Header Ads



இஸ்லாமிய அச்சுறுத்தல் குறித்து கூற, ஹிலாரி தவறிவிட்டார் - டொனால்டு டிரம்ப்


அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றால், எந்த மதத்துக்கும் தடை விதிக்க மாட்டேன் என்று ஜனநாயகக் கட்சி அதிபர் பதவி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் உறுதியளித்தார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பிலான வேட்பாளராக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டார்.

பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்ஃபியாவில் நடைபெற்று வரும் ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனை ஏற்று, மாநாட்டில் ஹிலாரி கிளிண்டன் வியாழக்கிழமை பேசியதாவது:

அமெரிக்கா தன்னைத் தானே உணர்ந்து கொள்ள வேண்டிய தருணமிது.மிகப் பெரிய சக்திகள் நம்மை சிதறடிக்க நினைக்கின்றன.நம்பிக்கையும், ஒற்றுமையும் சீரழிந்து வருகின்றன.

இந்த நேரத்தில் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு தேசமாக அமெரிக்காவை வழிநடத்த விரும்புகிறேன்.

நான் அதிபரானால் எந்த மதத்துக்கும் தடை விதிக்க மாட்டேன்.எல்லோரையும் சரிசமமாக நடத்துவேன்.

ஜனநாயகக் கட்சி ஆட்சியில், குண்டு சத்தம் இல்லாமலே பேச்சுவார்த்தை மூலம் ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துக்கு மூடுவிழா நடத்தும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் சென்று, இஸ்ரேலில் பாதுகாப்பை உறுதி செய்வேன்.

டிரம்ப் மீது தாக்கு: குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க மக்களிடையே பிரிவினையே ஏற்படுத்த விரும்புகிறார்.

சுட்டுரையில் (டுவிட்டர்) எவராவது விமர்சனம் செய்தாலோ, செய்தியாளர்கள் எதிர் கேள்வி கேட்டாலோ டொனால்டு டிரம்ப் நிதானம் இழந்து விடுகிறார்.

ஒரு சிறிய சுட்டுரைப் பதிவைக் கண்டே கோபத்தின் உச்சிக்கு சென்றுவிடும் டிரம்ப், அதிபர் பொறுப்பேற்றால் உண்மையான பிரச்னைகளை எவ்வாறு எதிர் கொள்வார்?

அவரை நம்பி அணு ஆயுதங்களை எவ்வாறு ஒப்படைப்பது? என்றார் ஹிலாரி.

டிரம்ப் பதிலடி

தனது ஏற்புரையின் ஒரு இடத்தில் கூட, அமெரிக்கா எதிர்நோக்கியுள்ள இஸ்லாமிய மதவாத அச்சுறுத்தல் குறித்து குறிப்பிடாத ஹிலாரி கிளிண்டன் அதிபர் பதவிக்குத் தகுதியற்றவர் என்று டொனால்டு டிரம்ப் பதிலடி தந்துள்ளார்.

இதுகுறித்து தனது சுட்டுரை (டுவிட்டர்) பதிவுகளில் அவர் கூறியதாவது:

இஸ்லாமிய மதவாதம், அமெரிக்காவில் குடியேறிய அகதிகளின் எண்ணிக்கை 550 சதவீதம் அதிகரித்தது போன்ற பிரச்னைகளைப் பற்றி ஹிலாரி பேச மறுப்பதே, அவர் அதிபர் பதவிக்கு லாயக்கற்றவர் என்பதை நிரூபிக்கிறது.

அமெரிக்காவின் எல்லைகளைத் திறந்து விடுவதும், அதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்புகளையும், பாதுகாப்பையும் பறிகொடுப்பதுமே ஹிலாரியின் லட்சியம் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. டிரம்ப்.நேரடியாக முஸ்லிம்களை எதிர்க்கிறார் அதனால் இவர் எப்படிப்பட்டவர் என்பது வெளிபடையாக தெரிகிறது ஆனால் ஹிலாரியோ இஸ்ரவேலை பாதுகாக்கப்படும் என்று தெளிவாக சொல்வதன் நோக்கம் இஸ்ரவேலுக்கு எதிரி முஸ்லிம்களும் முஸ்லிம் நாடுகளும் என்பது உலகறிந்த உண்மை அதனால் இஸ்ரவேலை பாதுகாப்பது என்பது முஸ்லிம் உலகுக்கு மறைமுகமாக விடும் சவால் என்பதே இதன் உண்மை

    ReplyDelete

Powered by Blogger.