Header Ads



"சகவாழ்வு நல்லிணக்கம் இல்லாது, நல்லாட்சி மலர முடியாது" - ரணில் முன்பாக அகார் முஹம்மத்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்பாட்டில் அலரி மாளிகையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் துணைத் தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் ஆற்றிய விஷேட சொற்பொழிவின் சாராம்சமே இது.

அலரி மாளிகையில் இடம்பெறும் இப்தார் நிகழ்வுக்கு முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளை அழைத்து கௌரவப்படுத்திய மாண்புமிகு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு முஸ்லிம் சமூகத்தின் சார்பில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

அரசாங்கம் முன்னெடுக்கின்ற நல்லாட்சியை மேம்படுத்துவதற்கான திட்டங்களும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டை இலக்காகக் கொண்ட திட்டங்களும் ஏனைய காத்திரமான முன்னெடுப்புகளும் வெற்றி பெற இந்த சந்தர்ப்பத்தில் பிரார்த்திப்போமாக!

ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புதல் (Nation building) என்கின்றபோது அந்த தேசத்தின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், பௌதிக வளங்கள், உட்கட்டமைப்பு… முதலான அம்சங்களைக் கட்டியெழுப்புவது என பொதுவாக அடையாளப்படுத்தப்படுகிறது.

இவையெல்லாம் முக்கியாமக இருப்பது போல தேசத்தின் குடிமக்களை ஆன்மிக ரீதியாக, ஒழுக்க ரீதியாக, பண்பாட்டு ரீதியாகக் கட்டியெழுப்புவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆன்மிகமும் ஒழுக்கமும் பண்பாடும் உயர்ந்த நிலையில் இருக்கின்றபோதே ஒரு நாட்டில் நல்லாட்சி (good governance) மலர்வது சாத்தியமாகும்.

சமகால உலகில் நாம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்குப் பின்னால் இருக்கின்ற பிரதானமான காரணம் ஆன்மிக பண்பாட்டு வீழ்ச்சியே (Moral crisis).

அந்த வகையில் எமது நாட்டில் நல்லாட்சி மலர வேண்டுமாயின் எமது நாட்டு மக்கள் நல்லாட்சிக்குத் தகுதியுள்ள, பண்பாடுள்ள, ஒழுக்கமுள்ள, நேர்மையுள்ள, நீதியுள்ள மக்களாக உருவாக்கப்பட வேண்டும். அந்த வகையில் ஆன்மிகம் முக்கியத்துவம் பெறுகிறது. மதமும் ஆன்மிகமும் இல்லாத இடத்திலே பண்பாட்டை, ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது. பண்பாடற்ற நிலையில் மதம் இருக்கின்றபோது அந்த மதம் பயனற்றதாக இருப்பது போல மதம் இல்லாத நிலையில் பண்பாட்டை வளர்க்க முடியாது என்பதை உலகமே ஏற்று அங்கீகரிக்கிறது.

எனவே, மதம், ஆன்மிகம், பண்பாடு என்பவற்றை வளர்க்கின்ற ஒரு கடப்பாடு அரசுக்கும் மத தலைவர்களுக்கும் சமூகத் தலைவர்களுக்கும் இருக்கிறது.

உண்மையில் எமது நாடு ஆன்மிகத்துக்கும் ஒழுக்கப் பண்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்ற நாடு. இந்த வகையில் மனித விழுமியங்களை, பொதுவான விழுமியங்களைக் கட்டியெழுப்புகின்ற கடப்பாடு அரசுக்கும் எம் அனைவருக்கும் இருக்கிறது.

குறிப்பாக இலங்கை போன்ற பல்லினங்களும் பல சமயத்தவர்களும் வாழ்கின்ற ஒரு நாட்டிலே சமூக நல்லிணக்கத்தை, சகவாழ்வைக் கட்டியெழுப்பும் வகையில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியமும் தேவையும் இருக்கிறது.

அந்த வகையில் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நாட்டில் சமூக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்பும் நோக்கில் “அந்தர் ஆகமிக உபதேசக மண்டலய” எனும் பெயரில் ஒரு சமய நல்லிணக்க குழுவொன்றை அண்மையில் அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. அவ்வாறே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் இந்த நாட்டில் சமூக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம்.

இத்தகைய மனித விழுமியங்களையும் ஆன்மிக விழுமியங்களையும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட வேண்டிய ஒரு கால கட்டம் இது.

ஒரு நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் எப்படியானவை என்பது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு சொல்கிறது.

“இவ் இல்லத்தின் (கஃபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக. அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.” (106: 3-4)

பசி, பட்டினியற்ற, அச்சமற்ற நிம்மதியான, சுதந்திரமான வாழ்வே மனிதர்களுக்குத் தேவை. இவைதான் ஒரு நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் அடிப்படையான விடயங்கள்.

நல்லாட்சியில், ஒரு சிறந்த ஆட்சியில் மக்களின் பொருளாதாரப் பிரச்சினைக்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். அவர்களுடைய பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். நீதி வழங்கப்பட வேண்டும். அவர்கள் நிம்மதியாக, சமாதானமாக, அச்சமின்றி வாழ்கின்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.

உண்மையில் ரழமான் நோன்பின் பிரதானமான நோக்கமும் இதுதான். ஒரு பக்கம் ஆன்மிக ரீதியான மறுமலர்ச்சியை உருவாக்குவது (Spiritual awakening). மறுபக்கம் ஒவ்வொரு தனி மனிதனையும் குடும்பத்தையும் சமூகத்தையும் பண்பாட்டு ரீதியாக கட்டியெழுப்புவது (Social reform).

இந்த நாட்டிலே வாழ்கின்ற மக்களை நாட்டுக்க விசுவாசமுள்ள பிரஜைகளாக வாழ்வதற்குத் தேவையான வழிகாட்டல்களை அற்புதமாக வழங்குகிறது இந்த ரமழான்.

இறைவனும், இறுதித் தூதர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் கூறுவதைப் பாருங்கள்:

"நம்பிக்கைக் கொண்டவர்களே! நீங்கள் இறைவனை அஞ்சி (பயபக்தியுடன்) நடந்துக் கொள்வதற்காக, உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப் பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது." (அல்குர்ஆன் 2: 183) 

நோன்பின் உன்னதமான நோக்கத்தை அல்லாஹ் தனது திருமறையிலே இவ்வாறு இரத்தினச் சுருக்கமாகவும் மிக அழகாகவும் சொல்லிக் காட்டுகிறான்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

"யார் பொய்யான பேச்சுகளையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதிலோ, தாகித்திருப்பதிலோ அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை." (அல்புகாரி, திர்மிதி, இப்னுமாஜா)

“நோன்பு நோற்கும் பலருக்கு அவர்களின் நோன்பில் இருந்து பசி தாகம் தவிர வேறெதுவும் கிடைப்பதில்லை. இரவில் விழித்து வணங்கும் பலருக்கு விழித்திருப்பதைத் தவிர வேறு எதுவும் கிடைப்பதில்லை.” (தாரமி)

அந்த வகையில் மிகவும் பண்பாடான, பக்குவமான, நல்லொழுக்கமுள்ள, தேசப்பற்றுள்ள, சட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்கின்ற, எப்போதும் ஒழுங்கைப் பேணுகின்ற ஒரு சமூகமாக இந்த சமூகம் மாற வேண்டும் என்பது ரமழானின் முக்கிய இலக்கு என்பதை கவனத்திற் கொண்டு செயற்படுவோமாக!

எனவே, அந்த வகையில் அல்லாஹுத் தஆலா இந்த சபையை அங்கீகரிப்பானாக! இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களுக்கூடாக சிறந்த மாற்றங்களை ஏற்படுத்துவானாக! நாட்டில் நிம்மிதியையும் அமைதியையுத் தருவானாக! நாட்டில் வாழ்கின்ற இனங்களுக்கும் சமயத்தவர்களுக்கு மத்தியிலும் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்ப உதவி செய்வானாக! நாட்டின் நாட்டு நலன்களுக்காக, நல்லாட்சிக்காக உழைக்கின்ற அனைவருக்கும் அல்லாஹ் தேக ஆரோக்கியத்தை வழங்குவானாக! உலகத்திற்கு ஒரு முன்மாதிரி நாடாக எமது நாட்டை ஆக்கி அருள் புரிவானாக!

தொகுப்பு: ஹயா அர்வா

No comments

Powered by Blogger.