August 16, 2016

தாறுஸ்ஸலாமை எந்த ஒரு, தனிநபரும் கையகப்படுத்தவில்லை – ஹரீஸ்

(அகமட் எஸ். முகைடீன், ஹாசீப் யாசீன்)

முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாறுஸ்ஸலாமை எந்த ஒரு தனிநபரும் கையகப்படுத்தவில்லை. அது கட்சியின் தலைமையகமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என ஸ்ரீ;லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். அதேவேளை அது கட்சிக்கு உரித்தானதாக காணப்படுகின்றபோது சிலர் வேண்டுமென்று கேள்வி கணக்கு கேட்டுக் கொண்டிருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ரீதியாக முன்னெடுத்துவரும் 'வீட்டுக்கு வீடு மரம்' செயற்திட்ட நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ஏ.எல்.ஏ.மஜீத் தலைமையில் சாய்ந்தமருதில் இடம்பெற்றது. இதில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் தொடர்ந்து பிரதி அமைச்சர் அங்கு உரையாற்றுகையில்,

முஸ்லிம்களின் உரிமைக் குரலாக விளங்குகின்ற முஸ்லிம் காங்கிரஸினை அழிக்கும் கனவில் சிலர் வெற்றுக் கோசங்களை எழுப்புகின்றனர். அத்தோடு பிரதேச வாதக் கோசங்களை எழுப்புவதன் மூலம் இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்தினை வழிநடத்துகின்ற பாரிய பொறுப்பில் இருக்கின்ற ஸ்தாபனமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சீர்குலைக்க சில விசமிகள் முனைகின்றனர்.

எமது தலைமை மீது வீண் பளிகளையும் குற்றச்சாட்டுகளையும் சுமத்துவதன் ஊடாகவும் தலைமைக்கு எதிராக கட்சிக்குள் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கின்றது என்று ஊடகங்கள் வாயிலாக செய்திகளை பரப்புவதன் மூலமாகவும் கட்சியை பலவீனப்படுத்த சிலர் முனைகின்றனர். அவர்களது இந்த செயற்பாடு மக்கள் மத்தியில் எந்தவித மாற்றத்தையோ தாக்கத்தையோ ஏற்படுத்தப் போவதில்லை.

தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவுக்கு பின்னர் தற்போதுள்ள தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களின் தலைமைத்துவ பண்புகள், ஆளுமை மற்றும் அவரது செயற்பாடுகள் மீது பெரும் நம்பிக்கையோடு கடந்த 16 வருட காலமாக நாங்கள் இருக்கின்றோம்.

இந்த சமூகத்தின் சகல செயற்பாடுகளிலும் அவர் முன்னின்று செயற்பட்டு வருகின்றார். அன்று பொதுபல சேனா போன்ற இயக்கங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக தலைவிரித்தாடிய போது சர்வதேசத்தின் அழுத்தத்தைக் கொண்டு மஹிந்த ராஜபக்ஷவை கடிவாலமிட்டது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை என்பதை மறந்துவிடக்கூடாது.

அதேபோன்று இன்றைய நல்லாட்சி அரசிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களுக்கான தீர்வு தொடர்பாக காத்திரமான பங்களிப்பினை மேற்கொன்டு வருகின்றபோது இந்த தலைமையை அசைக்க வேண்டும் என்பதற்காக காசு கொடுத்து முகப் புத்தகங்களில் இத்தலைமைக்கு எதிராக எழுதுவதன் ஊடாக முடியும் என்பது பகற்கனவாகும். ஏனென்றால் எமது போராளிகளும் மக்களும் மிகத் தெளிவாக இருக்கின்றார்கள்.

 கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமை எந்;த ஒரு தனிநபரும் கையகப்படுத்தவில்லை. அது கட்சியின் தலைமையகமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது, அதேவேளை அது கட்சிக்கு உரித்தானதாக காணப்படுகின்றபோது வேண்டுமென்று கேள்வி கணக்கு கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினை தனிப்பட்ட வகையில் பிடிக்காவிட்டால் அவர்கள் மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பள்ளிச் சொத்தை அபகரித்து விட்டார்கள் என்று அபாண்டமாக பளி சுமத்தி கணக்கு கேட்டு துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்படுவது போன்றதொரு நடவடிக்கையே இதுவாகும்.

தலைவருடைய ஆளுமை, கட்சியின் கட்டுக்கோப்பு, கட்சியின் செயற்பாடு போன்றவற்றில் குறைகான விளைந்தார்கள் ஆனால் அவற்றில் குறைகான முடியாத அளவுக்கு சிறப்பாக மக்களுக்கு வெளிப்படைத் தன்மையாக காணப்பட்டதனால் இன்று தாறுஸ்ஸலாம் பற்றி வீண் புறளியை கிளப்பி   விட்டுள்ளனர்;. இதன் மூலம் கட்சியினை சின்னாபின்னமாக்கலாம் என்று நினைக்கின்றனர். 

இலங்கையில் பெரும் தேசியக் கட்சியை வழி நடத்துகின்ற எமது தலைமை தாறுஸ்ஸலாம் போன்று பத்து தாறுஸ்ஸலாமை கட்டுவதற்கான பொருளாதாரத்தை கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு தேர்தல்கள் வருகின்ற போதும், கட்சி கூட்டங்கள் வருகின்ற போதும் நாங்கள் உண்டியல் குலுக்கி பணத்தை திரட்டி செலவு செய்யும் நிலை எமக்கிருக்கவில்லை. அத்தனை செலவுகளையும் இந்த தலைமை தனியாக இருந்து கொண்டு செய்கின்றது, இவ்வாறு கட்சிக்காக பாரிய செலவுகளை இந்த தலைமை செய்கின்றபோது வெட்கமில்லாமல் கட்சியை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக ஊடகங்களில் உளறிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் சமூகம் அவர்களது உரிமைக்காக தள்ளாத வயதில் இருக்கின்ற சம்பந்தன் ஐயா பின்னால் இருப்பது போன்று எமது முஸ்லிம் சமூகத்திற்கான உரிமையினை பெற்றெடுக்கக் கூடிய வல்லமை எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமுக்கு மாத்திரமே உண்டு என்பதை இந்த சமூகம் உணர்ந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் எனவும் தெரிவித்தார்.

1 கருத்துரைகள்:

ஹரீஸ், ஏற்கனவே தலைவர் அஷ்ரபின் மரம் எல்லோரினதும் வீட்டில் இருக்கிறது. அதன் நிழலில் தான் நீங்களும் உங்களது தலைவரும், சகாக்களும் ( அரசியல் வீரியமற்ற சுயநலவாதிகள் ) இத்தவரை சொந்த புளப்பு நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இப்ப என்ன கிழக்கின் எழுச்சி கண்டு பயந்து ஹக்கீமின் மரத்தை நாட்ட முட்பட்டுள்ளீர்கள். மிகவும் கஷ்டப்பட்டு விதை போட்டு வளர்த்த மரத்தை சுயநல கும்பல் பதவிக்காகவும் பணத்துக்காகவும் சாகடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

தாருஸலாம் கட்டிடம் முழுமையாக காங்கிரஸ் எனும் கட்டசிக்குரியதாக, தலைவர் அஸ்ரப் அவர்கள் மரணிக்கும் போது இருக்கவில்லை. அது தனி நபரின் அதிகாரத்தில் இருந்தது. அதில் சட்டரீதியான பிரச்சினை இருந்தது. எனவே இப்படி சும்மா அறிக்கை விடுவதன் மூலம் ஹக்கீமை திருப்தி படுத்தலாமே ஒழிய மக்களை அல்ல.

ஹரீஸ், அஸ்வர் எம்பி ராஜபக்சவுக்கு சார்பாக கதைப்பது போல் நீங்கள் ஹக்கீமை புகழ்ந்து தள்ளுகிறீர்கள்...!!!! ராஜபக்சவுக்கு கடிவாளம் விட்ட ஹக்கீம் அவர்கள் பிறகு ஏன் ராஜபக்சவை விட்டு ஓடோடி வந்தீர்கள். கேட்பவன் கேனப்பயல் என்றால் எருமைமாடு ஏறப்பிலேன் ஒட்டுது என்பானாம் என்பது போல் உள்ளது உங்கள் பேச்சி. கல்முனையில் அரசியல் விட்பனர்கள் இருந்தது தான் சரித்திரம். சாமரம் வீசுவார்கள் இருந்தது இல்லை. அது என்ன 16 வருட கணக்கு, அதாவுல்லாவுடன் சேர்ந்து நீங்கள் உளறும் ஹக்கீம் அவர்களின் காட்ச்சியை எதிர்த்து கேட்டதை சேர்த்தா?? சேர்க்காமலா?? சரியான அரசியல் தான் தெரியாது என்றால் கூட்டல் கழித்தலுமா தெரியாது???

ஹக்கீம் அவர்களின் தலைமைத்துவ பண்புகள் ஆளுமை மற்றும் செயட்பாடுகள் இதோ?

** தலைவர் அஸ்ரப் அவர்களால் கட்சி விடயங்களை ரணிலுடன் ரகசியமாக பகிர்ந்து கொண்டதால் கடுமையான கோபத்துக்குள்ளானவர். கட்சியில் இருந்து இடைநிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டவர். சந்திரிக்கா அமைச்சரவையில் இதே குற்றச்சாட்டுக்கு ஆளானவர். அதாவது நம்பிக்கை துரோகங்கள்.
** 18 வது, தெவிநுகம, கஸீனோ, சட்டவூலங்களுக்கு ஆதரவளித்தமை. முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து விடயங்கள் நடந்தேறும் போதும் நீதி அமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு சுகம் அனுபவித்தவர். இதை பல ராஜதந்திரிகள் சுட்டி காட்டியும் இருந்தார்கள். பதவிக்காக மதமும் மாறக் கூடியவர் என்ற குற்ற சாட்டும் உண்டு.

** ஒரு அரசியல் தெளிவின்மையால் முடிவுகள் எடுப்பதில் பெரும் தாமதம், வெளிப்படை தன்மை என்பது கடுகளவும் கிடையாது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்கு பதியும் மட்டும் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாறியது. தேசியப்பட்டியல் எம்பி பதவியை யாருக்கு கொடுப்பது என்று இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை. முஸ்லீம் காங்கிரஸ் இன்னமும் அரசியல் தீர்வில் தங்களது நிலை என்பது இன்னும் யாருக்கும் தெரியாது, ஹக்கீமுக்கு கூட..!!!! மிகவும் பலகீனமான பொறுப்பற்ற சுயநல தலைமை. இப்படி பல எழுதிக்கொண்டே போகலாம்.

ஹரீஸ், மதி கெட்டு ஹக்கீமின் பொருளாதாரம் பற்றி கதைத்துள்ளீர். அதுதான் நாங்களும் கேக்கிறோம் அந்த பணம் எப்படி கிடைத்தது??? புகாரிதீன் ஹாஜியாரிடம் சம்பிளத்துக்கு நின்றவர், அரசியலுக்குள் பிரவேசிக்கிறார். இப்போது பத்து தாருஸ்ஸலாம் கட்டுமளவு எப்படி பணம் வந்தது. நல்லாட்ச்சி இதை விசாரிக்க வேண்டும். இந்த காசிக்கித்தானே நீர் ஹக்கீமுக்கு சாமரம் வீசுகிறாய்.

நாங்கள் மிகவும் உறுதியாக நம்புகிறோம், கூறுகிறோம் தலைமையில் மாற்றம் தேவை அது தான் முஸ்லிம்களின் ஆரோக்கியமான அரசியல் பயணத்துக்கு முதல் படியாகும். இதட்காக புத்தி ஜீவிகள், சமூக பற்றுள்ள ஊடகவியலாளர்கள், பட்டதாரிகள், பல்கலை கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் முன்வரவேண்டும்.

Post a Comment