Header Ads



தமிழில் தேசிய கீதம் - தமிழ் மொழி பேசுவோரிடம் புதிய புத்துணர்வு

இலங்கை அரசியல் வரலாற்றில் 67 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக நேற்று சுதந்திர தின தேசிய நிகழ்வில், மஹிந்த அணி மற்றும் பௌத்த அடிப்படைவாத அமைப்புக்களின் பலத்த எதிர்ப்புக்கும் மத்தியில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருப்பது சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் இந்தத் தீர்மானத்துக்கு அடிப்படைவாதிகள் பலர் எதிர்ப்புத் தெரிவித்த போதும் நேற்றைய சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட உயர் இராணுவ அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது கண்கள் பனிக்க மரியாதை செலுத்தியதைக் காணக்கூடியதாகவிருந்தது.

நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த முயற்சியானது எதிர்காலத்தில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்பப்படியாக இருக்கும் என பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கை சுதந்திரம் பெற்று 1949ம் ஆண்டு கொண்டாடப்பட்ட முதலாவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அன்றைய தினம் டொரிங்டன் சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிற்பகல் 4 மணிக்கு தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுமார் 75 நிமிடங்களின் பின்னரே சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அதன் பின்னரான சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. ஆட்சியில் இருந்தவர்களால் உத்தியோகப் பற்றற்ற முறையில் இது தடைசெய்யப்பட்டே இருந்தது.

இந்தநிலையில் கடந்த மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே 68வது சுதந்திர தினத்தில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஜனாதிபதியும், பிரதமரும் எடுத்திருந்தனர்.

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமை வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்ப்பதற்கும் அரசாங்கம் முன்வரவேண்டும் எனப் பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு காலி முகத்திடலில் நேற்று கொண்டாடப்பட்ட 68வது தேசிய சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் பாடப்பட்டமை சிறப்பம்சமாக அமைந்தது.

நிகழ்வின் இறுதியில் எவரும் எதிர்பார்த்திராத வகையில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமை அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை அளித்திருந்தது.

நிகழ்வில் குழுமியிருந்த மக்கள் குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்கள் இதனை பெரும் கௌரவத்துடன் அங்கீகரித்து உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொண்டமையை அவதானிக்க முடிந்தது.

ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றியதன் பின்னர் சிங்கள மொழியில் தேசிய கீதமும் அதனையடுத்து ஜயமங்கள பாடலும் பாடப்பட்ட பின்னர் அனைவரும் தமது ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர். அப்போது எதிர்பார்க்கப்பட்டவாறு தமிழில் தேசிய கீதம் பாடப்படாமை குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் கவலையையும் அளித்திருந்தது.

நிகழ்ச்சி நிரலுக்கமைய அனைத்து நிகழ்வுகளும் நிறைவடைந்ததன் பின்னர் தேசிய கீதம் பாடுவதற்காக அனைவரையும் எழும்பி நிற்குமாறு வேண்டப்பட்டது. அப்போதே இன்ப அதிர்ச்சியாக தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது.

தேசிய கீதத்தின் இரண்டு வரிகள் பாடப்பட்டதன் பின்னர் தான் அது தமிழ் மொழி மூலமானது என்பதனை தாங்கள் தெரிந்து கொண்டதாகவும் சிங்கள மொழி மூல தேசிய கீதத்துக்கு ஒப்பாகவே தமிழ் மொழி மூல தெசிய கீதமும் இருப்பதால் இதில் பாரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை என்றும் சிங்கள மொழி பேசும் மக்கள் மனத்திருப்தியுடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதனை செவிமடுக்க முடிந்தது.

1 comment:

  1. A great leap forward towards reconciliation.Weldone Maithree Ranil,Chandrika,and my Sinhalese brethren who are for it.Jeyawewa!

    ReplyDelete

Powered by Blogger.