Header Ads



நொறுக்குத்தீனியும் சர்க்கரை நோயும்


ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவைத் தவிர டீ, காபி, பிஸ்கட், வடை, பஜ்ஜி, முறுக்கு, பானிபூரி, குளிர்பானம்… என நமது சாப்பாட்டு பட்டியல் நீள்கிறது. ஒரு வேளை அல்லது இரண்டு வேளை உணவை மட்டுமே உட்கொண்டு, காட்டிலும் மேட்டிலும் வேலை செய்தனர் நம் முன்னோர். இன்றோ, கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து வேலை பார்த்தாலுமே கூட ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை நொறுக்குத் தீனி இல்லாமல் இருக்க முடிவது இல்லை. இதனால், உடல்பருமன், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு என ஏராளமான பிரச்னைகள்.

நொறுக்குத் தீனி என்றால் வெறும் முறுக்கு, பஜ்ஜி என்று சுருக்கிவிட முடியாது. நொறுக்குத் தீனிகளில் கலோரிகள் அதிகம். கொழுப்புச்சத்து, மாவுச்சத்து இரண்டும் அதிக அளவில் இருக்கும். தேவை இல்லாத நேரத்தில் சாப்பிடும் எந்த ஓர் உணவையுமே நொறுக்குத் தீனியாகத்தான் கருதமுடியும். நொறுக்குத் தீனிகளில் செயற்கை நிற மூட்டிகளும் சுவையூட்டிகளும் சேர்க்கப்பட்டிக்கும். இதனால் தான் ஒரு முறை வாங்கிச் சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் வாங்கிச் சாப்பிடத் தூண்டுகின்றன. இவை நீண்டகாலம் கெட்டுப் போகாமல் இருக்க, பதப்படுத்திகளைச் சேர்க்கின்றனர். மேலும், உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் பாலிதீன் போன்றவற்றால் பாதுகாக்கப்படுகிறது.

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளின் ஆபத்துகள் குறித்து, பல ஆய்வுகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன. பாக்கெட் உணவுகளில் வேதியல் பொருட்கள், உப்புகள், பதப்படுத்திகள், நிறமூட்டிகள் போன்றவை கலக்கப்பட்டிருப்பதால், இவற்றை உண்ணும் போது பல வகையான ஹார்மோன் பிரச்னைகள் வருகின்றன. அதில் மிக முக்கியமானது சர்க்கரை நோய். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பலருக்கும் ஹார்மோன் சமச்சீரின்மைப் பிரச்னை சமீபகாலங்களில் அதிகரிக்க, இந்த உணவுகள் முக்கியக்காரணி.

இதில் இன்னொரு வகை ஜங்க் புட். பீட்சாவும் பர்கரும் மட்டும் அல்ல, சமோசாவும் பஜ்ஜிகளும் ஜங்க்ஃபுட் தான். பேக்கரிகளில் விற்கப்படும் உணவுகள், ஐஸ்க்ரீம், கேக் என கிட்டத்தட்ட அனைத்து நொறுக்குத் தீனிகளும்‘ஜங்ஃபுட்’என்ற வரையறைக்குள் அடங்கி விடுபவை. அதிக சர்க்கரை, அதிக உப்பு, அதிகக் கொழுப்பு உள்ள உணவுகள் அனைத்துமே ஜங்க்ஃபுட்தான். இதனால் உடல் பருமன் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. கூடவே, சர்க்கரை நோய் முதல் புற்று நோய் வரை பல நோய்களும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் அனைத்துமே உடலுக்குக்கேடு விளை விக்கக்கூடியவைதான். அப்பளம், உளுந்தவடையில் ஆரம்பித்து சிக்கன் ரைஸ், நூடுல்ஸ், காலிஃபிளவர் வறுவல், காளான் ஃபிரை என எல்லாமே பாதிப்பைத் தருபவை. எண்ணெயில் பொரித்த உணவுகள், கெட்ட கொழுப்பை அதிகரிக்கின்றன. ஒரு முறை சூடுபடுத்தப்பட்ட, சமைக்கப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்துவதால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

நொறுக்குத் தீனிகள் சாப்பிடும் எல்லோருக்கும் சர்க்கரை நோய் வருவது இல்லை. சர்க்கரை நோய் வருவதற்கு உடல் உழைப்பு, உணவுப் பழக்கம் எனப் பல காரணிகள் உள்ளன. அதிக அளவு மாவுச்சத்துள்ள நொறுக்குத் தீனிகளை உண்ணும் போது, இன்சுலின் தேவை அதிகமாகி விடுகிறது. கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடும் போது, உடல் பருமன் ஏற்படுகிறது. இந்தக் காரணங்களால் சிலருக்குச் சர்க்கரை நோய் வரக்கூடும். உடற்பயிற்சி இல்லாமல் நொறுக்குத் தீனி சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாகிறது.

No comments

Powered by Blogger.