாருக்கு சென்று குழப்பம் விளைவித்த போது அரசாங்க உதவியின்றி பொதுபலசேனாவினால் இந்தளவுக்கு செல்ல முடியாது என்று கூறியோர் இப்போது பொதுபலசேனா மட்டக்களப்புக்கு ஊர்வலம் போவதை நல்லாட்சி அரசால் தடுக்க முடியுமா என உலமா கட்சி கேட்டுள்ளது.

கட்சித்தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பேசிய உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி  மேலும் தெரிவித்ததாவது,

மட்டக்களப்பு சுமண தேரர் தமிழ் அரச அதிகாரியை மிக மோசமான இனவாத வார்த்தைகளால் திட்டியும் அரசு அவருக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ மட்டக்களப்புக்கு சென்று சுமண தேரரை சந்தித்த பின்பே அவருக்கு இந்தளவு உற்சாகம் வந்ததாக அமைச்சர் மனோ கணேசன் கூறி தனது அரசின் கையாலாகா தன்மையை வெளிக்காட்டியிருந்தார். எந்தவொரு அரசியல் அதிகாரமுமில்லாத மஹிந்தவினால் இந்தளவு உசுப்பேற்ற முடியுமென்றால் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு படை என்ற பல அதிகாரங்களைக்கொண்ட அரசால் மட்டக்களப்பு தேரரின் நுணி விரலைக்கூட தொட முடியவில்லை என்பதை எங்கே போய் சொல்வது?

கடந்த மஹிந்த அரசின் போதும் பொது பல சேனா சிறுபான்மை இனங்களுக்கெதிராக பகிரங்கமாக இனவாதத்தை கக்கிய போது அரசும், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவும் இடம் கொடுப்பதாலேயே பொதுபல சேனா இந்தளவுக்கு செயற்படுகிறது என குற்றம் சொல்லப்பட்டது. அரசு இடம் கொடுக்காமல் சட்டத்தை நிலைநாட்டியிருந்தால் அவர்களை கட்டுப்படுத்தியிருக்கலாம் என்பது உண்மையாகும். ஆனால் இவற்றுக்கு பின்னால் இருந்து செயற்படுத்தியது அரசின் பங்காளிக்கட்சியான ஹெல உறுமய என்பதை சிறுபான்மை சமூகங்கள் மறந்து விட்டிருந்தனர்.

தற்போது மட்டக்களப்பு தேரர் உட்பட அனைவரும் துணிந்து இனவாதம் பேசுகின்றார்கள் என்றால் அரசாங்கம் தம்மை எதுவும் செய்யாது என்ற தைரியம் தவிர்ந்த வேறு காரணம் இருக்க முடியுமா என கேட்கிறோம். உண்மையான குற்றவாளி யார் என்பதை புரியாமல் மற்றவர்கள் மீது பழி போட்டதாலேயே இன்றும் உண்மையான குற்றவாளிகள் அதே அரசில் பங்காளியாக உள்ளனர்.

மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பி விட்டால் பொதுபலசேனாவின் அட்டகாசத்தை ஒழித்து விடலாம் என நினைத்த சிறுபான்மை சமூகங்கள் இன்று ஏமாந்து போய் நிற்பதன் மூலம் மஹிந்தவை வீழ்த்தியதில் சிறுபான்மை மக்களுக்கு இலாபமில்லை மாறாக நஷ்டமே ஏற்படுகின்றது என்பதை இன்னமும் உணரவில்லையா என கேட்கிறோம்.

பொது பல சேனாவினர் மட்டக்களப்புக்கு ஊர்வலம் போகும் போது யாராவது குழப்பவாதிகள் அவர்கள் மீது கல் எறிந்தால் அல்லது அவர்களே ஆளை நியமித்து அவ்வாறு செய்தால் வீணான இனப்பிரச்சினை ஏற்படும் என்பதால் இதனை நிறுத்துவது அரசின்; கடமையாகும். மஹிந்த ராஜபக்ஷ கண்டியிலிருந்து கொழும்புக்கு பாத யாத்திரைக்கு முயன்ற போது இதன் மூலம் இனங்களுக்கிடையில் பிரச்சினை ஏற்படலாம் என பொலிசார் பதினைந்து நீதிமன்றங்களில்; முறைப்பாடுகளை தயார் செய்து சில ஊர்களில் தடை உத்தரவை பெற்றனர். அதே போல் பொது பல சேனாவின் மட்டக்களப்பு விடயத்திலும் அரசு நடந்து கொள்ளுமா இல்லையா என்பதை பார்க்க வேண்டும்.

நாட்டின் எந்தப்பகுதிக்கும் எவரும் செல்லலாம் என்பதில் தடையில்லை. ஆனால் மக்களுக்கிடையில் பதற்றத்தை தோற்றுவிக்க எவரும் செல்ல முடியாது என்பதை சட்டம் சொல்கிறது. பொலிஸ் பாதுகாப்புடன் பொதுபல சேனா மட்டக்களப்பு சென்றால் அதற்கும் மஹிந்த காலத்தில் அரச பாதுகாப்புடன் அவர்கள் மறிச்சுக்கட்டிக்கு போனதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

1 கருத்துரைகள்:

Mahinda rajapaksa wukku puhal paduwatu than inda keelsadi mubarak maulavi yin arasiyal. Mada sambarani.

Post a Comment