Header Ads



கொழும்பில் சில வீதிகள் மூடப்படும், தெற்கு அதிவேகப் பாதையிலும் விசேட வசதிகள்

மேதினத்தை முன்னிட்டு கொழும்பின் சில வீதிகளில் இன்றிரவு முதல் வாகனம் நிறுத்துவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

அதன் பிரகாரம் சங்கராஜ மாவத்தை( ஆமர் வீதி), மாளிகாவத்தை வீதி, ஜயந்த வீரசேகர மாவத்தை, பஞ்சிகாவத்தை வீதி, தொடக்கம் மருதானை மேம்பாலம் வரையான பகுதியில் வாகனங்கள் நிறுத்த முடியாது.

மருதானை வீதி தொடக்கம், மருதானை பாலத்திலிருந்து பொரளை வரையான வீதி, ஆனந்த ராஜகருணா மாவத்தையில் புஞ்சி பொரளை தொடக்கம் வெலிக்கடை சிறைச்சாலை வரையான பகுதி, பூங்கா (உத்தியான) மாவத்தையில் மருதானை தொடக்கம் பேஸ்லைன் வீதி வரையான பகுதிகளிலும் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக ஆமர் வீதி, பேஸ்லைன் வீதி, ஹைலெவல் வீதியில் நுகேகொடை தொடக்கம் டிக்மன் வீதி வரையான பகுதி, பார்க் வீதி, கிருல வீதி ஆகிய பிரதேசங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றிரவு தொடக்கம் மேதினக் கூட்டங்கள் முடிந்து பொதுமக்கள் முற்றாக கலைந்து செல்லும் வரை இந்தத் தடை உத்தரவு அமுலில் இருப்பதுடன், இப்பிரதேசங்களில் போக்குவரத்துப் பொலிசார் விசேட கடமைகளிலும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

2

மேதினத்தை முன்னிட்டு தெற்கு அதிவேகப் பாதையில் விசேட வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக அதன் செயற்பாட்டு முகாமையாளர் சமன் ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

மேதினக் கூட்டங்களுக்கு பயணிகளை ஏற்றி வரும் பேரூந்துகளை முன்னிட்டு இந்த விசேட வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளது.

அதிவேகப் பாதையின் கட்டணம் அறவிடும் மையங்களில் மேதினக் கூட்டத்துக்காக பொதுமக்களை ஏற்றிச் செல்லும் பேரூந்துகள் வரிசையில் நிற்க வேண்டியிராது என்றும், அதற்காக விசேட உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு தனியான நுழைவு வாயிலூடாக குறித்த பேரூந்துகள் செல்ல வழியேற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளைய மேதினக் கூட்டங்களை முன்னிட்டு பெருமளவான வாகனங்கள் தெற்கு அதிவேகப் பாதையை பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.