Header Ads



"உள்நுழைந்து அவதானித்தபோது, அப்துர் ரஹ்மான் கண்ட பல அதிர்ச்சிகள்"

'நமது சமூகத்தில் புற்று நோயாகப் பரவியுள்ள சீதனப் பிரச்சினையினை இல்லாதொழிப்பதற்கான உடனடி வேலைத்திட்டமொன்று அவசியமாகும். ஜம்இயத்துல் உலமா உள்ளிட்ட சகல சமூக சமய நிறுவனங்களும் இணைந்து கொண்டதாக இந்த வேலைத்திட்டம் தீவிரமாக முழுமையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். 

காத்தான்குடி ஜம்இயத்துல் உலமாவுக்கு மல்டிமீடியா புறஜெக்டர் ஒன்றினை கையளிக்குமுகமாக நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே இவர் இவ்வாறு தெரிவித்தார் மேற்படி நிகழ்வு காத்தான்குடி ஜம்இயத்துல் உலமாவின் காரியாலயத்தில் இடம் பெற்றது. காத்தான்குடி ஜம்இயத்துல் உலமாவின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்களும் NFGGயின் காத்தான்குடிப் பிராந்திய தலைமைத்துவ சபை உறுப்பினர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

"நம் சமூகத்தில் வெளித்தோற்றத்தில் தெரிகின்ற பல அம்சங்கள் நம் சமூகத்தின் உண்மையான நிலைமைகளையும் பாரதூராமான யதார்த்தங்களையும் மறைத்து விடுகின்றன. சமூகத்தில் உள்நுழைந்து நிலைமைகளை அவதானிக்கின்ற போது பல அதிர்ச்சியான அவதானங்களை நாம் காண்கின்றோம்.

நம் சமூகத்தின் ஒழுக்க நிலவரங்கள் , மார்க்க கலாசார வழிமுறைகள், மனிதநேய மனோநிலைகள், கல்வி நிலவரங்கள், பொருளாதாரப் பிரச்சினைகள் என பல தளங்களில் மிகவும் கவலைக் கிடமான அவதானங்களே கிடைக்கின்றன. தொலைக்காட்சியும் கையடக்கத் தொலைபேசிகளும் சமூக வலைத்தளங்களின் பாவனைகளும் பல மோசமான விளைவுகளுக்கும் ஒழுக்க சீர்கேடுகளுக்கும் காரணமாக இருக்கின்றன. 

மனிதனின் செயல்கள் ஒவ்வொன்றுமே மனித உள்ளங்களில் ஏற்படும் பாதிப்புக்களின் விளைவுகளேயாகும். அந்த வகையில், பொதுவாக எல்லோரினதும் குறிப்பாக நமது இளம் சமுதாயத்தினரினதும் உளவியலிலும் மனோ நிலையிலும் மோசமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றவைகளாகவே தொலைக்காட்சிகளும் கையடக்கத் தொலைபேசிகளும் இன்டர்நெற் பாவனைகளும் சமூக வலைத்தளங்களும் காணப்படுகின்றன.

சமூகத்தில் ஒழுக்க கலாசார சீர்கேடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனக் கவலைப்படுகின்ற நாம் அந்த சீர்கேடுகளுக்குக் காரணமாக அமைந்திருக்கும் இந்தக் காரணிகளைக் கட்டுப்படுத்துவது பற்றி அதிகம் பேசுவதாகவோ அல்லது காத்திரமான எதனையும் செய்வதாகவோ இல்லை. நமது சமூகத்தையும் அதன் மார்க்க விழுமியங்களையும் பேணிப் பாதுகாக்க வேண்டுமெனில் முதலில் நமது மக்களின் உள்ளங்களைப் பாதுகாப்பதற்கென்று ஒரு விரிவான சமூக விழிப்புணர்வு மற்றும் மார்க்க வழிகாட்டல் வேலைத் திட்டம் அவசியப்படுகிறது.

அது போன்றுதான் நம் சமூகத்தில் காணப்படுகின்ற பொருளாதாரப் பிரச்சினைகளும் வறுமை நிலையுமாகும். வெளியில் தெரிகின்ற பணக்காரத்தனமான தோற்றப்பாடுகள் கண்டு நம்மை ஏமாற்றி விடக்கூடாது. சமூகத்தில் சற்றே உள்நுழைந்து பார்க்கின்ற போது கண்ணீர் வடிக்கக் கூடிய நிலையில் ஏராளமான மக்கள் வறுமையின் மடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது இப்படியிருக்க இன்னுமொரு பக்கத்தில் நமது பள்ளிவாயல்களை மிகவும் ஆடம்பரமான முறையில் அழகு படுத்தப்படுவதில் ஆர்வம் காட்டும் மனோநிலை நம்மத்தியில் அதிகரித்து செல்வதனையும் பார்க்கின்றோம்.

இதில் பல விடயங்கள் தெட்டத் தெளிவான வீண் விரயங்கள் என்பதும் நமக்குத் தெரியும். வீண்விரயம் செய்ய வேண்டாம் என என இறைவன் மிகத் தெளிவாக கட்டளையிட்டிருக்கும் போது இறைவனின் பெயரால் என்ன நியாயங்களின் அடிப்படையில் இந்த வீண் விரயங்களை அனுமதிக்க முடியும்.

நம் சமூகத்தில் பரவலாக இஸ்லாமிய மார்க்கம் போதிக்கப்படுகிறது. அந்த மார்க்கம் ஏற்படுத்தும் பிரதான தாக்கங்களாக மனச்சாட்சியும் மனித நேயமும் சகோதரத்துவமும் வளர வேண்டும். ஆனால் நம் சமூகத்தில் நடக்கின்ற சில விடயங்களைப் பார்க்ன்ற போது மனச்சாட்சியும் மனித நேயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

அண்மையில் ஒரு சம்பவத்தை நான் அறிந்தேன். தனது பெற்றோர் ஒருவரின் மரணத்திற்காக தனது கடையை மூடிய ஒரு முஸ்லிம் சகோதரர் , தம்மிடம் பல வருடங்களாக விசுவாசமாக வேலை செய்கின்றவர்களின் சம்பளத்தை அந்த லீவு நாட்களுக்காக கழித்துக் கொண்ட மனிதபிமானமற்ற சம்பவத்தைக் கேள்விப்பட்ட நான் அதிர்ச்சியடைந்தேன். போதிக்கப்படும் மார்க்கம் ஏன் குறைந்த பட்ச மனிதாபிமானத்தை கூட அவரிடம் ஏற்படுத்தவில்லை ?

அது போலவேதான் நம் மத்தியில் புற்று நோயாக பரவிக்காணப்படுகின்ற சீதனக் கொடுமையுமாகும்.  திருமணம் என்ற ஒரு புனிதமான கடமையின் பெயரால் அடுத்தவர்களின் சொத்துக்களையும் பொருளாதாரத்தையும் குறிவைத்துக் கொள்ளையடிக்கின்ற நடவடிக்கைகளாகவே இந்த சீதன நடைமுறை உருவாகியிருக்கிறது. சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் இது பரவலாக நடந்து கொண்டே வருகின்றது.

இந்த சீதனப் பிரச்சினை ஏற்படுத்தும் சமூக சீரழிவுகள் பற்றி நாம் எல்லோரும் ஏற்கனவே தாராளமாகப் பேசி விட்டோம். இதனை ஒழிப்பதற்கான சமூக மட்டத்திலான நடவடிக்கைகள் ஒன்றினை கடந்த 1990 களில் ஜம்இயத்துல் உலமாவும் சம்மேளனமும் இணைந்து மேற்கொண்டதை நான் இங்கு நினைவு கூறுகின்றேன்.

அது சில நல்ல மாற்றங்களையம் தந்திருக்கிறது. அதன் பின்னர் சமூக மட்டத்தில் அவ்வாறான வேலைத்திட்டம் பாரிய அளவில் முன்னெடுக்கப்படவில்லை. இந்த விடயத்தில் இப்போதாவது நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இதனை முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் வகையில் சமூகத்திலுள்ள மார்க்க சமூக நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு பாரிய கூட்டுழைப்பினை செய்ய வேண்டும் .

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய நாம் அரசியலை வழமை போன்று வெறுமனே அதிகாரங்களையும் பதவிகளையும் இலக்கு வைத்து மேற்கொள்பவர்கள் அல்ல. மார்க்க விழுமியங்களும் ஒழுக்கமும் கல்வியறிவும் மனித நேயமும் சமூக நீதியும் கொண்ட ஒரு சமூகக் கட்டமைப்பினை உருவாக்குவதே எமது பரந்த நோக்கமாகும். அந்த சமூக மாற்றத்திற்கான ஒரு உபாயமாகவே நாம் அரசியலைப் பார்க்கின்றோம்.

பல சமூக மார்க்க விடயங்கள் தொடர்பில் காத்தான்குடி ஜம்இயத்துல் உலமாவின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டறியும் வகையில் கடந்த காலங்களில் பல சந்திப்புக்களை நாம் மேற் கொண்டிருக்கிறோம்.

அந்த வகையில் எமது சமூக மாற்றத்திற்கான உழைப்பில் தங்களது தொடர்ச்சியான ஆலோசனைகளை நாம் பெற்றுக் கொள்ள வரும்புகின்றோம். இந்தப் பணியில் ஜம்இயத்துல் உலமா உட்பட சகல சமூக மார்க்க நிறுவனங்களோடும் கூட்டிணைந்து பணியாற்றுவதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம்."

1 comment:

  1. Meaningful assessment of ground situation of Srilankan
    Muslims . Unmasking of the hypocrisy is the need of the
    hour . I would try to get his attention to more
    terrifying experience on what Muslims are capable of
    doing to very innocent , helpless , orphaned , sick
    and elderly and young relatives who are their next door.
    One should visit the place and see it for himself to
    find the truth . The neighbourhood spectators include
    members of religious organizations , Ulema , blood
    relatives , professionals , wealthy , politicians
    and people of all walks of life . One must see the
    sufferers and the culprits . I fully agree with Mr
    Rahman's view on our Muslims sorry state which is
    alarmingly becoming very frustrating .

    ReplyDelete

Powered by Blogger.