Header Ads



முகமூடிகள் செய்யும் பாவங்களுக்கு, முசுப்பாத்தி பார்ப்போரும் பங்காளிகளே..!!

-முஹம்மது ராஜி -
சமீப காலமாக சோஷல் மீடியாக்களின் வளர்ச்சியானது, நல்ல பல விடயங்களை செய்துள்ள போதும் சகோதர ,சகோதரிகளின் விலை மதிக்க முடியாத மானம் வெவ்வேறு கோணங்களில் கப்பலேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

 நரம்பு இல்லாத நாக்கினாலும், மன சாட்சி இல்லாத பேனைகளாலும் வார்த்தைகளை மிக இலகுவாக கொட்டிவிட  முடியும். இல்லாத பொல்லாததுகளை சோடித்து புறம் , அவதூறு கூறுதலை ஒரு செக்கனில் எழுதி உலகம் முழுவதும் அறிவித்து அவரை அவமானப்படுத்தி விட முடியும் . இதில் எந்த கெட்டித்தனமும் இல்லை .

வெளியிடப்படுகின்ற வார்த்தைகள் இதயங்களை காயப்படுத்தும் போது காயப்படுத்தப்பட்டவருக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே திரை எதுவும் இருக்கப்போவதில்லை. ஒரு காலத்தில் மன்னிப்பு கேட்கலாம் என்று எழுதியவர் நினைக்கக்கூடும் . அதுவரை மானத்தை வாங்கியவர் , அல்லது வாங்கப்பட்டவர் உயிரோடு இருப்பார் என்பதற்கு என்ன நிச்சயம் ?

சொந்த தாயை பார்த்து மகனும் சொந்த மகனை பார்த்து தாயும் ஒளித்துக்கொள்கிற நியாயத்தீர்ப்பு  நாளை பயந்து கொள்ளுங்கள் . மானம் என்பது கற்பு போன்றது. அற்ப உலகத்துக்காக ..,அதன் தேவைகளுக்காக.. ,ஷைத்தானின் உந்துதலால் சகோதரின் மானத்தை சந்தி சிரிக்க வைத்து விடாதீர்கள்

நியாயத்தீர்ப்பு நாளான அந்நாளில்  கொம்பு உள்ள ஒரு ஆடு கொம்பு இல்லாத ஆட்டை தாக்கியதற்காக விசாரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் ( ஸல்) கூறியுள்ளார்கள் என்றால் சகோதர சகோதரிகளின் மானத்தோடு விளையாடும் நமக்கு என்ன கதி.. ?

அலுப்பு முறித்து எழுந்து சுபுஹு தொழுகிறோம் . வேலைகளுக்கிடையே ஐந்து நேரத்தொழுகைகளை நிறைவேற்றுகிறோம் . கடும் வெயிலில் நோன்பு வைக்கிறோம் . கடினமாக உழைத்த பணத்தில் ஸக்காத் கொடுக்கிறோம் ஹஜ்ஜும் கூட சொல்லுகிறோம் . இன்னும் அல்லாஹ்வுக்காக என்கிற நோக்கில் எத்தனையோ அமல்களை தொடர்ந்து செய்கிறோம் . இவ்வாறு செய்த அமல்களை ,அதன் நன்மைகளை  நீங்கள் அநியாயம் செய்தவர்  , நீங்கள் புறம் பேசியவர் ,நீங்கள் மானத்தை விற்றவர் ,நீங்கள் அவதூறு செய்தவர்
நியாயத்தீர்ப்பு நாளில்  அள்ளிக்கொண்டு போவதாக  கற்பனை  செய்து பாருங்கள் . உங்கள் நன்மைகள் தீர்ந்து போகும் இடத்தில் நீங்கள் , அநியாயம் செய்யப்பட்ட அவர்களின் பாவங்களை  இறக்குமதி செய்வதாய் கற்பனை பண்ணிப்பாருங்கள்.

நிரந்தர மறுமைக்காக இவ்வுலகம் எனும் மரத்தின் அடியில் ஓய்வெடுத்த அந்த அற்ப நேரத்தில் மற்றவர்களின் மானத்தை அவமானமாக்கி செய்த பாவங்களுக்காக நரகத்தை நாம் கொள்வனவு செய்வது எந்த வகையில் நியாயம் சகோதரர்களே ..? 

முகமூடிகளை அணிந்து சமூகத்தலங்களில் வலம் வருகிறவர்வர்கள், சொல்லுகிற நியாயங்களில்  ஒன்று  சமூகத்தில் உள்ள துரோகிகளை அடையாளம் காட்டுவது . சகோதர சகோதரிகளே .. நமக்கு அழகிய எடுத்துக்காட்டாக உள்ள நபிகள் நாயகம் (ஸல் )சமூகத்தை சீர் திருத்துவற்காக முகமுடி போடவில்லை . முகமுடி அணிய ஊக்குவிக்கவுமில்லை மொத்தத்தில் நய வஞ்சக தனத்தை கடுமையாக கண்டித்தார்கள் .

யதார்த்தத்துக்கு பொறுத்தமற்ற ஷைத்தானிய சினிமாக்களின் பாதிப்பதாக கூட இது இருக்கலாம் . 'அந்நியன்' திரைகளில் இருக்க முடியும் அதையே தினம் நம் வாழ்க்கையில் முகமூடிகளாக போடுகிற போது சமூகம் பிளவு படுகிறது , மானங்கள் ஏலம் போடப்படுகிறன்றது . பாவங்கள் மலிந்து அசிங்கமான வார்த்தைகள் அன்றாடம் ஆகி விடுகின்றது 

முகமூடி அணிந்துள்ளவர்கள் தம்மை அடையாளம் காட்டாமல் இருப்பதற்கு கூறுகின்ற நியாயங்களில் பிரதானமானது தங்களை அடையாளம் காட்டுகின்ற போது தமது குடும்பமும் தாமும் பதிப்புக்கு உள்ளாகலாம் என்கிற அச்சம் .

முகமுடி சகோதர்களே..! உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக்கும் பிரச்சினை வந்து விடும் என்கிற அச்சத்தில் மற்றவர்களை  அவமானப்படுத்தி அடுத்தவர் குடும்பங்களில் குழப்பங்களையும் , சமூகத்தில் பிரிவினைகளும் ஏற்படுத்தும் நீங்கள் , அநியாயம் செய்யப்பட்டவர் உங்கள் நன்மைகளை கொள்ளையடிக்கிற நாளை மறந்து விடாதீர்கள் . 

அநீதி இழைக்கப்பட்டவர்  அல்லாஹ்விடம்கேட்கிற துஆவுக்கு  திரை இருக்காது . இதனால் மறுமையில் மாத்திரமன்றி இவ்வுலக வாழ்விலும்  உங்களுக்கும் உங்கள் அன்பு மனைவி , பிள்ளைகள் , சந்ததிகள் ஆகியோருக்கும் . ஏற்படுகிற எதிர் வினைகள் அவமானங்கள் பாதிப்புகள் என்பவற்றுக்கு பயந்து கொள்ளுங்கள்

நல்ல விடயங்களை சொந்த முகவரிகளில் சொல்லுங்கள் . அல்லது  உங்களை அடையாளப்படுத்திய பண்பான பெயர்களில்  சொல்லுங்கள் . அடுத்தவரின் மானத்தை சந்தி சிரிக்க வைப்பதால் உங்களுக்கு கிடைப்பது என்ன சகோதர்களே ..?  இவ்வறான முக முடிகளின் வளர்ச்சிக்கும் அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு பாவங்களின் பங்குகளுக்கும் நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஓரு வகையில் காரணம் .

சாதாரண வாசகர்களாக உள்ள நமக்கு
இதில் என்ன சம்பந்தம் என கேட்கிறீர்களா.. ?

இவ்வாறான முகமுடி நபர்களை சோஷல் மீடியாக்களில் வளர்ச்சி அடைய செய்வது , சந்தியில்  நின்று கைகட்டி 'முசுப்பாத்தி' பார்க்கின்ற நாம் தானே ..?
இது போன்ற முகமூடிகளை நண்பர்களாக்கி அல்லது அவர்களின் நாகரிகமற்ற அறிக்கைகளுக்கு கீழே like பண்ணி சிரிக்கிற முகங்களை போட்டு திரைப்பட காமெடிகளின் முகங்களை இட்டு comment பண்ணி  share பண்ணி அவர்களுக்கு உசுப்பேத்தி விடுவதும் நாம் தானே ..?

முகமூடிகள் செய்கின்ற பாவத்தில் நாமும்   பாவத்தில்  பங்காளிகளாகிக்கொண்டு இருக்கின்றோம்..
முகமுடி அணிந்தவர்கள், சக சகோதர , சகோதரியின் மானத்தை விற்கிற போக்கிலே செல்லுமிடத்து அவர்களை unfriend செய்யுமிடத்து இவ்வாறான அவமானப்படுத்துதல்  நடவடிக்கைகளை கேட்பதற்கு யாருமே இருக்கப்போவதில்லை .இதுபோன்ற முகமூடிகள் friend அழைப்பு விடுகிற போது அவற்றை நாம் புறக்கணித்தால் அவர்களின் வளர்ச்சிக்கு அது தடையாக அமையும்.


இன்று நீங்கள் ஊக்கம் அளித்து ஆளாக்கி விடுகிற முகமூடிகள் நாளை உங்களுக்கே அல்லது உங்கள் சந்ததிகளுக்கே பாதிப்பாக அமைய கூடும் .இதுபோன்ற முகமூடிகள் நாளை உங்கள் உறவினர்களின்  மானத்தை சந்தி சிரிக்க வைக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்.. ?

அதிகமான சந்தர்ப்பங்களில்  சமுக பணிகள் என்கிற பேரில் கிடைக்கிற நன்மைகளை விட  அதனால் கிடைக்கிற பாவங்களே அதிகமாகி விடுகின்றன. வரவு  செலவு கணக்கில் தேர்ச்சி பெற்றுள்ள நாம், ஒன்றை மறந்து போய் விடுகின்றோம். ஒரு நன்மை செய்துவிட்டு ஓராயிரம் பாவங்களை கொள்வனவு செய்வது எந்த வகையில் சொர்க்கத்துக்கு வழி திறக்கும் சகோதர்களே...?

அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்  . நாம் செய்கின்ற ஒவ்வொரு செயல்களுக்கும் கேள்வி கேட்கப்படுவோம் . செய்கின்ற அமல்களை, பாவங்களாக பரிணாம வளர்ச்சி அடைய செய்து விடாதீர்கள் .

இவ்வுலக வாழ்க்கை ஒரு முறைதான் வாழப்போகிறோம் . முடிவடைந்த பின்னர் திரும்ப அது மீண்டும் கிடைக்கப்போவதில்லை . வாழும் காலத்தில் நல்லவற்றை செய்யா விட்டாலும் கெட்டவற்றை செய்வதில் இருந்து தவிர்ந்து கொள்வோமாக . !

5 comments:

  1. Excellent article we must follow writer advice's Thank you Brother M.Raji & Appreciated your Article

    ReplyDelete
  2. Excellent Article. Thanks Brother

    ReplyDelete
  3. Nice! I always bookmark article like this hoping to read again, even after years.

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ் அழகான அறிவுறுத்தல் அடங்கிய கட்டுரை

    ReplyDelete
  5. மிக அழகிய உபதேசம் சகோதரனே,அல்லாஹ் உங்களுக்கு றஹ்மத் செய்வானாக,இப்படியான விடயங்களை பின்பற்றி நடக்க தௌபீக் செய்வானாக

    ReplyDelete

Powered by Blogger.