Header Ads



தமிழ் தலைமைகள் மீதும், வடமாகாண சபை மீதும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் குற்றச்சாட்டு

-பாறுக் ஷிஹான்-

எந்த தரப்பாலும்   எமக்கு  அரசியல் முக்கியத்துவம் சரியான முறையில்  வழங்கப்படவில்லை என யாழ் மாவட்ட முஸ்லிம் ஜக்கிய மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

பெரிய முஹீயத்தீன் ஜும்மா பள்ளிவாசலில் இன்று(28) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது மேற்கண்டவாறு தமது கருத்துக்களை ஊடகங்களிற்கு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தங்களது கருத்தில்

'1990 ஒக்டோபர் 30' நினைவு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 திகதியுடன்  26 வருடங்கள் நிறைவடைவதை குறிக்கும் முகமாக யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புகள் என்ற ரீதியில் இந்த நிகழ்வு அமைகின்றது.

இலங்கையின் வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் ஆயுதமுனையில் அடக்கு முறைக்குள்ளாகி பலவந்தமாக முற்று முழுதாக வெளியேற்றப்பட்டு இவ்வருடம் ஒக்டோபர் மாதமாகிய இம் மாதம் 30ம் திகதியுடன் 26 வருடங்கள் முடிவடைகின்றது. புலிகள் அமைப்பினால் வடமாகாண முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்பு நிகழ்த்தப்பட்டு இப்போது இரண்டரை சகாப்தங்களையும் கடந்துஎங்களில் புதிய மூன்றாவது சந்ததிகளும் உருவாகிவிட்டனர்.

இச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்ட அந்தக்  கனத்திலிருந்து இன்று வரை உள்நாட்டு அளவிலும் சர்வதேச ரீதியிலும் இந்தக் கொடும் நிகழ்விற்கு உரிய அரசியல் முக்கியத்துவம் சரியான முறையில் வழங்கப்படவில்லை.

துன்பவியல் சம்பவம்  தவிர்ந்திருக்கவேண்டிய சம்பவங்கள்  கவலைக்குரியநிகழ்வுகள்  தீயசக்திகளின் சதிநடவடிக்கைகள்  போன்ற சொற்  பிரயோகங்களுக்குள்  வடமாகாண முஸ்லிம்களின்  மீதான  இனச்  சுத்திகரிப்பும் பலவந்த வெளியேற்ற நடவடிக்கைகளும்திட்டமிட்டு மறைக்கப்பட்டு வந்திருக்கின்றன என்று நினைக்கும் அளவிற்குத்தான் தற்போது யாழ்ப்பாணம் மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்ற நகர்வுகள் நிருபித்துக்கொண்டிருக்கின்றன.

யாழ் மாவட்ட முஸ்லிம்மக்கள், தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மீள்குடியேறி வாழ்வதற்காக வந்துள்ளனர், வருகின்றனர். வருவதற்கு எதிர்பார்த்துள்ளனர். எனினும் முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தைப் பற்றி மேற்கூறியவார்த்தைகளெல்லாம் கூறி முஸ்லிம்களை அமைதிப்படுத்திய தமிழ்,சமய,சமூக அரசியல் தலைமைகள்  யாழ் மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் அக்கறையற்றிருப்பதும் அம் மக்களின் நலன்களில் தேவைகளில் அலட்சியமாக இருப்பதும் யாழ் மாவட்ட முஸ்லிம்களைஆழாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதுவரையில் இத் தலைமைகள் யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்தில் செய்த காத்திரமான பங்களிப்புத்தான் என்ன?

பாரம்பரியமாக, பெரும் விருட்சை ஆழரமாக சகல சௌபாக்கியத்துடனும், வளமுடன் வாழ்ந்த யாழ் மாவட்ட முஸ்லிம்களை ஆணிவேருடன் சாய்த்து பிடுங்கி எறிந்து விட்ட நிலையில் தற்போது தங்களது சொந்த தாயக மண்ணுக்கு நம்பிக்கையுடன் மீள் வரும் போது யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் எவ்வாறு இங்குள்ள மேற்கூறிய தலைமைகளினால் வரவேற்கப்பட வேண்டும்? எவ்வாறு அழிந்து சின்னாபின்னமாகியுள்ள இம் மக்கள் வாழ்ந்தபிரதேசங்கள்,வீடுகள்,கடைகள்,சொத்துக்களை பொது உடைமைகளை மீளப் பெறுவதிலும்,புனர்வாழ்வு,புனர் நிர்மாணம்,வேலைத்திட்டங்கள் நடைபெற்றிருக்கவேண்டும்?  ஆனால் இங்கு என்ன நடக்கின்றது. இத் திட்டவேலைகளில் மேற் கூறியதலைமைகள் எவ்வளவு தூரம் ஈடுபாட்டினைக் காட்டியுள்ளார்கள்?

யாழ் மாவட்டத்திருந்து ஏறக்குறைய 3417குடும்பங்கள்  1990 ஒக்டோபரில் வெளியேற்றப்பட்டனர்.  தற்போது இக் குடும்பங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக சாதாரணமாகப் பெருகியுள்ளது. இம் மக்கள் தங்கள் சொந்த மண்ணுக்கு உரிமையுடன் வரும் பொழுது இவர்களுக்குரிய காணி,வீடு,வாழ்வாதாரம், உட் கட்டுமானம், இவ் வேலைத்திட்டங்கள் மேற் கொள்ளப்பட வேண்டும் இதனை இங்கு உறுதிப்படுத்த வேண்டியது உண்மையில் யார்?

புலிகள் முஸ்லிம்களை  இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் இதனால் யாழ் மாவட்ட முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டது, இப்பொழுது புலிகள் அமைப்பு இல்லை. தற்காலத்தில் யாழ்மாவட்ட முஸ்லிம் மக்கள் மீள்குடியமர்வதற்காக வந்துகொண்டிருக்கிறார்கள் இவர்களது தேவைகளை நிறைவேற்றுவது யாழ் மாவட்டத்தின் அரசியல் சமூகதலைவர்களின் பொறுப்பாகும். குறிப்பாக வடக்கு மாகாண சபை இம்மக்களின் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் ஆனால் யாழ்மாவட்ட முஸ்லிம்கள் விடயத்தில் வடமாகாணசபை விசேடமாக எவ்விதநடவடிக்கைகளையும்  முன்னெடுக்கவில்லை. 

எனவேதான் இச் சந்தர்ப்பத்தில் யாழ் மாவட்ட முஸ்லிம்கள் மீளத்திரும்புவதில் உண்மையான  அக்கறையும் விருப்பமும் யாழ்மாவட்ட சமய, சமூக பிரமுகர்களுக்கும் இருக்குமாயின் தங்களுடைய சொந்த மண்ணுக்கு திரும்பிவரும் முஸ்லிம்களுக்கு நீங்கள் உங்கள் ஆதரவுக்கரங்களை நீட்டி எங்களையும்உங்களுடன் இணைத்து அரவணைக்க வேண்டும். இதனைத்தான் யாழ் மாவட்ட முஸ்லிம்களின் 26 வருடங்கள் கழிந்திருக்கும் இச் சந்தர்ப்பத்தில் உங்களிடம் உருக்கமாக வேண்டி நிற்கின்றோம்.

எங்களுடைய மீள் குடியேற்றத்தில் பல்வேறு சவால்களையும்பிரச்சினைகளையும்நாங்கள்  எதிர்நோக்குகின்றோம். அவற்றை எங்களுடன் இருந்து அடையப்படுத்துங்கள். நீங்கள் கண்டறியும் இப் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு எங்களுக்கு முழுமையாகஉதவுங்கள். உங்கள் பங்களிப்புக்களைச் செய்யுங்கள்.

நாங்கள்  வெறுமனே உங்கள் அனுதாபவார்த்தைகளை எதிர் பார்க்கவில்லை. யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகச் சிறுபான்மைச் சமூகமாகவாழும் இம் முஸ்லிம் மக்களை நீங்கள் எவ்வாறு நடத்துகின்றீர்கள் என்பதுதான் உங்களுடைய அரசியல் அபிலாஷகளை நீங்கள் வெற்றிபெறுவது தங்கியுள்ளது என நாம் கருதுகின்றோம்.

எனவே தற்போது யாழ் மாவட்டத்தில் முஸ்லிம் மக்களை மீள் குடியேறச் செய்வதில் உங்கள் பணி என்ன? எவ்வாறு எங்களுக்கு நீங்கள் உதவப் போகின்றீர்கள் என்பதே உங்களை நம்பி மீள்குடியேறவரும் முஸ்லிம் மக்களின் கேள்விகளாகும். இந்த விண்ணப்பத்தை இச் சந்தர்ப்பத்தில் தாங்கள் முன் வைக்கின்றோம். இதற்கான பதிலை யாழ் மாவட்ட தமிழ் சமூகத்திடமிருந்து எதிர் பார்க்கின்றோம் என வேண்டுகோள் விடுத்தனர்.

மேற்குறித்த செய்தியாளர் மாநாட்டில் அரசியல் பிரதிநிதிகள்,பள்ளிவாசல் நிர்வாகிகள்,பொது அமைப்பின் பிரதிநிதிகள் இணைந்து யாழ் மாவட்ட முஸ்லீம் ஐக்கிய மக்கள் பிரதிநிதிகள் என்றஅமைப்பில் கலந்த கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.