Header Ads



மைத்திரி நாளை பிரான்ஸ் போகிறார், மகிந்த சீனா செல்கிறார்..?

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நாளை மோல்டாவிலிருந்து பிரான்ஸ் நோக்கி பயணப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக மோல்டா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, ஐ.நா. சபை நிகழ்வொன்றில் கலந்து கொள்ள பிரான்ஸ் செல்லவுள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் உலகத்தலைவர்களுக்கான கருத்தரங்கு இம்முறை பிரான்சில் நடைபெறவுள்ளது.

1992ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 21வது உச்சிமாநாடு இதுவாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உள்ளிட்ட உலகின் எண்பது நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

2

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனவரி மாதம் சீனாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

கடந்த ஜனவரி மாதம் அதிகாரத்தையும், ஆட்சியையும் இழந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ எந்தவொரு நாட்டுக்கும் இதுவரை பயணம் மேற்கொள்ளவில்லை.

அந்தவகையில் தேர்தல் தோல்வியின் பின்னர் அவரது முதலாவது வெளிநாட்டு விஜயம் சீனாவுக்கு மேற்கொள்ளப்படவுள்ளது.

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடாக சீனா விளங்கியிருந்தது.

மஹிந்தவின் மூன்றாவது புதல்வர் செய்மதியொன்றை விண்ணுக்கு ஏவுவதாக பரப்பப்பட்ட செய்திகளுக்கு உறுதுணையாக இருந்தது முதல் ஷிரந்தியின் சிரிலிய சவிய அமைப்புக்கு கோடிக்கணக்கில் அள்ளிக்கொடுத்தது வரை ராஜபக்ஷ குடும்பத்தின் நட்பு நாடாக சீனா மாறியிருந்ததாக குற்றச்சாட்டுக்கள் அதிகம் உண்டு.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின்போதும் மஹிந்த தரப்பின் வெற்றிக்காக சீனா மறைமுகமாக உதவி செய்திருந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் எதிர்வரும் ஜனவரியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள மஹிந்த ராஜபக்ஷ அங்கு இரண்டு வாரங்கள் தங்கியிருக்க உத்தேசித்துள்ளார். அக்காலப்பகுதியில் அவர் சீன அரசின் முக்கிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதேவேளை மஹிந்த ராஜபக்சவின் வீழ்ச்சிக்குப் பின்னர் சீனாவின் செல்வாக்கு குறைந்து மைத்திரி, ரணில் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவினதும், இந்தியாவினதும், செல்வாக்கு இலங்கையில் அதிகரித்துள்ள சூழ்நிலையில் ஆட்சியிழந்த மஹிந்த ராஜபக்ச சீனா பயணமாவது பல்வேறு மட்டங்களில் நோக்க வேண்டியிருப்பதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

No comments

Powered by Blogger.