Header Ads



தமிழில் தேசிய கீதம் என்ற விடயம், சிங்கள மக்களுக்கு நாம் செய்த உளவியல் சிகிச்சை - மனோ

”இலங்கையர் அடையாளம்” என்பது “சிங்களம் மட்டும் அடையாளம்” அல்ல; தேசிய இனங்களின் சகவாழ்வு என்பது ஒரு “கொக்டெயில் பார்ட்டி” அல்ல, தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது தொடர்பில் தமிழ் பேசும் மக்கள் மெய்சிலிர்த்து, கண்கலங்கி, அகமகிழ்ந்து விடவில்லை.

தமிழில் தேசிய கீதம் என்பதை தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பண்டிகைக்கால இனிப்பாக கருதிவிட கூடாது. ஆகிய உண்மைகளை சிங்கள அரசியல் தலைவர்கள் தெளிவாக அறிந்துக்கொள்ள வேண்டும்.

இதை அரசாங்கத்திலும், எதிர்கட்சியிலும் இருக்கின்ற அனைத்து சிங்கள சகோதர அரசியல்வாதிகளுக்கும் கூறுகிறேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் தொழில் புரிந்து வாழும் இலட்சக்கணக்கான இலங்கை பணியார்களுக்காக விசேடமாக நடத்தப்பட்ட “கொழும்பு டெலிவிசன்” நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு கூறியுள்ளார். அதன்போது மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

உண்மையான சகவாழ்வு என்றால் அங்கே அனைத்து இனங்களின், மொழிகளின், மதங்களின் தனித்துவங்களும் அங்கீகரிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

அதைவிடுத்து, எல்லாவற்றையும் ஒரே பாத்திரத்தில் ஊற்றி உருவாக்கும் “கொக்டெயில்” பானமாக சகவாழ்வை கருத முடியாது. தேசிய சகவாழ்வு அமைச்சரான எனது பார்வை அதுதான். சகவாழ்வு என்றால் பக்கத்து பக்கத்தில் இருந்தபடி ஒருவரை ஒருவர் அங்கீகரித்து வாழ்வது ஆகும்.

அதனால்தான் “தேசிய நல்லிணக்கம்” என்ற வார்த்தையை தவிர்த்து “தேசிய சகவாழ்வு” என்ற வார்த்தை பிரயோகத்தை எனது அமைச்சின் பெயர் மாற்றத்தின் போது நான் கேட்டு வாங்கி கொண்டேன்.

இதை இந்நாட்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பெரும்பான்மை அரசியல், சமூக, மத தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணம் சென்று வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட அனுமதி வழங்கப்பட்டதை எடுத்து கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் நான் கடந்த வருடம், தேசிய நிறைவேற்று சபையில் இருந்த போதும் தமிழ் மொழியில் தேசிய கீதம் விவகாரம் பற்றி பேசியதையும், அதையடுத்து அது தேசியரீதியாக பேசப்பட்டதையும், அவர் அறிவார்.

ஏனெனில் அப்போதும் வெளிவிவகார அமைச்சராக அவர் இந்த விவகாரத்தை கொண்டு போய் ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் பேசினார்.

அன்றும், இன்றும், அவர் அதை ஜெனீவாவிலும், யாழ்ப்பாணத்திலும் ஏன் பேசினார் என எனக்கு தெரியாது.

ஆனால், யாழ்ப்பாணத்தில் வாழும் எனது மானமுள்ள தமிழ் உடன்பிறப்புகளுக்கு அவர் பண்டிகை கால அரசியல் இனிப்பு கொடுக்க முயலவில்லை என நான் நம்புகிறேன்.

ஏனெனில் மானமுள்ள யாழ்ப்பாண தமிழ் உடன்பிறப்புகளுக்கு எவராவது பண்டிகை கால அரசியல் இனிப்பு கொடுக்க முயன்றால், அவர்கள் அதை திருப்பி துப்பி விடுவார்கள் என்பது எனக்கு தெரியும்.

சிறுவர்களுக்கு பண்டிகை காலங்களில் வழங்கும் இனிப்பை போன்று, தமிழ் மக்களுக்கு எவராவது அரசியல் இனிப்பு கொடுத்தால், அதை யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, நாடெங்கிலும் நாம் துப்பிவிட வேண்டும் என்பது என் நிலைப்பாடும் ஆகும். 

இந்த தமிழில் தேசிய கீதம் விடயத்தை முன்னெடுத்தது நான்தான். அன்று தேசிய நிறைவேற்று சபையில் முன்னெடுத்தேன்.

ஏனெனில் நான் அன்று பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் இருக்கவில்லை. இப்போது இரண்டு வாரங்களுக்கு முன்னர், “இலங்கையர் அடையாளம்” என்ற அமைச்சரவை உபகுழுவில்,

சுதந்திர தின தேசிய நிகழ்வில் 67 வருடங்களுக்கு பிறகு தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நான் ஏனைய அங்கத்தவர்களுடன் சேர்ந்து எடுக்க வைத்தேன்.

இந்த உபகுழுவுக்கு இதன்காரணமாக நண்பர்கள் வாசுதேவ நாணயக்காரவையும், எம். ஏ. சுமந்திரனையும் நான் அழைத்திருந்தேன்.

இதை நாம் செய்தது, தமிழ் மக்களை மகிழ்விக்க அல்ல. தமிழ் மக்களுக்கு பண்டிகை கால அரசியல் இனிப்பு கொடுக்க அல்ல. உண்மையில் தமிழ் மக்கள் இதுபற்றி பெரிதும் அலட்டிக்கொள்ள தேவையில்லை என்பதுவே என் நிலைப்பாடு.

இந்த தமிழில் தேசிய கீதம் என்ற விடயம், இந்நாட்டு சிங்கள மக்களுக்கு நாம் செய்த உளவியல் சிகிச்சை ஆகும்.

இந்த சிகிச்சையில் இன்று சிகிச்சையும் வெற்றி பெற்று விட்டது. நோயாளியும் பிழைத்துக்கொண்டார். வைத்தியரின் தலையும் தப்பியது.

இனவாத பூதம் நினைத்தபடி அவ்வளவு கறுப்பு இல்லை என்ற உண்மை தெரிய வந்துள்ளது. இனவாதிகள் முகங்களில் கருப்பு மையை பூசிக்கொண்டுள்ளர்கள். இவைதான் உண்மைகள்.

2 comments:

  1. Ungaludan oppidum podhu singalavarvarhal evvalavo paraviyillai...muthalil yalpana thamilarukku adutthavarhalin urimaiyai patthi katrukkodokkavum.

    ReplyDelete
  2. மிகச்சரியான பேச்சு. இப்படிப் பேசக்கூடிய யோக்கியதையும் திரு. மனோ கணேசனுக்கு உள்ளது. இதேபோல நமது உரிமைகள் தொடர்பாக உரையாற்றக்கூடிய யோக்கியதை நமது அரசியல்வாதிகளில் எவருக்கேனும் உண்டா..?

    இதை நான் ஒரு சவாலாகவே கேட்கின்றேன். நடைமுறைக்குச் சாத்தியமான உருப்படியான கொள்கையின்றி ஏனோ தானோவென்று வாழ்ந்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு வால்பிடித்துத் திரிபவர்களும் பதில் கூறட்டும் பார்ப்போம்!

    ReplyDelete

Powered by Blogger.