Header Ads



"ஒன்று கூடல்கள் கூடிக்கலைவதுடன், நின்றுவிடக் கூடாது"

-யாழ் அஸீம் -


யாழ்ப்பாண முஸ்லிம்களின் விவகாரங்களை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டு வரும் நோக்கோடு யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஐரோப்பிய நாடுகளில் வசிக்கின்ற முஸ்லிம்கள் ஒரு பாரிய முயற்சியில் ஈடுபட்டார்கள். அதற்கமைய கடந்த 27.09.2016 அன்று ஜெனீவாவில் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலக வளாகத்தில் இராஜதந்திரிகளுடனான விசேட சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த சந்திப்பில் யாழ் முஸ்லிம் சமூகம் பிரதிநிதிகள் சார்பில் நோர்வேயில் வசிக்கும் ஜனாப் அனீஸ் ரவூப் அவர்கள் யாழ்ப்பான முஸ்லிம்கள் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தார்.

நோர்வேநகர சுற்றாடல் அமைப்பின் பிரதம ஆலோசகரான ரவூப் அனீஸ் தனது உரையில் 'உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள், சமவுரிமை, பிரசைகளின் உரிமைகள், பல்கலாசார சமூக அமைப்பு, சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத் தன்மை, நல்லாட்சி, இனமத சகவாழ்வு குறித்த சிந்தனைகள் பல்வேறு நாடுகளிலே மிகவும் வெற்றிகரமாக அமுலாக்கம் செய்யப்படுகின்றன.

இவ்வாறான சூழலில் இலங்கையின் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றமும், அவர்களது தொடர்ச்சியான அகதி வாழ்வும், முறையாக மீள்குடியேற்றம் அற்ற தொடர்ச்சியான அகதி வாழ்வும், இது வரை முறையாக மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் ஒரு பாரிய மனித உரிமை மீறலாகவே நோக்கப்படுதல் வேண்டும்.

1990 வரை வடக்கில் தமிழ் - முஸ்லிம் உறவுகள் மிகவும் சீரான நிலையிலே காணப்பட்டன. தமிழ் மக்களுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைக் கொண்ட முஸ்லிம்கள் யாழ் மண்ணில் மிக நீண்ட கால வரலாற்றைக் கொண்டவர்கள்.

முஸ்லிம்களின் மீது கொண்ட சந்தேகம் அல்லது அவர்களைத் துரோகிகளென வெளிக்காட்டி இனச் சுத்திகரிப்புக்கான காரணத்தை புலிகள் கற்பிக்க முனைந்தார்கள். ஆனால் இனச்சுத்திகரிப்பு எக்காரணத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத சர்வதேச குற்றம் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறோம். தங்களுடைய உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் போராடிய ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது காழ்ப்புணர்வு  கொண்டு அவர்கள் மீது அநீதியை பலாத்காரத்;தை வன்முறையை பிரயோகித்தமை மாபெரும் தவறேயாகும்.

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விவகாரங்கள் போதிய கவனத்தை பெற்றிருக்கவில்லை. குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகள் பாரிய சவால்களை எதிர்நோக்கியிருக்கின்றன. வீட்டுத் திட்டங்களில் எமது மக்கள் பெரிய அளவில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்' எனக் குறிப்பிட்டார்.

யாழ் முஸ்லிம் சர்வதேச அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையானது மேலும் பல முஸ்லிம் புத்திஜீவிகளையும் இணைத்துக்கொண்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாகும். தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைத் தீர்வு, மீள்குடியேற்றம் என்பவற்றில் புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் காத்திரமான பங்களிப்பைச் செய்து வருவது யாவருமறிந்த விடயமாகும் .

எனவே வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட இந்த இருபத்தாறாவது வருடத்தை நினைவு கூரல், ஒன்று கூடல் என்று கூடிக்கலைவதுடன் நின்றுவிடாமல் காத்திரமான செயற்றிறன் மிக்க செயற்பாடொன்றை நோக்கி முன்னெடுத்துச் செல்வதே பயனுள்ளதாக அமையும் 

No comments

Powered by Blogger.