Header Ads



'வாழ்நாள் சாதனையாளர்' விருதுபெறும் வீரகத்தி தனபாலசிங்கம்

இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து 17 ஆவது ஆண்டாக வழங்கும் 2015 ஆம் ஆண்டுக்கான ஊடகவியலாளர்களுக்கான அதிஉயர் விருது வழங்கும் விழாவில் "வாழ்நாள் சாதனையாளர்' விருதைப் பெறுகின்றார் தினக்குரல் பத்திரிகையின் முன்னாள்  பிரதம ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம். 

 இவ்விருது வழங்கும் விழா இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு கல்கிசை மவுண்ட்லவனியா ஹோட்டலில் நடைபெறவுள்ளது. 

வீரகத்தி தனபாலசிங்கம் 1977 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டெட்டில் ஒப்புநோக்காளராக சேர்ந்து ஊடகத்துறையில் பிரவேசித்தார்.

ஏழு ஆண்டுகள் ஒப்புநோக்காளராக பணியாற்றிய அவர், 1985 ஜனவரியில் வீரசேகரி ஆசிரியர் பீடத்தில் உதவி ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

வெளிநாட்டு செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய அவர் சர்வதேச அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை வீரகேசரி தினசரிக்காகவும் ஞாயிறு வீரகேசரிக்காகவும் எழுதினார். வீரகேசரி பாராளுமன்ற செய்தியாளராக தனபாலசிங்கம் 1988 தொடக்கம் 1994 வரை பணியாற்றினார். 

எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தில் 20 வருட கால சேவைக்குப் பிறகு மூத்த பத்திரிகையாளர்களான பொன். இராஜகோபால், ஆறுமுகம் சிவனேசச் செல்வன் ஆகியோருடன் இணைந்து தினக்குரல் பத்திரிகையை  1997 ஏப்ரலில் ஆரம்பிக்க அவர் உதவினார். 

தினக்குரலின் ஸ்தாபக செய்தியாசிரியராக  8 வருடங்கள் பணியாற்றிய தனபாலசிங்கம்  2004 ஏப்ரலில் அப் பத்திரிகையின் பிரதம ஆசிரியரானார். 9 வருடங்கள் பிரதம ஆசிரியராக இருந்த அவர் பிறகு ஏசியன் மீடியா பப்ளிகேசன்ஸ் நிறுவனத்தின் பிரதான பத்திரிகையாசிரியராக தரமுயர்த்தப்பட்டார். 

2004  2010 கால கட்டத்தில் தினக்குரல் பத்திரிகையில் தான் எழுதிய ஆசிரியர் தலையங்கங்களைத் தொகுத்து " ஊருக்கு நல்லது சொல்வேன்' "நோக்கு' ஆகிய தலைப்புகளில் இரு நூல்களை தனபாலசிங்கம் வெளியிட்டார். 

பல விருதுகளையும் அவர் பெற்றிருக்கிறார். குறிப்பாக "ஊருக்கு நல்லது செய்வேன்' நூலுக்காக  2011 அக்டோபரில் தமிழ் நாடு நாமக்கல் சின்னப் பாரதி விருதையும் ஊடகத்துறை மற்றும் இலக்கியத்துறைப் பங்களிப்புக்காக 2013 ஆம் ஆண்டு கரவெட்டி பிரதேச சபையின் விருதையும் அவர் பெற்றிருந்தார்.

No comments

Powered by Blogger.