Header Ads



வசீம் தாஜுதீனின் உடற்பாகங்களைத் தேடி வேட்டை - 26 எலும்புக்கூடுகளுடன் திரும்பிய CID

பிரபல றக்பி விளையாட்டு விரர் வசீம் தாஜுதீனின் காணாமற்போன உடற்பாகங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக, மாலபேயிலுள்ள சைட்டம் (SAITM) தனியார் மருத்துவக் கல்லூரிக்கு நேற்றுத் திங்கட்கிழமை (03) சென்ற குற்றப்புலனாய்வுப் பிரிவினர், அங்கிருந்து 26 எலும்புக்கூடுகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

தாஜுதீனின் முதலாவது பிரேத பரிசோதனை, கொழும்பு சட்ட வைத்தியப் பிரிவின் முன்னாள் அதிகாரி விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஆனந்த சமரசேகரவினாலேயே மேற்கொள்ளப்பட்டிருந்து. இவர் தற்போது, மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் துணைவேந்தராகக் கடமையாற்றி வருகின்றார். இந்நிலையில், காணாமற்போன உடற்பாகங்கள், மேற்படி கல்லூரியின் ஆய்வுகூடத்திலே வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்திருந்தன.

குறித்த கல்லூரியில் தேடுதல் நடத்துவதற்கான அனுமதியினை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்றுப் பெற்றுக்கொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர், அங்கு சென்று நடத்திய தேடுதல் நடவடிக்கையை அடுத்தே, 26 எலும்புக்கூடுகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

எவ்வாறாயினும், அவர்களால் எடுத்துச் செல்லப்பட்ட எலும்புக்கூடுகள், யாருடையது என்பது குறித்து, இதுவரையில் பரிசோதனை நடத்தப்படவில்லை என்று கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், அங்கு தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர், அங்கு கடமையாற்றும் ஊழியர்களிடம் வாக்குமூலங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இது தொடர்பாக SAITM தனியார் மருத்துவக்கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி டொக்டர் ரேணுக சமீர சேனாரத்ன, கருத்துத் தெரிவிக்கையில், உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றே தெரிவித்தார்.

“இங்கு கல்வி கற்றும் மருத்துவபீட மாணவர்களுக்கு இவ்வாறானவற்றையும் ஒரு பாடமாக நாம் கற்பிக்கின்றோம். இங்கு வந்து சோதனையிட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் எந்தவோர் உடற்பாகங்களையும் கண்டுபிடிக்கவில்லை. இவ்வாறு சோதனைக்காக இங்கு கொண்டுவரப்படும் உடற்பாகங்களை இங்கு வைத்திருப்பதற்கு, நாம் சட்டரீதியான அனுமதியைப் பெற்றுள்ளோம். சட்டவிரோதமான எந்தவொரு நடவடிக்கையும் இங்கு இடம்பெறாது. இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்றே நான் கூற விரும்புகின்றேன்” என்று தெரிவித்தார்.

தாஜுதீனின் உடற்பாகங்கள், சைட்டம்-இல் (SAITM) சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்திருந்தது. இதனையடுத்து, மேற்படி கல்லூரியைச் சோதனையிடுவதற்கான அனுமதியினை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர், நேற்று அக்கல்லூரிக்குச் சென்று, சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவர்களுடன், வைத்திய நிபுணர்கள் குழுவொன்றும் இணைந்து, சோதனையில் ஈடுபட்டிருந்தது. 

No comments

Powered by Blogger.