Header Ads



SLMC தலைமை வாய்மூடி மௌனம் - கிழக்கு முஸ்லிம்கள் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள் - ஜெமீல்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கிழக்கின் எழுச்சி என்பது பிரதேசவாத நோக்கம் கொண்ட ஒரு சிந்தனையல்ல, அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை நம்பி ஏமாந்த மக்களின் உண்மையான உணர்வலையாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி. ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வை.எம்.எம்.ஏ.மண்டபத்தில் முஸ்லிம் மீடியா போரம் தலைவர்  என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்ற எம்.எம்.எம்.நூறுல் ஹக்கின் "முஸ்லிம் அரசியலின் இயலாமை" எனும் நூல் வெளியீட்டு விழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இவ்விழாவில் மேலும் பேசுகையில் கூறியதாவது;

"கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஒருபோதும் பிரதேசவாத சிந்தனை கொண்டவர்களாக இருந்ததில்லை. முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் மரணித்த பின்னர் தென்னிலங்கையை சேர்ந்த ரவூப் ஹக்கீம், கிழக்கு முஸ்லிம்களின் ஏகமனதாக அங்கீகாரத்துடன் தலைவராக்கப்பட்டதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அப்படி எந்த விதமான தனிப்பட்ட எதிர்பார்ப்புமின்றி தலைவராக்கப்பட்ட ரவூப் ஹக்கீமை கடந்த ஒன்றரை தசாப்த காலமாக தமது சமூகத் தலைவனாக ஏற்றிருந்த கிழக்கு முஸ்லிம்கள், அவர் இந்த சமூகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்பதையும் சமூக நலன் சார்ந்த விடயங்களில் அத்தலைமைக்கு எவ்வித கரிசனையும் கிடையாது என்பதையம் உணர்ந்ததன் வெளிப்பாடே கிழக்கின் எழுச்சியாக உருவெடுத்திருக்கிறது. அந்த உணர்வலையை எவரும் குறைத்து மதிப்பிட்டு மலினப்படுத்தி விட முடியாது.

முஸ்லிம் சமூகத்திற்கான தலைமை என்பது நாட்டின் எந்த மூலை முடுக்கில் இருந்தும் உருவாகலாம். அது கிழக்கில் இருந்துதான் வர வேண்டும் என்று கிழக்கு மக்கள் கோஷமிடவில்லை. சமூகத்தின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதிப்படுத்துவதில் ரவூப் ஹக்கீமின் இயலாமை வெளிப்பட்டுள்ளதன் எதிரொலிதான் கிழக்கின் எழுச்சி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எமது மூத்த எழுத்தாளர், சமூக ஆய்வாளர் எழுதியுள்ள முஸ்லிம் அரசியலின் இயலாமை எனும் நூல் அதனையே பறைசாற்றுகின்றது.

இன்று வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒற்றைக்காலில் நிற்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதைத்தான் வலியுறுத்துகின்றது. அதற்கான முஸ்தீபுகள் திரைமறைவில் நகர்த்தப்பட்டு வருகின்றன. ஆனால் இது விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வாய் மூடி மௌனியாக இருக்கிறது. ஏன் இந்த இயலாமை. இந்த ஆபத்தை உணர்ந்தே கிழக்கு முஸ்லிம்கள் இன்று கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அபாயகரமான சூழ்நிலையில் இருந்து முஸ்லிமகளை காப்பாற்றுவது எப்படி? எமது அடுத்த சந்ததியினரின் எதிர்காலம் என்ன என்பன தொடர்பில் கிழக்கு மாகாணத்திலுள்ள சிவில் சமூக அமைப்புகள் சிந்திக்க தொடங்கியுள்ளன.

வடக்கையும் கிழக்கையும் மீள இணைக்கச் சொல்வதற்கு விக்னேஸ்வரனுக்கு எந்த அருகதையும் கிடையாது. கிழக்கு முஸ்லிம்களின் தலைவிதியை அவர் தீர்மானிக்க முடியாது. இது விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் அதன் தலைவர் ரிஷாத் பதியுதீனும் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதுடன் அது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றார்" என்று கலாநிதி ஜெமீல் குறிப்பிட்டார்.

3 comments:

  1. வடகிழக்கு இணைப்பு குதிரை கொம்புதான் இரவில் விழுந்த குழியில் பகலில் எந்த புத்திசாலியும் விழமாட்டான்,விக்னேஸ்வரன் அவர்கள் முஸ்லிம்களை இடைபோட்டிருப்பது தப்பு தானும் தன்னை சார்ந்த சமுகமும் புத்திசாலிகள் மற்றவர்கள் மடையர்கள் என்று மனப்பால் குடிக்கிறார் தமிழ் மக்களுக்கு சாதாரணமாக கிடைக்கிறதும் கிடைக்காமல் செய்யும் பணியில் இவர் இறங்கிள்ளார்,1.வடகிழக்கு இணைப்பை கிழக்கு மாகாண அதிகமான தமிழ் மக்கள்ஏற்றுக்கொள்ளவில்லை 2 முஸ்லிம்கள்யாரும் விரும்பவில்லை 3 சிங்கள மக்கள் அறவே விரும்பவில்லை ,இந்த பேச்சுக்கே இடம் இல்லை என்று சொல்வதோடு நாட்டை இரண்டாக பிரிக்க முயற்சிப்பதாக தினமும் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்

    ReplyDelete
  2. Communal minded Vicky wants to become CM in next election.

    That is why he is barking here and there.

    No one cares.

    ReplyDelete
  3. தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் ரஊப் ஹகீம் தலைவராக வந்ததற்கு கிழக்கிலுள்ள அனைத்து முஸ்லிம்களினதும் ஏகமனதான தீர்மானமே காரணமென்பதே முதல் தவறு. தலைவரின் மனைவி பேரியல் முதல் தே.கா தலைவர் அதாவுல்லா வரை பலர் தலைவராக வந்துவிடவேன்டுமென பல கூட்டுச் சதிகளில் ஈடுபட்டது உங்களுக்குத் தெரியாத (?) நிதர்சனமான உண்மை.
    மேலும் உள சுத்தியோடு முஸ்லிம் காங்கிரஸில் இணைந்திருந்த கிழக்கின் அரசியல்வாதிகளும் மிகச் சிலரே.
    எஸ்.எஸ் பி மஜீட்,சேகு இஸ்ஸதீன்.உவைஸ்,பைசால் காசிம்,ஹரீஸ்,நிஜாமுடீன்,சிராஸ் மீராசாகிப்,அப்துல் றஸ்ஸாக்,அன்வர் இஸ்மாயில்,நௌஷாட்,தொப்பி முகைடீன் முதல் தற்போது பதவியின் அதிகாரம் குறைக்கப்பட்டதால் சகிக்கமுடியாமல் கிழக்கின் எழுட்சியெனும் மண்குதிரையில் 'மறைமுகப் பயணம்' செய்யும் ஹசனலி வரை யாரும் கட்சிக்காகவே மக்களுக்காகவே முஸ்லிம் காங்கிரசில் இணைந்திருக்கவில்லை.ஜெமீலாகிய நீங்கள் உட்பட அனைவருமே தம் பதவி நலனுக்காகவே அனைத்தையும் செய்தீர்கள். அதில் குறைகள் வரும்போது ஏதோ மக்களுக்கான புரட்சியாளர்களைப்போல் பாசாங்கு செய்துகொண்டு பதவியைப்பெறுவதற்கான அடுத்த நகர்வுகளை போலிப் புரட்சிகளின் மூலமும் கட்சி தாவல்கள் மூலமும் ஆரம்பிக்கின்றீர்கள். உங்களைப் பொறுத்தவரை முஸ்லிம் காங்கிரஸ் உங்களுக்கு பதவிகளும் அதிகாரங்களும் வழங்கும்வரை அது மக்களுக்கான கட்சி என்பீர்கள். அப்பதவிகளில், அதிகாரங்களில் குறைகள் வந்துவிட்டால் மக்கள் விரோதக் கட்சியென்பீர்.
    அத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் என்பது ரஊப் ஹகீமின் தாயாதிச் சொத்தும் அல்ல. அவர் கட்சிசிக்கும் மக்களுக்கும் துரோகம் செய்கின்றார் என்றால் உள்ளேயிருந்தே உங்கள் போராட்டத்தை ஒரு கட்டுக்கோப்பாக ஒருங்கிணைத்து போராடியிருக்கலாம்.
    எனவே இந்தப் போலிப் போராட்டங்களே பதவிக்கும் அதிகாரத்திற்குமான சில முன்னால் அதிகாரவர்கத்தின் போராட்டங்களேதவிர கிழக்கு முஸ்லிம் களுக்கான போராட்டமல்ல.

    ReplyDelete

Powered by Blogger.