Header Ads



கொழும்பு வந்த ரஷ்ய கடற்படை கப்பல் - அமெரிக்க போர்க்கப்பலில் இலங்கையர்களுக்கு விருந்துபசாரம்


ரஷ்ய கடற்படையின், தேடுதல் மற்றும் மீட்புக் கப்பலான ‘இகோர் பெலோசோவ்’, நான்கு நாள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

96 மாலுமிகளுடன் வந்த ரஷ்ய கடற்படைக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் அலெக்சே நெகோட்சேவ், கப்பல் அணியின்  தளபதி கப்டன் மாக்சிம் அலாலிகின் ஆகியோர், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

வரும் 30ஆம் நாள் வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ள ரஷ்ய கடற்படைக் கப்பலில் உள்ள மாலுமிகள், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

ஏற்கனவே கொழும்புத் துறைமுகத்தில்  ஓமான் மற்றும் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தரித்திருந்த நிலையிலேயே நேற்று ரஷ்ய போர்க்கப்பலும் கொழும்பு வந்து சேர்ந்தது.

2

கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ள அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துத் தள போர்க்கப்பலான, யுஎஸ்எஸ். நியூ ஓர்லியன்சில் நேற்று மாலை இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில், சிறிலங்கா அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.

அமெரிக்க போர்க்கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் கிளென் ஜமிசன், விருந்தினர்களை வரவேற்றார். அமெரிக்க கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதுடன், விருந்துபசாரமும் அளிக்கப்பட்டது.

சிறிலங்கா அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, பைசர் முஸ்தபா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, கடற்படைத் தளபதி மற்றும் இராணுவத் தளபதி உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

அமெரிக்க- சிறிலங்கா கொடிகள் போல வடிவமைக்கப்பட்ட கேக்கும் இந்த நிகழ்வில் வெட்டப்பட்டது.


1 comment:

  1. ஏன் எல்லா நாட்டு போர் கப்பல்களும் இங்கு வருகின்றன? கிலியாக உள்ளது

    ReplyDelete

Powered by Blogger.