Header Ads



துருக்கியில் போலீஸாருக்கு கூடுதல் அதிகாரம் - 1000 தனியார் பள்ளிகள் மூடப்பட்டன.

துருக்கியில் ஆட்சியைக் கவிழ்க்க ராணுவத்தினரின் ஒரு பிரிவினர் கடந்த வாரம் முயன்றதன் எதிரொலியாக, போலீஸாருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் புரட்சியை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 1,000 தனியார் பள்ளிகள் மூடப்பட்டன.

துருக்கி ராணுவத்தின் ஒரு பிரிவினர், அதிபர் எர்டோகனின் ஆட்சியைக் கவிழ்க்க கடந்த வாரம் முயற்சி செய்தனர். எனினும் ராணுவம் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, புரட்சியில் பங்கேற்றதாக மூத்த ராணுவ தளபதிகள், கடற்படை அதிகாரிகள் உள்பட ஆயிரக்கணக்கான வீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீதி மற்றும் கல்வித் துறையைச் சேர்ந்த ஏராளமானோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

கிளர்ச்சியாளர்களை விரைவாகக் களையெடுப்பதற்காக நாட்டில் 3 மாதங்களுக்கு அவசர நிலை அமல்படுத்தப்படுவதாக அதிபர் எர்டோகன் அறிவித்தார்.

இந்தச் சூழலில், காவல்துறையினருக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கி அவர் சனிக்கிழமை உத்தரவிட்டார். இதன்மூலம், சந்தேக நபர்களின் மீது எந்தக் குற்றச்சாட்டையும் பதிவு செய்யாமல் ஒரு மாதம் வரை காவலில் வைத்திருக்க போலீஸாருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, அரசுக்கு எதிரானதாகக் கருதப்படும் 1,000 தனியார் பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு கைது செய்யப்பட்ட வீரர்களில் 1,200 பேரை அரசு விடுதலை செய்துள்ளது.

No comments

Powered by Blogger.