October 03, 2016

இந்த டெக்கீஸ்களின், வெற்றி ரகசியம் இதுதான்

தொழில்நுட்பம் இல்லாத நம் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியாது. நாம் இன்று சிரமமின்றி வாழ்வதற்கு பின்னால், யாரோ ஒருவர் பட்ட சிரமங்களின் கதை இருக்கிறது. மின்விளக்குகள் முதல், நம் கையில் தவழும் ஸ்மார்ட்போன் வரை, யாரோ ஒருவரின் கண்டுபிடிப்பும், அர்ப்பணிப்பும்தான் நம் வாழ்க்கையை அழகுபடுத்துகின்றன. அப்படி நாம் வாழும் காலத்தில், உலகை திரும்பிப் பார்க்க வைத்த டெக்கீஸ்களின் சின்ன ரீவைண்ட்தான் இந்த கட்டுரை. அவர்களின் அசாத்திய வெற்றிகளுக்கு பின்னால், என்ன இருக்கிறது தெரியுமா?  

ஸ்டீவ் ஜாப்ஸ்:

'ஆப்பிள்' என்னும் ஐ-கனியை விதைத்தவர். மாற்று சிந்தனையின் பிதாமகன். ஐ-போன், ஐ-பாட் என ஜாப்ஸின் சிந்தனைகள் வரைந்தது எல்லாமே, டெக்னாலஜியின் மாஸ்டர் பீஸ்கள். நல்ல டெக்கீயாக மட்டுமில்லாமல், ஆப்பிள் நிறுவனத்தை உலகெங்கும் கொண்டு சென்ற ஒரு சிறந்த பிசினஸ் மேன். டீ- ஷர்ட்டில் சே குவேரா என்றால், செல்போன் வால்பேப்பரில் ஸ்டீவ் ஜாப்ஸ்தான் யூத்துகளின் இன்ஸ்பிரேஷன். 56 வயதில் அவர் இறந்தபோது அவர் சொத்துமதிப்பு  2,12,000 கோடி ரூபாய். இப்படி உலகையே வாய்பிளக்க வைத்த, பல வெற்றிகளுக்கு சொந்தக் காரரான ஸ்டீவ் ஜாப்ஸ் சந்தித்த சறுக்கல்கள் எத்தனை தெரியுமா?

பிறந்தவுடனேயே தன் பெற்றோரால் தத்துக் கொடுக்கப்பட்டவர். ஏழ்மையின் காரணமாக கல்லூரிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டவர். இந்தியாவுக்கு வந்து இமயமலைக்கு சென்று, இறைவனைத் தேடிய ஃபிளாஷ்பேக் எல்லாம் கூட ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு உண்டு. முதன்முதலில் ஸ்டீவ் ஆப்பிளைத் தொடங்கியது சிலிக்கான் வேலியின் பிரம்மாண்ட தொழிற்சாலையில் அல்ல. அவர் வீட்டு கார் ஷெட்டில்தான். ஆப்பிள் கணினிகளை வெற்றிகரமாக விற்பனை செய்த வரலாறு மட்டுமல்ல. அதே ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து, தோல்விகளுக்கு குற்றம் சாட்டப்பட்டு துரத்தப்பட்ட வரலாறும் இவருக்கு உண்டு.  அசரவில்லை மனிதர். உடனே நெக்ஸ்ட் என்னும் கணினி நிறுவனத்தை துவங்கினார். பிக்சர் என்னும் கிராபிக்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார். இரண்டுமே வெற்றிகரமாக அமைந்தது. ஜாப்ஸை வெளியேற்றிய ஆப்பிள், அவரின் நெக்ஸ்ட் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. மீண்டும் தனது தாய்க் கழகத்துக்குள் வந்து சேர்ந்தார் ஜாப்ஸ். அதன் பின் நடந்தது அனைத்தும் வரலாறு. "நீங்கள் எத்தனை விஷயங்களை செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. அதனை எப்படி செய்கிறீர்கள் என்பதே முக்கியம்" என்பது ஜாப்ஸ் உதிர்த்த வார்த்தைகள். 

லாரி பேஜ்:

இந்த நூற்றாண்டின் டெக்னாலஜி அசுரனான கூகுளுக்கு உயிரூட்டியவரில் ஒருவர். 43 வயதாகும் லாரிதான், 18 வயதான கூகுளுக்கு 'டாக்டர்.வசீகரன்'. சிறுவயதிலேயே குட்டி ஐன்ஸ்டீனாக வளம் வந்தவர் லாரி. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில்தான் முதன்முதலாக கூகுளின் இணை நிறுவனரான, செர்கே பிரினை சந்தித்தார். Backrub என்னும் ஆய்விற்காக செர்கே பிரினுடன் இணைந்து, தனது முதல் புராஜெக்டை செய்தார். இன்றைய கூகுளின் அடிப்படை இந்த ஆய்வுதான். பின்னர் கூகுள் தேடியந்திரத்தை இருவரும் இணைந்து உருவாக்கினர். வழக்கம் போலவே ஆரம்பத்தில் பெரிய பாய்ச்சல்கள் எதுவும் இல்லாமல், கலிபோர்னியாவின் சிறிய அறை ஒன்றில்தான் கூகுளையும் துவக்கினர். பின்னர் அலுவலகம் பெரிதானது. கூகுளின் சேவை பலருக்கும் பிடித்துப்போக, சர்ச் இன்ஜினாக கூகுள் வெளிச்சம் பெறத்துவங்கியது. சர்ச் இன்ஜினாக சொல்லி அடித்தது கூகுள். பிறகு புதிய புதிய சேவைகள், மொழிகள் என இன்று வரை அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கிறது கூகுள். நிகழ்காலத்தின் தேவைகளை மட்டும் தருவது மட்டும், சிறந்த கம்பெனியின் வேலையல்ல. எதிர்காலத்தையும் கணிக்க வேண்டிய, அவசியம் அவர்களுக்கு இருக்கிறது என்பதே லாரியின் பிசினஸ் சீக்ரட். கூகுளின் மந்திரமும் கூட!

பில் கேட்ஸ்:

கணினி வரலாற்றில் தவிர்க்க முடியாத நாயகன். ஆனால் நமக்கு அதிகம் இவரைத் தெரிந்தது எல்லாம், உலகின்  நம்பர் 1 பணக்காரராகத்தான். "நீங்கள் வெற்றியைக் கொண்டாடுவது மிக முக்கியம்தான். ஆனால் அதை விட முக்கியம் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது" "வெற்றி என்பது மோசமான ஆசிரியர். அது புத்திசாலிகளை கூட, இனி தோல்வியே அற்றவர் என நினைக்க வைத்துவிடும்" "ஒரு கடினமான, வேலையை செய்ய, நான் ஒரு சோம்பேறியைத்தான் தேர்ந்தெடுப்பேன். கடினமான வேலையை எப்படி எளிதாக முடிப்பது என அவனுக்குத்தான் தெரியும்" "உலகத்தில் யாருடனும் உங்களை ஒப்பிடாதீர்கள். அதனை நீங்கள் செய்தால், உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கொள்கிறீர்கள் என அர்த்தம்"

"வெற்றி பெறுவதற்கு தோல்விகள்தான் முதல் படி. ஆனால், முதல்முறையே தோற்றுவிட்டால், கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் உங்கள் முயற்சிகளை கைவிடாமல், உழைத்தால் அந்த தோல்விகளையே வெற்றிகளாக மாற்றும், சூட்சுமம் உங்களுக்கு தெரிந்துவிடும்" மேலே சொன்ன அனைத்துமே பில் கேட்ஸ் எங்கோ, எப்போதோ பேசிய வெற்றி மொழிகள். ஆனால் கொஞ்சம் கவனியுங்கள். உலகின் வெற்றிகரமான மனிதர் பில்கேட்ஸ்தான், தோல்விகளை இத்தனை பரிமாணங்களில் கொண்டாடுகிறார். நாம் நெகட்டிவ்வாக நினைக்கும் விஷயங்களில்தான் ஒளிந்திருக்கிறது பில் கேட்ஸின் இத்தனை பாசிட்டிவ் எனர்ஜி.

பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம்:

பல பில்லினர்கள் கல்லூரிப் படிப்பே முழுதாக முடிக்காதவர்தான் பிரையன் ஆக்டனும். (என்னே ஒற்றுமை..!) பின்னர் மென்பொருள் பொறியாளராக மாறி, யாகூவில் வேலை செய்கிறார் ஆக்டன். திருப்தி இல்லை. ட்விட்டருக்கு வேலை கேட்டு அப்ளை செய்கிறார். ரிஜெக்ட் செய்கிறது ட்விட்டர். அப்படியே ஃபேஸ்புக் நிறுவனத்திற்கும் விண்ணப்பிக்கிறார் ஆக்டன். ஃபேஸ்புக்கும் வேலை மறுக்கிறது. ஆனால் கொஞ்சமும் துவழ வில்லை ஆக்டன். ஆப்ஸ்களுக்கான தேவை வருங்காலத்தில் அதிகம் இருப்பதாக உணர்ந்து கொள்கிறார். 2009-ல் ஜேன் கோமுடன் இணைந்து வாட்ஸ்அப்பை உருவாக்குகின்றனர். வாட்ஸ்அப் வதந்தி போல, வாட்ஸ்அப்பின் பயன்பாடும் வேகமாக பரவியது. இதன் தேவை உணர்ந்து இறுதியில் 19 பில்லியன் டாலர் கொடுத்து, வாட்ஸ்அப்பை வளைத்தது ஃபேஸ்புக். ஒரு குட்டி சினிமாவுக்கான திரைக்கதை போல, முன்பாதி தோல்வி, பின்பாதி பிரம்மாண்ட வெற்றி என தற்போது கெத்தாக வலம் வருகின்றனர் இருவரும்.

மேலே நாம் பார்த்த அனைத்து டெக்கீஸ்களுக்குப் பின்னாலும் இருப்பது வேறு எந்த மாயாஜாலமும் இல்லை. நிச்சயம் தோல்விகள்தான். தங்களது முயற்சியில், தொழிலில், வாழ்க்கையில் என எல்லா இடங்களிலும் சந்தித்த சறுக்கல்களும், சிக்கல்களுமே அவர்களை செதுக்கியிருக்கிறது. சந்தித்த எல்லா சிக்கல்களையும், சிந்தனைகளால் தூக்கி எறிந்த இவர்களின் அதே 'கெத்து' உங்களிடமும் இருக்கட்டும் ப்ரோ..#HappyTechiesDay

- ஞா.சுதாகர்.

0 கருத்துரைகள்:

Post a Comment