Header Ads



"அந்த 4 நாட்கள்" - 'நீங்கள் அழைக்கும் நபர், தற்போது தொடர்பில் இல்லை..'

-மேனகா மூக்காண்டி-

'இரவு சாப்பாட்டுடன் வந்திருக்கின்றேன். படலையைத் திறம்மா' என தன்னுடைய கணவனின் குரலை அலைபேசியில் கேட்டுவிட்டு ஓடோடிவந்த மனைவி, வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து படலையைத் திறந்தபோது, அவ்விடத்திலிருந்த வாகனமொன்று விர்றென்று கண்ணிமைக்கும் நேரத்துக்குள் பறந்துவிட்டது.

படலையை இழுத்து மூடிய நான், படபடக்க கணவனின் அலைபேசிக்கு அழைப்பெடுத்தபோதும். அது, 'நீங்கள் அழைக்கும் நபர் தற்போது தொடர்பில் இல்லை' என்றே பேசியுள்ளது.

விடியும் ஒவ்வொரு பொழுதுகளும் என்ன நடக்குமோ என்ற காலம் மலையேறிவிட்டதாய் கூறுவதில் அர்த்தமில்லை. இருளும் ஒவ்வொரு இரவுகளும், காரிருளாகும் என்பதற்கு அர்த்தம் கற்பிப்பவனவாகவே நாட்டில் நடக்கும் சம்பவங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

இரண்டு கோடி ரூபாய் கப்பம் கோரி, இனந்தெரியாத நபர்கள் சிலரால், பம்பலப்பிட்டி, கொத்தலாவல ஒழுங்கையை வசிப்பிடமாகக் கொண்ட முஹம்மட் சகீப் சுலைமான் என்ற 29 வயதுடைய கோடீஸ்வர வர்த்தகர், கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். சம்பவ தினமான 21ஆம் திகதியன்று இரவு, பம்பலப்பிட்டியிலுள்ள உணவகமொன்றில், தனது மனைவிக்காக சில உணவுகளைக் வாங்கிக்கொண்டு செல்வதற்காகச் சென்றுள்ளார். திரும்பிவந்த வேளையிலேயே அவர் கடத்தப்பட்டார்.

இது இவ்வாறிருக்க, 22ஆம் திகதி முற்பகல் 9 மணியிருக்கும், சுலைமானின் தந்தையினுடைய அலைபேசிக்கு, இனந்தெரியாத நபரொருவரிடமிருந்து அழைப்பொன்று கிடைத்துள்ளது. 'உங்களது மகனைக் கடத்தி வைத்திருக்கிறோம். அவரை விடுவிக்க வேண்டுமாயின், இரண்டு கோடி ரூபாயை, கப்பமாக வழங்குங்கள்' என்று கூறிவிட்டு, அழைப்பைத் துண்டித்துள்ளார். கேகாலை பிரதேசத்திலுள்ள பொதுத் தொலைபேசி அழைப்புக் கூண்டிலிருந்தே, அந்த அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை, பொலிஸார் கண்டுபிடித்திருந்தனர்.

அதே இலக்கத்துக்கு, மீண்டும் அழைப்பை ஏற்படுத்திய போதிலும், அவ்வழைப்புக்கு பதிலே இல்லை. எவ்வாறாயினும், சுலைமானை விடுவிப்பதற்காக கப்பம் கோரிய எவரும், அந்த ஒரேயொரு அழைப்பைத் தவிர, வேறு எந்த அழைப்பையும் மேற்கொள்ளவில்லை. அதன் பின்னரே, அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

சுலைமான் தொடர்பில், புதன்கிழமை பிற்பகல் வரையில், எந்தவிதத் தகவலும் இல்லை. இந்நிலையில், தன்னுடைய மகன் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 5 மில்லியன் ரூபாயினைச் சன்மானமாக வழங்குவதாக, அவரது தந்தை, ஊடகங்கள் வாயிலாக, செய்தியொன்றை வெளியிட்டார். அச்செய்திக்கு பின்னரே, சுலைமான் படுகொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் அப்போது தெரிவித்திருந்தனர். இருப்பினும், கப்பம் கோரப்பட்ட தினமே, அந்த வர்த்தகர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று, அச்சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதை அடுத்து, பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

மாவனெல்ல பிரதேசத்தையும் அங்குள்ள வீதிகளையும் நன்கு அறிந்த எவரேனும், இந்தப் படுகொலையுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டனர்.  கப்பம் கோரியவர்கள், எப்பிரதேசத்திலிருந்து அழைப்பை மேற்கொண்டார்களோ, அப்பிரதேசத்தில் இருந்து தான், சுலைமானின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. 

மொத்த துணி மற்றும் ஆடை விற்பனையாளர்களுடனும், சுலைமான், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இவர்களில் இருவருக்கு எதிராகவே, சுலைமான் பொலிஸ் முறைப்பாடுகளைச் செய்துள்ளார். இம்முறைப்பாடுகள் தொடர்பில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் கூறுகின்றனர்.

இப்பிரச்சினைகளுக்கும், சுலைமான் கடத்திக் கொலை செய்யப்பட்டதற்கும் சம்பந்தம் இருக்குமோ என்று பொலிஸார் சந்தேகிக்கின்ற நிலையில், இதுவரையில் 15 வர்த்தகர்களிடம் பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

வர்த்தகரான சுலைமானின் அலைபேசியும் அவரது வாகனத்தின் சாவியையும், அவரைக் கடத்திச் சென்றவர்களே எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், சுலைமானின் அலைபேசிக்கு கிடைத்த அழைப்புகள், அதிலிருந்து வெளிச்சென்ற அழைப்புகள் தொடர்பிலும், விசாரணைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, சுலைமானின் வீட்டுக்கு அருகிலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டிவி கெமராக்களின் பதிவுகளைக் கொண்டும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹம்மட் சகீப் சுலைமான் என்ற கதாபாத்திரம், தற்போது நாட்டின் பிரதான தலைப்பாக மாறியுள்ளது. அவர் பம்பலபிட்டியைச் சேர்ந்தவர் என்பதும் கோடீஸ்வர வர்த்தகர் என்பதுமே, அவரது செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கக் காரணமாகியிருக்கிறது எனலாம். அவர் காணாமற்போன தினத்திலிருந்து சடலமாக மீட்கப்படும் வரையிலும், ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும், அவர் தொடர்பான செய்திகளையே பெரும்பாலும் வெளியிட்டன. இதுபோன்ற பங்களிப்பே, மொஹமட் சியாமின் கடத்தல் மற்றும் காணாமற்போன போதும் காணப்பட்டது.

இந்த இளம் வர்த்தகர், என்ன நோக்கத்துக்காகக் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பான விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. ஆனால், இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் ஒரு அச்ச நிலையைத் தோற்றுவித்துள்ளது. அதேநேரம், இக்கடத்தல் சம்பவம் குறித்து பலவித கேள்விகளும் எழுந்துள்ளன. 2015.01.08ம் திகதியோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட ஆட்கடத்தல், வெள்ளை வான் கலாசாரம் என்பன, மீண்டும் தலை தூக்குவதற்கான முன் சமிக்ஞையா இது? என்ற ஐயமும் ஏற்பட்டிருக்கின்றது. என்றாலும் இவ்விடயம் குறித்து விரைவாகச் செயற்பட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது உரிய தரப்பினரின் கடப்பாடாகும்.

2 comments:

  1. This So-called good governance gives a report about the assassination instantly and after that they drag this matter for a prolonged period of time aimlessly. Like Vidya's murder trial in Jaffna.

    ReplyDelete
  2. This So-called good governance gives a report about the assassination instantly and after that they drag this matter for a prolonged period of time aimlessly. Like Vidya's murder trial in Jaffna.

    ReplyDelete

Powered by Blogger.