August 19, 2016

இஸ்லாமிய சட்டங்களை மதிப்பவர்களை, அமெரிக்காவில் குடியேற அனுமதிக்க மாட்டேன் - டிரம்ப்

வாய் தவறி வரும் கடுமையான வார்த்தைகளுக்கு வருந்துவதாக அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் கூறினர்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், தனது பிரசாரத்தின் இடையே அதிரடியாக கருத்துகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதும் சிக்கலில் மாட்டிக் கொள்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த நாட்டுக்குள் முஸ்லிம் அகதிகள் குடியேறுவதைத் தடுப்பேன், முஸ்லிகளுக்குப் போதிய அளவு தேசப்பற்று இல்லை என்பது போன்ற கருத்துகள் கடும் கண்டனத்துக்கு உள்ளாகின.
ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை விமர்சிக்க கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி வருகிறார் டிரம்ப். இந்த நிலையில், சில வேளைகளில் சரியான சொற்களைக் கூறாததாலும், தவறான
சொற்களைக் கூறுவதாலும், தனிப்பட்ட முறையில் சிலரைப் புண்படுத்தியிருந்தால், அதற்காக வருந்துவதாக டிரம்ப் கூறினார்.
வடக்கு கரோலினா மாகாணம், சார்லட் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசுகையில், கடுஞ்சொற்களைப் பேசுவதற்கு வருத்தம் தெரிவித்தார். தனது உரையின்போது அவர் கூறியதாவது:
நான் அரசியல்வாதி அல்ல. ஒரு தொழிலதிபரான நான், வேலைவாய்ப்புகளை உருவாக்கி ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்திருக்கிறேன்.
பல குடியிருப்புகளை மறுசீரமைத்து மக்களின் நல்வாழ்வுக்கு உதவியிருக்கிறேன்.
அரசியல்வாதிகளின் நாசூக்கான மொழியைக் கற்றுக் கொள்ள நான் முயற்சி செய்ததில்லை. அரசியல் ரீதியான நோக்கில் சரியான செயல்களை நான் செய்தது கிடையாது.
பல விவாதங்களில் ஏராளமான விஷயங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசும்போது, சரியான வார்த்தைகளைப் பேசாமல் போகிறேன். அல்லது தவறான சொற்களைப் பேசிவிடுகிறேன். அது போன்ற சந்தர்ப்பங்களில் சில பேருக்கு வேதனை அளித்ததற்காக வருந்துகிறேன். வாய் தவறி வரும் கடுமையான வார்த்தைகளுக்கு வருந்துகிறேன்.
அதே சமயத்தில், நம் முன் முக்கியமான பிரச்னைகள் இருக்கும்போது இவையெல்லாம் நம் கவனத்தை திசை திருப்பவிடக் கூடாது.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அரசியல்வாதி போல நான் மூடி மறைத்துப் பேசுவதில்லை. இந்த நாட்டில் தங்கள் குரலை எழுப்ப முடியாமல் இருக்கும் சாதாரண மக்களின் சார்பாக நான் பேசுகிறேன்.
நான் உண்மையை மட்டுமே பேசுகிறேன். எதிர் தரப்பு வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், நாளுக்கு நாள் பொய் மேல் பொய்யாக கூறி வருகிறார்.
அமெரிக்க அரசின் சேமிப்பகத்தைப் பயன்படுத்தாமல், சட்ட விரோதமான மின்னஞ்சல் சேமிப்பகத்தை உருவாக்கி, அதன் மூலம் நாட்டின் முக்கியத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டது மட்டுமல்லாமல்,
அதைப் பற்றி பொய் சொல்லி வந்த ஹிலாரி, 33,000 மின்னஞ்சல்களை அவசரம், அவசரமாக அழித்ததற்கு மன்னிப்புக் கேட்டாரா?
ஹிலாரி கூறிய பொய்களுக்காக அவர் எப்போது வருத்தம் தெரிவிப்பார் என நாட்டு மக்கள் காத்திருக்கிறார்கள். இந்த நாட்டு மக்களுக்கு அவர் இழைத்த துரோகங்களுக்கு எப்போது வருத்தம் தெரிவிக்கப் போகிறார் என்று அறிய மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று டிரம்ப் கூறினார்.
பயங்கரவாதிகளை தேடி அழிப்பேன்
அமெரிக்க சட்டங்களை மதிக்காமல், இஸ்லாமிய ஷரியா சட்டங்களை மதிப்பவர்களை இந்த நாட்டில் குடியேற அனுமதிக்க மாட்டேன். அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்கள் இந்த நாட்டின் சட்டம்,
பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்களை ஏற்கும் சகிப்புத் தன்மை ஆகியவற்றை ஏற்பவர்களாக இருக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
வடக்கு கரோலினா மாகாணத்தில் பிரசாரக் கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது: வெளிநாட்டு உறவு, நாடுகளை சீரமைப்பது என்ற பெயரில் எனது வெளியுறவுக் கொள்கைகள் இருக்காது. அந்தக் காலம் முடிந்துவிட்டது. இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதக் குழு, இஸ்லாம் பயங்கரவாதத்தை பரப்புவோர் மீது கவனம் செலுத்தி அவர்களை அழிப்போம். நிதியை முடக்குவது, ராணுவம், இணையதளம் என பல வழிகளில் அவர்களை அழிக்க நடவடிக்கைகள் எடுப்பேன். அமெரிக்கர்களைக் கொல்லும் பயங்கரவாதிகளைத் தேடி அழிப்பேன். பயங்கரவாதத்தை ஒடுக்கும் முனைப்புடன் செயல்படும் எந்த நாட்டுடனும் இணைந்து செயல்படுவேன் என்று அவர் கூறினார்.

4 கருத்துரைகள்:

us a illam panna unya allah anupalam

இவர் வெளிப்படையாக பேசுவதால் ஒரு நன்மை இருக்கிறது.

ஏன் இந்த உரையில் கூட வாய் தவறி பல வார்த்தைகள் வந்திருக்க வாய்ப்பு உள்ளது திரு டரம்ப் ஐயா. இன்னொரு உரையில் அதற்காக மன்னிப்பு கோர வேண்டி வரும் .

Post a Comment