November 15, 2016

விடிவு வராது, இப்போதைக்கு ‘வீடியோ’தான்...!

-தெய்வீகன்-

 மட்டக்களப்பில் கிராம சேகவர் ஒருவருக்கு எதிராக பௌத்த பிக்கு ஒருவர் மேற்கொண்ட வெறித்தனமான - இனவாத தாக்குதல் தொடர்பான காணொளி ஒன்று, கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையங்களில் பரவலாக உலாவுகிறது.   “தமிழர்கள் எல்லோரும் புலிகள்தான்; உங்கள் எல்லோரையும் கொன்றொழிப்பேன்” என்று அடிவயிற்றிலிருந்து குரலெடுத்துக் குழறும் அந்த மதகுருவின் பேச்சுக்கு எந்த மறுபேச்சும் இல்லாமல் அந்தக் கிராமசேவகர் சிலைபோல நிற்கிறார். தொடர்ந்தும் தனது குரூரமான முகபாவங்களால் திரட்டிய பல கெட்டவார்த்தைகளை அந்தக் கிராம சேவகரின் மீது கொட்டித்தீர்க்கிறார் அந்தப் பிக்கு. அந்தக் கிராமசேவகர் எந்தப் பதிலும் கொடுக்காமல் அந்தப் பிக்குவின் துவேச முகத்துடிப்பை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டு நிற்கிறார்.   உலகிலேயே மிகப்பெரிய வன்முறைவழிதான் அஹிம்சை என்றும் அந்த மௌனம் செறிந்த போராட்டத்தின் முன்னால் எந்தக் கனரக ஆயுதங்களும்கூட தோற்றுப்போகும் என்றும் எங்கோ படித்த வரிகள், மட்டக்களப்பு சம்பவத்தின்போது நினைவுகளை மீட்டிச்சென்றன.   இன்று எல்லோரும் சஞ்சரிக்கும் சமூக வலைத்தளம் எனப்படுவது மாற்றுலகமாகிவிட்ட காரணத்தால், அங்கு முன்வைக்கப்படும் சில ஆழமான விமர்சனங்களுக்கும் கருத்தியல் மொழிபெயர்ப்புகளுக்கும் விடைதேடுவதன் ஊடாக இப்படியான இனவாத மனநிலையுடன் தமிழ் மக்கள் எவ்வாறு உரையாடுவது என்பதைப் பேசுவதுதான் இந்தப் பத்தியின் நோக்கமாகும்.  சிங்கள மேலாதிக்கமானது கடந்த நான்கு தசாப்த காலமாகத் தனது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காகவும் வெளிநாடுகளின் சமர வேலைத்திட்டங்களுக்காகவும் வளர்த்துவிட்ட மிகப்பெரிய சக்திஆகும். இது இன்றைய திகதியில் மிகப்பெரும் பூதமாக வளர்ந்து விகாரமான தனது கரங்களினால் தேசத்தின் பெரும்பான்மைக் கூறுகள் அனைத்தையும் சீண்டிவைத்திருக்கிறது. இங்கு சிங்களத் தேசியம் எனப்படுவது பௌத்த தேசியமாகவே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. அது ஒரு மதத்தின் அடிப்படையில் செறிவாக்கப்பட்டிருக்கும் வீரியமான சக்தி. அதனால்தான், அந்த உற்பத்திக்கோட்பாட்டுக்குள் மதத்தலைவர்களான பிக்குகள் எல்லோரும் நீக்கமறக் கரைந்து, மொத்த நாட்டையும் தாங்களே குத்தகைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன் காணப்படுகிறார்கள். இதனை தேசபக்தி என்பதற்கு அப்பால் தேசியவாதம் என்று நம்புவதற்குத்தான் அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள்.   ஏனெனில், தேசபக்தி என்பது தனித்த, துணையற்ற, விசுவாச கோஷம். ஆனால், சிங்களத் தேசியம் என்பது அப்படியல்ல. பௌத்த மதத்தினால் பின்னிப்பிணைந்த கோட்பாடாகக் கட்டியெழுப்பப்பட்ட ஒன்று. ஒன்றுக்கொன்று பலம் வழங்கும் தீவிரங்களின் தொடர்ச்சியாக இந்தத் தேசியம் கட்டி வளர்க்கப்படவேண்டும் என்று சிங்களப் பெரும்பான்மை மனநிலை கொண்டவர்கள் விரும்புகிறார்கள்.   சிங்களத் தேசியத்திலிருந்து பௌத்த மதத்தை எடுத்துவிட்டுப் பார்த்தால், அதில் தேசபக்தி என்ற அடிப்படை விசுவாசம்கூட மிஞ்சும் என்று கூறமுடியாது. ஆனால், தமிழ்த் தேசியம் அப்படியல்ல; நாளை இந்து மதத்தையோ கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களையோ தமிழ்த் தேசியத்திலிருந்து பிரித்தெடுத்துக் கொண்டாலும் தமிழ்த் தேசியம் எனப்படுவது அகவயமாகவும் புறவயமாகவும் தன்னை மக்கள் மனங்களில் ஆழப்பதித்து வைத்திருக்கும் சக்தி மிக்கது. தமிழ்த் தேசியம் அதற்கான விலையைக் கொடுத்திருக்கிறது. அதன் ஊடாக அதற்கான தகுதியையும் அது பெற்றிருக்கிறது.   இது சிங்களத் தேசியவாத - மதவாத போராளிகளுக்கும்கூட நன்கு தெரியும். இந்த மௌனமான மன உழைச்சல்கள் பல வேளைகளில் இப்படியான மட்டக்களப்பு தேரர்களின் வழியாக வெளியே வந்து விழுந்துவிடுவதுண்டு.   சரி! இந்தச் சிங்களத் தேசியத்தின் ஆரம்பம் எது? அது எப்போது தமிழர்களைச் சீண்டத் தொடங்கியது என்று பார்த்தால்,   இந்தச் சீண்டல்களுக்கு எதிரான பதிலடிகள்தான் தமிழர்களின் போராட்டமாகவே வெடித்தது. பல முனைகளில் பதிலடியாக முகிழ்ச்சியடையத்தொடங்கியது.   ஒட்டுமொத்தப் பெரும்பான்மைவாத மனநிலையிலிருந்து அவர்கள் தமிழ்மக்களை ஒரு தேசிய இனமாக அங்கிகரிக்கத் தவறியதும் பெரும்போராக வெடித்ததற்கு ஒரு காரணம். அதுவே பன்னெடுங்காலமாகத் தொடர்ந்து பல உயிர்களைப் பலியெடுத்தது. பல தசாப்தங்களான ஒரு நாட்டையே சூறையாடிய போரின் விளைவாகப் பிணங்களை எங்கும் பிதுக்கியெறிந்தது. ஈற்றில் சிங்கள தேசியம் வென்றது.   இந்த வெற்றிவாத மனநிலையும் தங்களது மதத்தின் அடிப்படையிலான தேசியவாத உணர்வும்தான் பெரும்பான்மை சிங்கள மக்களின் மனங்களில் இன்னமும் தாராளமாக உள்ளது என்பதை யாரும் மறுத்துவிடமுடியாது. ஏனென்றால்,. இந்தச் சிறுதீவில் பன்னெடுங்கால அரசியலினதும் போரினதும் உற்பத்திகள் அவர்கள். ஆகவே, அவர்களின் மனங்களில் அதைத் தவிர வேறொன்றும் இருக்கவும் முடியாது; இருக்கும் என்று நாம் எதிர்பார்ப்பதும் தவறு.   போர் என்ற ஒற்றை சம்பவம் துப்பாக்கிகளுக்கு விடுதலையளிக்கலாம். கந்தக காற்றுக்குத் தடைகள் போட்டிருக்கலாம். ஆனால், ஆழ் மனங்களில் வளர்த்துவிட்ட கரிய அரசியல் படலங்களை அழித்து விடுவதில்லை. இப்போதைக்கு அது அழியப்போவதில்லை.  அது எப்படி தமிழ் மக்களுக்கு மாத்திரம் இன்னமும் போராட்ட குணம் மாறவில்லை என்று மார் தட்டும் எவரும், சிங்கள மக்களுக்கு அந்தக்குணம் மாறியிருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று புரியவில்லை.   நான்கு தசாப்த காலமாக இடம்பெற்ற போரில் தமிழர்களின் மரணபீதி மனோநிலையும் பல கொடூரங்களைச் சாட்சிகளாக பதிவு செய்த சனல் - 4 காணொளிகளில் வெளிவந்த குரோதவெறித்தனம் பீடித்த மனநிலையும் இன்னமும் மாறாதவையாகத்தான் உள்ளன. அப்படியான மனநிலைகளுடன்தான் தமிழர்கள் உரையாடவேண்டிய நிலையிலும் இருக்கிறார்கள்.  இந்தப் பெரும்பான்மைவாத மனநிலையிலிருந்து சிங்கள இனவாதச் சக்திகள் தங்களை மாற்றியமைக்கவேண்டும் என்றும் யுத்த வெற்றிவாதத்தை தொடர்ந்தும் தங்களின் பலமாக விளம்பரம் செய்யும் யுகத்தில் நல்லிணக்கம், சகோதரத்துவம் போன்ற உயரிய மாண்புகளை உருவாக்கிக்கொள்ளுதல் கடினம் என்றும் எல்லோரும் ஆலோசனை கூறியாயிற்று.   ஆனாலும் சிங்கள தேசம் இன்னமும் அவற்றை செயற்படுத்துவதற்குரிய வல்லமைகள் தனக்குள் வளர்த்துக்கொள்வதற்கு தொடர்ந்து தவறிக்கொண்டே வருகிறது. இதுதான் தமிழர்களின் வரலாறு; இதுதான் இலங்கையின் வரலாறு; இதுதான் இலங்கையிலுள்ள பிரச்சினைகளின் வரலாறு.   தற்போது அரசியல் - சமூக - ரீதியாகச் செயற்பாட்டுத் தளத்திலிருந்து, சிங்கள மக்களை இப்படியான நிலையிலிருந்து பிரித்தெடுத்து நல்லிணக்கத்தை நோக்கி வரச்செய்வதற்கு, ​பெரும்பான்மையின அரசியல்வாதிகள் கணிசமான எந்தக் காரியத்தையும் முன்னெடுப்பதாகத் தெரியவில்லை.   நல்லிணக்கம் என்பது தமிழர் தரப்பிலிருந்துதான் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற மந்திரங்களைத்தான் எல்லாத் தரப்பினரும் ஓதிக்கொண்டிருக்கிறார்களே தவிர, பெரும்பான்மைவாத மனநிலையில் போர் வெற்றிச் சங்கை ஊதிக்கொண்டிருக்கும் எவரும் தங்களது மிடுக்கான தளத்திலிருந்து இம்மியும் இறங்கிவருவதற்குத் தயாரில்லை. மட்டக்களப்பு பிக்குவின் நடத்தை இதனைத்தான் பிரதிபலித்திருக்கிறது.   இது மக்கள் மட்டத்தில் - சிவில் சமூக மட்டங்களில் - ஆரம்பிக்கப்படவேண்டிய படிமுறைகளின் விளைவாக தீர்க்கப்படவேண்டிய விடயங்கள். ஐக்கிய இலங்கைக்குள் தீர்வினைப் பெற்றுக்கொள்வது என்று இரு தரப்பும் உறுதியாகிவிட்ட நிலையில் இரு இனங்களுக்கும் இடையிலான சுமூக உறவு பிரதானமானது. இப்படியான மட்டக்களப்பு பிக்குகளின் மனநிலையிலிருந்து ஏனைய சிங்கள மக்களைப் பிரித்தெடுத்து தம்மோடு இணைத்துக்கொள்வதுதான் இனவாதத்தை எதிர்கொள்வதற்கு சிறந்த வழியாக அமையும்.  மட்டக்களப்பு பிக்குவின் மனோநிலையில்தான் இலங்கையில் உள்ள எல்லா சிங்கள மக்களும் உள்ளார்கள் என்று கூறிவிடமுடியாது. ஆனால், அவ்வாறான ஒரு மனநிலையில் உள்ள மக்களுடன் உரையாடவேண்டிய நிலையில்தான் தமிழ்மக்கள் உள்ளார்கள் என்பது யதார்த்தம்.  ஆகவே, இனவாதத்துக்கு எதிரான ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கவேண்டிய இனங்களாக தமிழ், முஸ்லிம்கள் மாத்திரம் அணிசேராது அதில் சிங்கள மக்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதுவே இப்படியான வரலாற்று சிக்கல்களுக்கு நீடித்து நிலைக்கும் தீர்வாக அமையும்.  நடந்து முடிந்த சம்பவத்துக்கு பதிலாக யாழ்ப்பாணத்தில் சிங்கள பொதுமகன் யாராவது ஒருத்தரை தமிழர் யாராவது இப்படியாக கிழித்து தோரணம் கட்டி தொங்கப்போடவேண்டும் என்று எண்ணினால் தமிழர்களுக்கு விடிவு வராது. முகநூலில் இன்னொரு வீடியோ வேண்டுமானால் வரலாம். அவ்வளவுதான்!

3 கருத்துரைகள்:

You are correct...Nettu veliyaana 2 vedios are just vedios or is there any action....
Our MUSLIM KOOOTTU AMAIPPUGAL...itharkkum SLTJ thaan kaaranam endu sollidivaangalonnuthaan payama irukku ayya...!

The law must implement on that clergy colavery.

HOW mR. ABDEEN? It is all one community dominated.

Post a Comment