Header Ads



பத்து மடத்தனங்கள்

நமது குடும்பம் சீரோடும் சிறப்போடும் அமைய வேண்டுமானால் கீழ்கண்ட மடமையின் அடையாளங்களை புறந்தள்ள வேண்டும்.

1. ஓர் அடியான் நல்லறங்கள் ஏதும் செய்யாமல் இருந்துவிட்டு சுவர்க்கம் நமக்கு கிடைத்துவிடும் என்ற கனவில் மிதப்பது மடத்தனத்தின் முதல் அடையாளம்.

2. தன் வாக்கில் சத்தியமானவனாக இல்லாத மனிதன் பிறர் தமக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புவது முட்டாள்தனத்தின் இரண்டாவது அடையாளம்.

3. சோம்பேறியாகச் சுற்றித் திரியும் ஒருவர் தன் இலட்சியங்கள் நிறைவேற வேண்டுமென்று ஆசிப்பது மடத்தனத்தின் மூன்றாவது அடையாளம். ஏனெனில் சோம்பேறிகளின் ஆசைகள் எப்போதும் நிறைவேறுவதில்லை. நம் இலட்சியங்கள் நிறைவேற வேண்டுமென்றால் பாடுபடவேண்டும்.

4. தன்னைவிட பெரியவர்களுக்குக் கட்டுப்படாத மனிதன் சிறியவர் தன்னை மதிக்க வேண்டுமென ஆசைப்படுவது மடத்தனத்தின் நான்காவது அடையாளம். நமக்கு மேலுள்ளவர்களுக்கு நாம் கட்டுப்படவில்லை என்றால் நம் கீழுள்ளவர்கள் நமக்கு எப்படி மதிப்பளிப்பார்கள்?

5.  பத்தியம் பேணாத நோயாளி நிவாரணத்தை எதிர்பார்ப்பது மடமையின் ஐந்தாவது அடையாளமாகும். சர்க்கரை நோயாளி இனிப்புப் பண்டங்களை தவிர்ப்பதில்லை. குறைப்பதுமில்லை. பிறகு சிரமங்கள் கூடிக்கொண்டே போகுதுங்க... என்று புலம்புகிறார்கள். எனவே பத்தியம் மிகவும் அவசியம்.

6. வருமானத்திற்கு மீறிய செலவு செய்பவன் செல்வ நிலை வேண்டுமென்று ஆசைப்படுவது முட்டாள்தனத்தின் ஆறாவது அடையாளம். பெரும்பாலும் பெண்கள் இத்தவறில் சிக்கித்தவிக்கின்றனர். விரலுக்கேற்ற வீக்கம் வேண்டும். கணவனின் வருமானம் ஒரு எல்லைக்குட்பட்டதென்றால் அந்த எல்லைக்குள் செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். செலவு மிதமிஞ்சிப்போனால் சண்டைகள் வரத்தான் செய்யும்.

7. பிறர் துன்பத்தில் இருக்கும்போது உதவிக்கரம் நீட்டாத மனிதன் தனது கஷ்டத்தில் பிறரின் உபகாரத்தை ஆதரவு வைப்பது மடமையின் ஏழாவது அடையாளமாகும்.

8. ஓர் இரகசியத்தை பிறரிடம் போட்டு உடைத்து, பிறகு யாரிடமும் சொல்லிவிடாதே என்று சொல்லிவிட்டு அவன் யாரிடமும் கூறமாட்டான் என்று நம்புவது மடமையின் எட்டாவது அடையாளமாகும். இப்பழக்கம் பெண்களிடம் பரவலாகக் காணமுடியும். பொதுவாகவே பெண்களுக்கு இரகசியத்தை பாதுகாக்கத் தெரியாது. இரகசியம் என்றால் அது இரகசியமாக இருக்க வேண்டும்.

9. இரண்டு மூன்று முறை மட்டும் பாவம் செய்துவிட்டு, பிறகு அதை விட்டு விலகி விடலாம் என்று நினைப்பது மடமையின் ஒன்பதாவது அடையாளமாகும். இன்றைய வாலிபர்களின் நிலையும் இதுதான். இந்தத் தவற்றை ஒரே ஒரு தடவை செய்துவிட்டு பிறகு ஒதுங்கிக் கொள்ளலாம் என்று மனம் கூறுகின்றது. ஆனால் பாவத்தை தொட்டுவிட்டாலே அதன் பழக்கம் தொற்றிக்கொள்ளும். பிறகு மீளவே முடியாது.

10. ஒரு கணவன் தன் மனைவியுடன் சண்டையிடுவதை அன்றாட நடைமுறையாக்கிக் கொண்டுவிட்டு பிறகு நிம்மதி, சந்தோஷமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுவது மடமையின் பத்தாவது அடையாளமாகும்.

வீட்டில் மனைவியுடன் சண்டையிட்டுக்கொண்டும் அவளைத் திட்டிக்கொண்டும் இருக்கும் கணவன், குடும்பத்தில் சந்தோஷம் பொங்க வேண்டும் என்று நினைத்தால் அவனை முட்டாள் என்றே கூற வேண்டும். இது நடக்கவே முடியாத காரியம்.

மறந்துவிடாதீர்கள்! மனைவி என்பவள் ஏதோ காட்டில் சுற்றித் திரிந்தபோது நாம் பிடித்து வந்த ஆட்டுக்குட்டியல்ல. அவள் இருவரின் அன்பு மகள்! நாம் தேடிச்சென்று பெண் கேட்டோம். அவளை கண்ணியத்துடன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளோம். அவளுக்கென்று உரிமைகள் இருக்கின்றன. அவளது உரிமைகளை அவளுக்கு அளித்தாக வேண்டும்.

எப்படி "கலிமா"வை மொழிந்து விட்டால் முழு ஷரீஅத்தின்படி வாழ்வது ஒரு மனிதனின் மீது கடமையாகி விடுகின்றதோ அதே போலத்தான் திருமணத்தின்போது "கபில்து..." என்ற ஏற்றுக்கொண்டேன் என்ற வார்த்தையை கூறிவிட்டால் அவளது முழு பொறுப்புகளும் கணவனின் தலைமீது வைக்கப்படும். அதை ஆண்மகனாக இருந்து நிறைவேற்ற வேண்டும்.

கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி பரிமாறப்படும் போதுதான் பிள்ளைகளுக்கு சீரிய ஒழுக்கத்தைக் கற்பிக்க முடியும்?

கணவனும் மனைவியும் அன்பாக பிரியமாக வாழ்க்கை நடத்த வேண்டும். அப்பொழுதுதான் வீட்டிற்குள் அன்பெனும் தென்றல் வீசும். இல்லறமும், பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டுதலும் கிடைக்கும். வீடு சுவனத்தின் முன்மாதிரியாக, அமைதிப் பூங்காவாக காட்சியளிக்கும்.

- பீர் துல்ஃபிகார் அஹமத் சாகிப் (ரஹ்)

1 comment:

Powered by Blogger.