Header Ads



சமூக எழுச்சிக்கு உழைத்த "அஸ்ரப் ஹுஸைன்"

-என்.எம். அமீன்-

கொழும்பு 7 ரொஸ்மிட் பிளேஸ் தனவந்தர்கள், வசதி படைத்தவர்கள் வாழும் ஒரு பகுதி. அந்த வீதியிலுள்ள 22 ஆம் இலக்க இல்லம் சமூக சேவைப் பணிகளின் ஒரு மையமாக கடந்த பல தசாப்தங்களாக இருந்து வந்தது. 

கடந்த சனியன்று காலமான அல்.ஹாஜ் அஷ்ரப் ஹுஸைனின் வீடு இந்த வீதியின் 22 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ளது.  தனவந்தர்கள் வாழும் பகுதியில் ஏழைகளுக்காக, வாப்பற்றவர்களுக்காக பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்ட ஓர் இல்லமாக இருந்ததனால் ரொஸ்மிட் பிளேஸ் 22 ஆம் இலக்கம் இந்நாட்டில் அனேகருக்கு பரிச்சயமான ஓர் இடமாக இருந்தது. 

முஸ்லிம் சமூகப் பணிகள் மட்டுமன்றி, பொதுப்பணிகள் நடக்கும் ஒரு மையமாக இந்த இல்லம் செயற்படுவதற்கு காரணம் மர்ஹும் அஷ்ரப் ஹுஸைன் தன்னை பொதுப் பணிக்கும், சமூகப் பணிக்கும் அர்ப்பணித்துச் செயற்பட்டமையாகும். 

அங்கவீனர்கள்தொடர்பான நடவடிக்கைகள், ஜனாஸா நலன்புரி ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக பல பொதுப்பணிகள், திட்டங்கள் நடைபெறும் இடமாகவும் இந்த இல்லம் செயற்பட்டது. சர்வதேச வை.எம்.எம்.ஏ, கொழும்பு மேற்கு லயன்ஸ் கழகம், கலாநிதி ரி.பி.ஜாயா மன்றம், இலங்கை கண்பார்வையற்றோர் கழகம், இலங்கை முஸ்லிம் ஆவண நிலையம், விபத்து சேவை நண்பர்கள் அமைப்பு, கொழும்பு ஜனாஸா நலன்புரி சங்கம் என்ற பல்வேறு அமைப்புக்களில் முக்கிய பதவிகளை அஷ்ரப் ஹுஸைன் வகித்ததோடு அவை இயங்குவதற்கு கூட்டங்களை நடத்துவதற்கு டவுன்ஹோலில் அமைந்துள்ள தனது வீட்டை வழங்கியதனால் அவற்றின் பணிகள் சீராக நடைபெற்றன. 

செல்வந்தர்கள் வாழும் கறுவாத் தோட்டத்தில் சமூகப் பணிக்காக என்றும் திறக்கப்பட்டிருந்த அஷ்ரப் ஹுஸைனின் இல்லம் அவரது சமூகப் பணிக்குச் சிறந்த சான்றாக இருந்தது.

அல்.ஹாஜ் அஷ்ரப் ஹுஸைன் கொழும்பில் பிரபல வர்த்தக குடும்பமான சிக்கந்தர் பாட்சா குடும்பத்தில் பிறந்தார் இவரது தந்தையார் எஸ்.பி.எம்.ஹுஸைன் ஆவார். பொதுச் சேவையால் புகழ் பூத்த ஒரு பெருமை மிகு குடும்பத்தின் முன்மாதிரியைப் பின்பற்றி சிறுவயது முதலே சமூக சேவையிலீடுப்பட்டார். தான் நோவாப்பட்டு கட்டிலுக்காகும் வரை ஏதாவது ஒரு சமூகப் பணியிலீடுப்பட்டுக் கொண்டே இருந்தார். 

கடந்த அரசின் இறுதிக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கெதிராக கடும்போக்கு அமைப்புகள் கட்டவிழ்த்து விட்ட இராஜாங்க செயற்பாடுகள் தொடர்பாக ஆராவதற்கு ரொஸ்மிட் பிளேஸ் இல்லத்தில் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் முஸ்லிம் இயக்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து நடத்திய கூட்டம் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கின்றது. 

கடந்த ஆட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன் செயல்கள் தொடர்பாக பிரபல ஆவணப்படுத்தாளர் எம்.ஐ.எம்.முகைதீன் தொகுத்த ஆவணத்தை நூலுருவில் வெளியிடுவதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொடுப்பதில் அஷ்ரப் ஹுஸைனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சமூகத்துக்கு நடந்த அநீதிகள் ஓர் ஆவணமாக இருப்பதற்கு இவர் காரணகர்த்தராக இருந்தார். 

சர்வதேச வை.எம்.எம்.ஏ. அறப்பணியின் தலைவராக அஷ்ரப் ஹுஸைன் பணிபுரிந்தார். அதன் ஆளுநராக ஹஸன் அல் பாசி சரிப் பணிபுரிந்தார். ஜனாதிபதி ஆர் பிரேமதாஸவின் பதவிக்காலத்தில் நோன்புக்கான  அரச ஏற்பாடுகளை வழங்குமாறு இந்த அமைப்பு சார்பில் இவர்களிருவரும் ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்தது. அன்று முதல் இன்று வரை நோன்புக்கான ஏற்பாடுகள் அரச அனுசணையுடன் வழங்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் உயர்மட்ட மகாநாடு நடத்தப்பட்டு பணிப்புரைகள் வழங்கப்படுகின்றன. நோன்பு காலத்தில் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறைகள் வழங்குவது, சம்பள முற்பணம் என்பன தொடர்பாக சுற்றுநிருபம் இதன்பின்பே வெளியிடப்பட்டது. 

கொழும்பில் தேசிய வைத்தியசாலையில் முஸ்லிம் ஒருவர் இறந்தால் குறிப்பாக வெளியூர்களைச் சேர்ந்தோர் பெரும் சிரமப்பட்டார்கள். அஷ்ரப் ஹுஸைன் இவ்வாறான ஜனாஸாக்களை நல்லடக்கம் செயும் பாரிய பொறுப்பை ஏற்று அதற்கான ஒரு சங்கத்தை உருவாக்கிச் செயற்பட்டார். கொழும்பு ஜனாஸா நலன்புரிச் சங்கம் மூலம் இப்பணி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இச்சங்கம் மூலம் வறிய மக்களுக்கு கபன் துணிகள் கூட பகிர்ந்தளிக்கப்பட்டன. தான் நோவாப்பட்டிருந்த நிலையில் இப்பணிக்காக பயன்படுத்தப்பட்டிருந்த வாகனத்தை முஸ்லிம்கள் பரவலாக வாழும் மாவனல்லைக்கு அன்பளிப்புச் செதார். மாவனல்லை ஹிங்குளோய மஸ்ஜிதுல் ஹுதாப் பள்ளிவாசலிற்கு இதனை அன்பளிப்புச் செதார். 1984 இல் உருவாக்கப்பட்ட திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர்கள் நிலையத்தின் வளர்ச்சியில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 

மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தினை உருவாக்குவதில் முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மதுடன் இணைந்து பணியாற்றினார். நீண்ட காலம் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பணிபுரிந்தார். 

1997 இல் அமைக்கப்பட்ட சிங்கள ஆணைக்குழுவின் முன்னிலையில் முஸ்லிம்கள் தொடர்பாக பல சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றுக்கு அக்காலத்தில் சிங்கள அச்சு ஊடகங்கள் முக்கியத்துவமளித்தன. இந்தத் தப்பான அபிப்பிராயங்களைக் கவனத்திற்கு இஸ்லாமிய நிலையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களது இணைப்புக் கவுன்சில் ஆணைக்குழு முன் தோன்றி சாட்சியமளித்தது. ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் இக்குழு முன் சாட்சியமளித்த குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். முஸ்லிம்கள் பற்றிய பல தப்பபிப்பிராயங்களை இதன் மூலம் தெளிவுபடுத்த முடிந்தது. இந்தக் கவுன்சிலின் செயலாளராக அஷ்ரப் ஹுஸைனே இருந்தார். 

இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது தனது நண்பர்களை இணைத்துக் கொண்டு அப்பகுதிகளுக்கு நேரில் விஜயம் செது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் எப்போதும் முன்னிலையிலே இருந்தார். அளுத்கம, தர்காநகர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து பல்வேறு உதவிகளை வழங்கும் இவரது குழுவில் நானுமிருந்தேன். நோயுற்ற நிலையிலும் இவர் வீடு வீடாகச் சென்று தர்காநகர், வெலிப்பனை மக்களுக்கு உதவிகளை வழங்கினார்.  

ஊடக சமூகத்துடன் இவர் நெருங்கிச் செயற்பட்டார். அனேகமாக வெள்ளிக்கிழமை நாட்களில் ஜும்ஆவுக்குப் பின் ஊடக சமூகத்தைச் சேர்ந்த பலர் அவரது வீட்டில் கூடி சமூகப்பிரச்சினைகள் பற்றி ஆராவது ஒரு சாதாரண நிகழ்வாக இருந்தது. ஊடகவியலாளர்களைப் பகற்போசனத்துக்கு அழைத்து உரையாடுவதில் அவருக்கு அலாதியான அக்கறை இருந்தது. ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு நிதி உதவிகளை வழங்கி அவர்களது பணிக்கு உதவியுள்ளார். 

சமூகத்தில் கவனிக்கப்படாதுள்ள பிரிவினருக்கு உதவுவதில் இவர் விசேட அக்கறை காட்டினார். கண்பார்வையற்றோருக்கு உதவுவதற்கு பல கண்சிகிச்சை முகாம்களை  நடத்தியதோடு, கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆலோசனை சபையிலும் பணிபுரிந்தார். 

நீதி நியாயத்துக்கும் அடக்குமுறைக்கும் எதிராக போராடுவதில் முன்னிலையில் இருந்தார். சில சந்தர்ப்பங்களில் இவர் இரகசியப் பொலிஸாரில் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த அரசின் இறுதியில் கடும்போக்காளர்கள் செயற்பாடு தொடர்பாக இவர் விடுத்த அறிக்கையை அடுத்து அரச உளவுப்பிரிவு உயரதிகாரிகள் இவரை விசாரித்த போது அந்த அதிகாரிகளையே அழைத்து முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துக்கூறும் கூட்டத்தினை தனது வீட்டிலே நடத்தினார்.

இவரது சமூக சேவைப்பணிகளுக்காக அமெரிக்க வாழ்வியல் நிறுவனம் அட்ஞுணூடிஞிச்ண ஆடிணிஞ்ணூஞுணீடணூஞீ ஐணண்டிணாதஞு கடிணணஞுஞிடூஞு ணிஞூ ச்ஞிடஞுதிஞுட்ஞுணணா அதீச்ணூஞீ என்ற விருதினை வழங்கி இவரை கௌரவித்தது. பூகோள மட்டத்தில் இந்த நிறுவனம் வெளியிடும் ஆவணத்தில் 2000 பிரபலங்களின் பெயரில் இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. 

1944.09.18 ஆம் திகதி பிறந்த இவர். அல் குர்ஆனை தமிழில் மொழி பெயர்ப்பதற்கு நிதியுதவியளித்த மர்ஹும் என்.எம்.எம்.ஹனிபா அவர்களது மகள் மாரியதுல் சிப்தியாவை தனது வாழ்க்கைத் துனைவியாக கொண்டார். இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகளும், ஓர் ஆண் பிள்ளையும் இருக்கின்றார்கள். 

நோன்புக்கு முன் புனித மக்கா சென்று உம்றாவை நிறைவேற்றி வந்து சில நாட்களில் கடும் நோவாப்பட்ட நிலையில் இவர் தனது 71 ஆவது வயதில் இவர் இவ்வுலகை வாழ்வை விட்டுப் பிரிந்தார். மற்றவர்களுக்கு உதவுவதனை பெரும் நிறைவாகக் கண்ட அஷ்ரப் ஹுஸைனின் வாழ்வு முன்மாதிரி மிக்கது. அவரது இறுதிக்கிரியையில் கலந்து கொண்ட பெரும் தொகையான மக்கள் அவரது சேவைக்களித்த அங்கீகாரமாகும்.

2 comments:

Powered by Blogger.