Header Ads



இறைவா எங்களுக்கு, மன வலிமையை தா...


-கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்-

இரும்பு நுண் துகள்களை ஒரு குப்பியில் அடைத்து, குண்டுபோல அவற்றை பெல்லேட் துப்பாக்கிகள் எனப்படும் காற்றழுத்த துப்பாக்கிகளில் நிரப்பி, குறிபார்க்கப்படும் நபர் மீது அது மிகுந்த அழுத்தத்தில் செலுத்தப்பட்டால், மிகுந்த ஆற்றலுடன் வெளிப்படும் குண்டு மலர் மொட்டு அவிழ்வது போல அவிழ்ந்து அதனுள் பொதிந்திருக்கும் கூறிய நுண் துகள்களை அதிக எண்ணிக்கையில் வெகு வேகமாக விரிந்த பரப்பளவில் கண்ணிமைக்கும் நேரத்தில் பரப்பி பாதிக்கப்படும் மனிதர் உடலில் எண்ணற்ற அளவில் புகுந்து ஊசிகளைப் போல ஊடுருவி சேதம் உண்டாக்கும்.

சமீப காலங்களில் இந்த பெல்லேட் குண்டுகள் கொண்டு இஸ்ராயிலின் ஈவிரக்கமில்லா ராணுவத்தினர் மட்டுமே, தங்களை கல்லால் எரியும் பலஸ்தீன பாவங்களை வேட்டையாடி வந்தனர். உலக நாடுகளும் ஐக்கிய நாடுகளின் சபையும் கவனத்தில் கொண்டு இந்த கடுமையான சேதம் உண்டாக்கும் கேடுகெட்ட ஆயுதத் தாக்குதலை கைவிடுமாறு தொடர்ந்து கூறி, அப்படிக் கொடுமதி கொண்ட இஸ்ரேல்கூட கைவிட்ட அந்த தாக்குதலை, இந்ததேசத்தின் புகழுக்குக் கிரீடமாக நின்று ஒளிவீசிய காஷ்மீரத்து மக்களின் மீது இந்த காந்திதேசம் கையாண்ட கொடுமையை நாம் எங்கே போய்ச் சொல்லி கண்ணீர் விட்டுக் கதறுவது....

போராளிகளை எதிர்க்கிறோம் என சொல்லிக்கொண்டு, கல்லூரி பள்ளி மாணவ மாணவிகளை, பெண்களை, கர்பிணிகளை, முதியவர்களை, குறி பார்த்து இந்த நாசமாய்போன பெல்லேட் குண்டுகளால் சுட்டு கண்களைக் குருடாக்கி அவர்களை, இருளுக்குள் நிரந்தரமாக நுழைத்து ஒளிரும் இந்தியாவைப் படைக்கப் போகிறோம் எனக்கிளம்பிய இந்த பாசிச அரசு, இருண்ட இந்தியாவை அவர்களுக்கு பரிசளித்த கொடுமையை யாராலும் இந்த துனியாவில் ஆற்ற முடியாதது.

சாவு வீட்டின் சோகம் போல ஒரு மாநிலத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக மேகம் போல துயர் சூழ்ந்து நிற்கிறது. அந்த மக்கள் தங்களின் விதியை நொந்து தங்களைத் தாங்களே வதைத்துக் கொண்டபடி வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இனி நிரந்தரமாகக் குருடாக வாழப் போகும் இந்த நாட்டை நேசித்த காஷ்மீரிகள், ஊரடங்கு உத்தரவுக்குள் இருக்கும் மண்ணில், தங்களின் துயரடங்க மாட்டாமல் ஒப்பாரி ஓலமிட்டுக் கதறுவதாக ஆங்கில பத்திரிகை நிரூபர் ஒருவர் தனது கட்டுரையில் மனம் வெதும்பிக் குறிப்பிடுகிறார்.

சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இத்தனை ஆண்டுகளாய் இல்லாத, மிக நீண்ட நெடிய ஊரடங்கு உத்தரவு, முப்பத்தி இரண்டாம் நாளாக தொடர்வதாக நாடாளும் அவையில் குலாம் நபி கண்ணீர் விடுகிறார். 

யெச்சூரியோ இந்த வரலாறு காணாத வெங்கொடுமை நடவடிக்கைகளை அனைத்து கட்சியினரும் அமர்ந்து பேசி அம் மக்களை ஆறுதல் படுத்த வேண்டியது கட்டாயம் என ஆதங்கப்படுகிறார்.

இறைவா எங்களுக்கு மன வலிமையை தா.

காஷ்மீரம்! 
கண்ணீர் பூக்களை மட்டுமே 
காலமெல்லாம் பூத்தபடி 
கைசேதத்துடன் நிற்கும் மரம்..
நீங்கள் தால் ஏரிக்கரையில்
தாகத்தோடு ஒதுங்குபவரா? 
நீரைக் கையிலள்ளிக் கொஞ்சம் 
கணநேரம் பாருங்கள் 
கண்ணாடியாய் இலங்கிய ஏரிநீர் 
கொண்ட நிறம் இன்று சிவப்பு,
கொஞ்சம் சுவைத்தால் உணரலாம்
அவர் கண்ணீரின் உப்பு...
நான்கு வகை நீலநிற நூலெடுத்து
நவீன காரப்பெட்டை உலகுக்கு தந்த 
பார்வையிழந்த நங்கையின் கை ஊசிக்கு 
இனி நிரந்தரமாக..
கருப்பு நூல் தான்.

No comments

Powered by Blogger.