Header Ads



உயிரை விடவா, ஐபோன் முக்கியம்..?

இன்றைய இளைஞர்கள் மத்தியில்  அண்மைக்காலமாக ஐபோன் மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. செல்பி மரணங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், செல்போன் மீதான மோகம் அதிகரித்திருப்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக, விலை உயர்ந்த செல்போன் தவறி விழுந்து விட்டதை ஏற்க மனமில்லாமல், ஓடும் ரயிலில் இருந்து வெளியே குதித்து பலத்த காயம் அடைந்துள்ளார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் ஒருவர்.

சித்தூர் மாவட்டம் புத்தூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருபவர் ரவி தேஜா சௌத்ரி. அக்டோபர் 20-ம் தேதி வியாழக்கிழமை காலை இவர் வேங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார் . பயணத்தின்போது தனது அலைபேசியில் பேசிக் கொண்டே சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக ரவி தேஜாவின் கையிலிருந்த விலையுயர்ந்த ஐபோன் தவறி ரயிலுக்கு வெளியே விழுந்துள்ளது. அதை எடுப்பதற்காக, சற்றும் யோசிக்காமல் ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார் ரவி தேஜா. இதனைப் பார்த்த ரயிலில் பயணம் செய்த மக்கள், 108-க்கு தகவல் தெரிவித்தனர். 

ரயிலில் இருந்து குதித்த அவருக்கு தலை மற்றும் முதுகுத்தண்டில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்காக அவரை, கடப்பா மாவட்டம் கோடூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதித்தனர்.  பின்னர் அங்கிருந்து  தீவிர சிகிச்சைக்காக திருப்பதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரவி தேஜாவின் பெற்றோர் குவைத்தில் வேலை செய்வதாகவும், ரயிலில் இருந்து கைதவறி விழுந்த ஐபோனை எடுப்பதற்காகத்தான் அவர் ரயிலில் இருந்து குதித்ததாகவும் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேபோல், சில மாதங்களுக்கு முன்பு, ரயில்வே தண்டவாளத்தில் நின்று கொண்டு செல்பி எடுத்த இரண்டு நண்பர்களில் ஒருவர் ரயில்மோதி பலியானார். கர்னூல் மாவட்டம் நெரவாடா மெட்டா பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நின்றுகொண்டு, ரயில் வரும்போது செல்பி எடுக்க வேண்டும் என முடிவு செய்து நின்றிருந்தனர் நண்பர்கள். ஆனால், ரயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்ததைப் பார்த்த ஒருவர், தண்டவாளத்தில் இருந்து ஒதுங்கியுள்ளார். மற்றொருவர் ரயில் வருவதைக் கவனிக்காமல், ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

செல்போன் என்பது பேசுவதற்கும், தகவல் பரிமாற்றத்துக்கும் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதன் தொழில்நுட்ப வளர்ச்சி மக்களை, செல்போன்களுக்கு அடிமை ஆக்கியுள்ளது. இதனால் அவ்வப்போது தொடர் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. செல்ஃபியால் ஏற்படும் கவனக்குறைவு மரணங்கள், அளவில்லாமல் சென்று கொண்டிருக்கின்றன. மேலும், விலை உயர்ந்த செல்போன் வைத்திருந்தால் தான், மற்றவர்கள் மத்தியில் நமக்கு மதிப்பு என்ற எண்ணம் முதலில் மாற வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி நம்முடைய அறிவை வளர்க்க உதவ வேண்டுமே தவிர, நம் வாழ்க்கையை அழித்து விடும் நிலையை ஏற்படுத்தக் கூடாது. செல்போன், லேப்-டாப் போன்றவற்றில் எப்போதும் மூழ்கிக் கிடப்பதை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு, இயற்கையோடும், குடும்ப உறவுகளுடனும்  சில மணி நேரத்தை செலவிட முயற்சியுங்கள்.

No comments

Powered by Blogger.