Header Ads



இலங்கையில் My Number தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ஜப்பான் இணக்கம்

120 மில்லியன் ஜப்பான் மக்களின் நாளாந்த வாழ்வில் செயற்திறனை விருத்தி செய்வதற்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மை நம்பர் ( My Number ) எண்ணக்கருவினை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதற்கு ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் பாராளுமன்றத்தின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் பியூகுடு சென்ஸெய் (Fukuda Sensai) நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோது இதனைத் தெரிவித்தார்.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களின்  சகல தரவுகளையும் உள்ளடக்கி நாளாந்த வாழ்க்கையில் அனைத்து நிகழ்வுகளுக்காகவும் பயன்படுத்தக்கூடியவாறு இலத்திரனியல் அட்டையினை விநியோகித்தல் மை நம்பர் (My Number) எண்ணக்கருவின் மூலம் மேற்கொள்ளப்படும்.

ஏற்புடைய துறைகளுடன் கலந்துரையாடி இந்நவீன முறையினை பயன்படுத்தும் சாத்தியம்பற்றி கண்டறிந்து துரிதமாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தான் ஜப்பான் சென்றிருந்தபோது அங்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைக் கண்டு தான் வியப்படைந்ததாக தெரிவித்த ஜனாதிபதி, நவீன ஜப்பான் தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு ஜப்பான் எடுத்த தீர்மானத்திற்காக நன்றி தெரிவித்தார்.

ஜப்பான் விஜயத்தின்போது அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே ( Shinzō Abe ) யினால் ஜப்பானில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டியை பார்வையிடுவதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை இதன்போது ஜனாதிபதி நினைவுகூர்ந்ததுடன் மீண்டும் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜப்பான் பாராளுமன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினர்  பியூகுடு சென்ஸெய் (Fukuda Sensai)  ஜனாதிபதிக்கு அழைப்புவிடுத்தார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனீச்சி சுகனும ( Kenichi Suganuma) உம் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.