Header Ads



இலங்கை தொடர்பில் அல்-ஹூசைன் எதுவும் கூறவில்லை - காஷ்மீர் பற்றி வாய் திறந்தார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 33ஆவது அமர்வு நேற்று ஜெனீவாவில் ஆரம்பமானது. அமர்வை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல்-ஹூசைன் பல நாடுகளின் மனித உரிமைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தபோதும் இலங்கை தொடர்பில் எதுவும் கூறியிருக்கவில்லை. அயல்நாடான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் தொடர்பில் காணப்படும் பிரச்சினை குறித்து அல் ஹூசைன் தனது ஆரம்ப உரையில் பிரஸ்தாபித்திருந்தார்.

இரு தரப்பிலும் முன்வைக்கப்படும் பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கு சுயாதீனமான, பக்கச்சார்பற்ற சர்வதேச தூதுக்குழு சுதந்திரமாகவும், முழுமையாகவும் அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

'இந்திய நிர்வாகத்தில் உள்ள ஜம்மு மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் எல்லை பிரச்சினை தொடர்பில் ஆராய எனது அலுவலகத்திலிருந்து குழுவொன்றை அழைக்குமாறு இரண்டு மாதங்களுக்கு முன்னர் கோரியிருந்தேன். இந்திய அதிகாரிகள் பொது மக்களுக்கு எதிராக அதிகப்படியான அழுத்தங்களைப் பயன்படுத்துவதாக அறிக்கைகள் கூறுகின்றன.

இதனைவிட ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றஞ்சாட்டுகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா மனித உரிமைகள் குழுவொன்றை வருமாறு பாகிஸ்தான் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. எனினும் இந்திய அரசாங்கத்திடமிருந்து இன்னமும் உத்தியோகபூர்வ அழைப்பு கிடைக்கவில்லை. எனவே எல்லைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இரு நாட்டு அரசாங்கங்களும் நிபந்தனைகள் இன்றி அனுமதிக்க வேண்டும் என பகிரங்கமாகக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கான அனுமதியை மறுத்தல் மற்றும் தேவையற்ற பிரசாரங்களை முன்னெடுப்பதன் ஊடாக எந்தவொரு அரசாங்கமும் மனித உரிமை மீறல்களை மறைக்க முடியாது. அனுமதியை மறுக்கும் வகையிலான தேவையற்ற காலதாமதங்கள், நீயாயமற்ற முறையில் இழுக்கப்படும் பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட விடயங்கள் உண்மையை அறிவதற்கு மாற்று வழியை பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளிவிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

சில நாடுகள் எமது அலுவலகங்களை மூடலாம். ஆனால் அவர்கள் எம்மை மூடவோ அல்லது எமது கண்களைக் கட்டவோ முடியாது. மறுக்கப்படும் அனுமதியானது மோசமான குற்றச்சாட்டுக்கள் குறித்த அறிக்கைகளை விடுவிப்போம். இதற்காக செய்மதிப் புகைப்படங்கள், ஏனைய தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி இதனை தயாரிப்போம் எனவும் ஹூசைன் தனது ஆரம்ப உரையில் கூறினார். நேற்றையதினம் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33ஆவது அமர்வு எதிர்வரும் 30ஆம் திகதி வரை நடைபெறுகிறது. நாளையதினம் பலவந்த காணாமல் போதல்கள் தொடர்பான ஐ.நா செயற்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதில் இலங்கை குறித்த அறிக்கையும் உள்ளடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.