August 14, 2016

உலகின் பரபரப்பான 10 நொடிகள், எப்படி இருக்கும் தெரியுமா..?


'ஒருவேளை உங்களுக்கு ஒலிம்பிக், ஃபிஃபா வேர்ல்ட் கப் இது ரெண்டுல ஏதாவது ஒண்ணை கவர் பண்ற வாய்ப்பு கிடைச்சா நீங்க எதை  விரும்புவீங்க? ' - சென்னை நேரு மைதானத்தில், சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியின் இடைவேளையின்போது, இந்த கேள்வியைக் கேட்டார் ஒரு ஆங்கில நிருபர். " ஃபுட்பால் வேர்ல்ட் கப்"  என பதில் சொன்னேன். ‘என்னைக் கேட்டா,  ஒலிம்பிக்கைதான் சூஸ் பண்ணுவேன். ஏன்னா அதான் பினாக்கிள். இல்லையா...’ என மீண்டும் அவரே தொடர்ந்தார்.

ஒலிம்பிக் 100 மீட்டர் ஃபைனல் எல்லாம் நேர்ல பாக்குற த்ரில் இருக்கே. ப்ப்ப்ப்பா... ஒலிம்பிக்ல மத்த எந்த ஈவன்ட்டுக்கும் அவ்வளவு கூட்டம் வராது. ஆனா, 100 மீட்டர் ஃபைனல்ஸ் நடக்குறப்ப, ஸ்டேடியமே நிரம்பி வழியும். அவ்வளவு நேரமும் ஒரே கூப்பாடா இருக்கும். ஆன் யுவர் மார்க் சொன்னதும்,  ஒரு பின் டிராப் சைலன்ட் இருக்கும் பாருங்க... 50,000 பேர் இருக்குற இடம் திடீர்னு அமைதியானா எப்படி இருக்கும்?

அதுவரைக்கும் சைலன்ட்டா இருந்த கூட்டம்,  பிளேயர்ஸ் ஓட ஆரம்பிச்சதும், 'ஓ....' ன்னு கத்தும். அதெல்லாம நேர்ல அனுபவிச்சாதான் புரியும். டி.வியில எத்தனை பாயின்ட் வால்யூம் கூட்டி வச்சி பாத்தாலும் அந்த ‘த்ரில்’ வராது. 2008-ல பீஜிங் ஒலிம்பிக்ல இதை நேர்ல பார்த்தேன்."-  அவர் சொல்லச் சொல்ல, எச்சில் விழுங்க கேட்டுக் கொண்டிருந்தேன். உடனடியாக மனம், ரியோ டீ ஜெனீரோவில் 100 மீட்டர் பந்தயம் நடக்கவுள்ள மரக்கானா மைதானத்தில் ஒரு டிக்கெட் கிடைக்குமா என ஏங்கியது.

பத்து செகண்டில் முடிந்துவிடக் கூடிய அந்த போட்டிக்குத்தான் எத்தனை எதிர்பார்ப்பு, எத்தனை எத்தனை ஆர்ப்பரிப்பு. 100 மீட்டர் ஓட்டப் பந்தயம்போல எளிதான விதிமுறைகள் கொண்ட விளையாட்டு வேறு எதுவும் இல்லை. ‘ஆன் யுவர் மார்க் செட்’ சொல்லி முடிந்து, துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் 100 மீட்டர் தூரம் ஒரே நேர் கோட்டில் வேகமாக ஓட வேண்டும். அவ்வளவுதான் ரூல்ஸ்.

ரியோ ஒலிம்பிக்கில் பல்வேறு பிரிவுகளில் 306 தங்கப் பதக்கங்கள் வழங்கப்படும். இந்த எல்லா தங்கத்தையும்விட, ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் வெல்லும் தங்கம் பெரிது. அதனால்தான் இந்த தங்கத்தை அடுத்தடுத்து இரண்டு முறை வென்று, ஹாட்ரிக் வெல்லக் காத்திருக்கும், ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட்டுக்கு மின்னல் வேக மனிதன், சூப்பர்மேன் ஆஃப் தி வேர்ல்ட் ஸ்போர்ட்’ என்ற பெயர்.

இந்தமுறை அந்த பட்டத்தை வெல்லப்போவது யார்? இந்த சீசனில்  ஃபார்மில் இருக்கும் அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லின், போல்ட்டுக்கு நெருக்கடி கொடுப்பாரா? இந்த கேள்விகளுக்கு, ஆகஸ்ட் 15 காலை 6.55 மணிக்கு விடை தெரிந்துவிடும். பந்தயம் துவங்கும் முன் முந்தைய சாதனைகளுடன், தன் பெயரை அறிவித்ததும் வீரர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சி, அவர்களின் ஆயத்தம், அந்த நொடி நேர நிசப்தம் இதையெல்லாம் மிஸ் செய்து விடாதீர்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment