Header Ads



வடக்கு முஸ்லிம்களது வாழ்க்கை - வரிகளால் மட்டும் வரைய முடியாத, வலிகளின் காப்பியம்

இடம்பெயர்ந்து இந்த மாதத்துடன் சுமார் இருபத்தாறு வருடங்கள் பூர்த்தியாகவிருக்கின்ற வடக்கு முஸ்லிம்களது வாழ்க்கையானது வரிகளால் மட்டும் வரைந்து தெளிவூட்ட முடியாத வலிகளின் காப்பியமாகும். சிலபேர் அவற்றைக் கொண்டு வாழ்ந்தார்கள். பலபேர் வாழ்ந்து தாழ்ந்தார்கள்.

1990 களில் வடக்கிலிருந்து பலவந்தமாக தாய்பூமியை விட்டு துரத்தப்பட்ட எனது உறவுகளின் வாழ்க்கை வட்டம் அன்றாட உணவுத் தேவைகளுடன் மாத்திரம் முடக்கப்பட்டது. ஒவ்வொரு பெற்றோரும் தன்னை நம்பி இருக்கும் குடும்பத்திற்கு அடுத்தவேளை உணவை எவ்வாறு கொடுப்பதென்ற நோக்கிலே வாழ்ந்தார்கள்.

தலைகுனிவுகள், தாழ்வுமனப்பான்மைகள் அனைத்தும் சுக்கு நூறாகிப் போன தருணங்கள் இன்னுமே ஆறாத ரணங்களாக அவ்வப்போது வந்து செல்கிறது. பிரேமாதாசாவின் அன்றைய அரசாங்கமும் அதன்பிறகு ஆட்சிபீடமேறிய சந்திரிக்கா அம்மையாரின் அரசாங்கமும் மாதாந்தம் வழங்கிய ரேஷன் உணவுத்திட்டமே சில குடும்பங்கள் தற்கொலை செய்யாமல் இன்னும் உயிரோடு வாழ்வதற்கு வழிசமைத்தது.

ஒவ்வொரு மாதமும் குடும்பம் சகிதம் வழங்கக் கூடிய இந்த ரேஷன் அரிசியை உண்டு வாழ்ந்தவர்கள் அதன் மூலம் தன்மானம் காத்தவர்கள் இன்று எத்தனையோ பேர் அதனை மறந்து சுவனத்திலிருந்து குதித்தவர்கள் போல துள்ளிக்குதிக்கின்றார்கள். தப்பான தம்பட்டங்கள் வாழ்க்கையின் கேவலத்தை சில போது உணர்த்திவிடும்.

நாங்கள் வடபுலத்திலிருந்து இடம்பெயரவில்லையெனில் அவ்வாறு இருந்திருப்போம். இவ்வாறு இருந்திருப்போம் எனக் கூறிக்கொண்டு திரிபவர்கள் இறைவனை மறந்து விட்டார்கள். புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டியடிப்பு செய்யப்பட்டதால் பாதகங்களை மாத்திரம் குறித்துக் காட்டும் சமூகம் சாதக நிலைப்பாடுகளை மறந்து மறைத்து விடுகிறார்கள்.

புலிகளால் வடமாகண முஸ்லிம்கள் விரட்டியடிப்பு செய்யப்படும் முன்னர் இருந்த சமூக கல்வி கலாச்சார மற்றும் பண்பாட்டு ரீதியான கட்டமைப்புகளுக்கும் இன்று எமது சமூகம் மாற்றமடைந்துள்ள சமூக கல்வி கலாச்சார மற்றும் பண்பாட்டு ரீதியான கட்டமைப்புகளுக்கும் எவ்வளவு வேறுபாடுகளும் மாற்றங்களும் முன்னேற்றங்களும் விரிசலைந்துள்ளன என்பதை சாதாரண நிலைப்பாட்டுடன் சிந்தித்தாலே புரிந்து விடும்.

எனவே ஒருசிலரது தவறான நிலைப்பாடுகளும் தற்பெருமையான வாழ்க்கை வதட்டல்களும் பழைய வாழ்க்கையை சிந்தித்தவாறும் வந்தவழியினை எந்த நிலையிலும் மறவாதவாறும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இறைவன் ஒரு நபருக்கோ ஒரு சமூகத்திற்கோ கஷ்டத்தை கொடுக்க நாடினால் அதன்பிறகான வாழ்க்கையை மிகவும் இலேசாக்குவான் என்பதை இறை வார்தைகளின் மூலம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வடக்கு முஸ்லிம்களது மீள்குடியேற்ற வேலைத்திட்டங்கள் அரைகுறை வெங்காயமாக உரித்தும் உரிக்காமலும் இருக்கின்ற இந்தநிலையில் இறைவனின் பேருதவியுடன் எவருடைய இழிச்சொல்லுக்கும் ஆளாகாமல் தன் வயிற்றை தானே உழைத்து உண்டு நிரப்பும் சமூகமாக வடபுல சமூகம் இருப்பதென்பது இறந்து கிடந்த தரிசல் நிலம் மழையின்றி செழித்தோங்கியதற்கு சமனாகும்.
அல்ஹம்துலில்லாஹ்.........

- அனீஸ் அலி முஹம்மத் 
(அகதியின் மகன்)

No comments

Powered by Blogger.