Header Ads



தேர்தலுக்குப் பின், வலுவடையவுள்ள மைத்திரியின் கரம் !

-நஜீப் பின் கபூர்-

வருகின்ற எல்லாத் தேர்தல்களும் தீர்க்கமான தேர்தல்கள் என்று சொல்லப்படுவது வழக்கம். என்றாலும் நமது நாட்டில் நடந்த கடந்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு தீர்க்கமான தேர்தல் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கமாட்டாது. அதே போன்று இந்த முறை நடக்கின்ற பொதுத் தேர்தலும் ஒரு வித்தியாசமான தேர்தலாக அமைந்து காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளின் போது பெரும் அட்டகாசமாக நடந்து கொள்வார்கள். அரச வளங்களை சர்வசாதாரணமாக பாவிப்பார்கள். ஆனால் இந்தத் தேர்தலில் இதுவரை அப்படி ஏதும் அட்டகாசங்கள் நடப்பதாகத் தெரிய வில்லை. ஏதோ மேற்கத்திய நாடு ஒன்றில் நடக்கின்ற ஒரு தோதலைப் போன்றுதான் இந்தத் தேர்தல் அமைந்து காணப்படுகின்றது. இந்தக் காரியத்தைக் கச்சிதமாக முன்னெடுத்து வரும் தேர்தல் ஆணையாளரை நாம் மீண்டும் மீண்டும் நினைவு கூருவதில் தவறிருக்காது.

நாம் கொழும்பு ரிப்போர்ட் என்ற தமிழ் இணையத்தளத்தின்; ஊடாக மேற் கொண்ட ஆய்வுகளில் இருந்து இந்தத் தேர்தல் தொடர்பான பல தகவல்கள் தெரிய வந்திருக்கின்றது. அதனை நமது தினக்குரல் ஊடாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.

தேர்தலில் எவருக்கும்  அருதிப் பெரும்பான்மை கிடையாது.

எனவே 17ம் திகதி தேர்தல் முடிவைத் தொடர்ந்து நடக்கின்ற கட்சி தாவல்களே பிரதமர் ரணிலா அல்லது மஹிந்தவா என்பதனை முடிவு செய்யும். எனவே பல்டிக்காரர்கள் விடயத்தில் நல்லாட்சியை எதிர்பார்க்கும்  வாக்காளர்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

சிரேஷ்ட அரசியல்வாதிகள் பலருக்கு விருப்பு வாக்கு விடயத்தில் பாரிய பின்னடைவுகள் காத்திருக்கின்றது. கொழும்பில் தற்போதய பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவின் நிலை கௌரவமானதாக அமையமாட்டாது என்பது கொழும்பு ரிப்போர்ட் தருகின்ற மற்றுமொரு ஆய்வில் சொல்லப்பட்டிருக்கின்றது.

குருனாகலையில் மஹிந்ததான் அதிக விருப்பு வாக்ககளைப் பெறுவார் என்றாலும் அது 5-6 இலட்சம் என்று எட்ட வாய்ப்பில்லை. தயாசிரிதான் இரண்டாம் நிலைக்கு வருவார். சிரேஷ்ட அரசியல்வாதிகள் பலர் மண்கவ்வி, இளையவர்களுக்கு அதிக வாய்ப்பு இந்தத் தேர்தலில்கிடைக்க இருக்கின்றது.

ஐ.ம.சு.கூ. வெல்பவர்களில் கனிசமானவர்கள்  நாம் கடந்த முறை குறிப்பிட்டது போன்று ஜனாதிபதி மைத்திரி  தரப்பிற்கு வந்து அமைகின்ற தேசிய அரசில் இணைந்து கொள்ள இருக்கின்றார்கள் என்றும் தெரிய வருகின்றது. இந்தத் தொகை நாம் கடந்த முறை குறிப்பிட்டதை விட அதிகமாக இருக்கும். 

வருகின்ற தேர்தலைத் தொடர்ந்து அமைகின்ற அமைச்சரவை புதிய அரசியல் திருத்தத்திற்கு அமைவாக நியமனம் செய்யப்பட இருப்பதால் அமைச்சர் பகிர்வில் கடுமையான அதிருப்த்தி நிலை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றது. 

இதனை சாதகமாக வைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் நல்ல விலைக்கு விலை போக அதிக வாய்ப்புக்கள் இருந்து வருகின்றது. எமக்கு வருகின்ற தகவல்படி தொடர்ந்தும் மஹிந்த ராஜபக்ஷ அதிக ஆசனங்களை வெற்றி கொண்டாலும் அமைவது மைத்திரி நாடுகின்ற கூட்டரசாகவே இருக்கும். 

சிறுபான்மை உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குகின்ற போது வடக்கில் ஒருவருக்கு நியமன உறுப்புரிமையைக் கொடுத்து அவர் கடந்த முறையைப்போன்று அமைச்சர் என்பது உறுதி. முஸ்லிம்கள் தரப்பில் தேசியப் பட்டியலில் வரும் பௌசியும் கபீர் ஹாசீம், ரிஷாட், ஹக்கீம் என்பவர்களுக்குக் கூட கெபிணட் அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் கிடைக்குமா என்பது சந்தேகம்.  

மலையகத்தில் திகா, மனோ, ராதா, பெரும்பான்மைக்காக தொண்டா வெற்றி பெற்று உள்ளே சேர்க்கப்பட்டால் அவருக்கும் அமைச்சுக் கொடுக்க வேண்டி வரும் எனவே ஐ.தே.கூட்டிலுள்ள கட்சிகள், மற்றும் மைத்திரி அணியில் இருந்து தேசிய அரசுக்கு வருகின்றவர்கள் என்போருக்கு அமைச்சுக்களை வழங்க வேண்டி இருக்கின்றது. இருப்பதோ 30 அமைச்சுக்கள் மட்டுமே. எல்லோரும் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் என்று அதிகாரத்தில் இருந்து பழக்கப்பட்டவர்கள் எப்படித்தான் அதிகாரங்கள் இல்லாமல் இருக்கப்போகின்றார்கள் என்பதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

2015ல் நடக்கின்ற பொதுத் தேர்தல் ராஜபக்ஷக்களின் அரசியல் இருப்புத் தொடர்பாக எவ்வளவு முக்கியமாக நோக்கப்படுகின்றதோ அதேபோன்று தொண்டமான் ஹக்கீம் அரசியல் எதிர்காலம் தொடர்பாக இது ஒரு தீர்க்கமான தேர்தலாக இருக்கின்றது. 

தேர்தல் இறுதி நேரத்தில் என்றுமில்லாதவாறு துண்டுப்பிரசுரங்களும் வேண்டுகோள்களும் விடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. குறிப்பாக இறுதி நேரம் மைத்திரி விசுவாசிகளுக்கு இந்தத் தேர்தலில் வாக்களிப்பது மஹிந்த பிரதமராக வருவதற்கும் தமது அரசங்கம் அமைவதற்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தும், என்ற தொனியில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஆப்பு வைக்க சதிதட திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகின்றது. 

எனவேதான் மஹிந்த ராஜபக்ஷ அரசியல் மேடைகளில் இன்று மைத்திரி விசுவாசிகள் மேடைகளில் தோன்றுகின்ற போது கூச்சலும் குழப்மும் போடப்படுகின்றது. 

இந்த இக்கட்டான சோதனையைக் கடந்து மைத்திரி; அணியினர் வெற்றிவாகை சூடுவார்களேயானால் அவர்களுக்கு நல்ல அமைச்சுப் பதவிகளும் அதிகாரங்களும் கிடைக்க இருக்கின்றது. என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு ரிப்போர்ட்டு ஆய்வுகளின் படி தேர்தலைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவின் கரங்கள் வலுவடைய இருந்தாலும் அமைச்சரவை நியமனங்களில் உறுப்பினர்களிடையேயும் கூட்டுக் கட்சிகளிடையேயும் பாரிய அதிருப்த்தி தோன்ற இடமிருக்கின்றது. 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 80-82 சதவீதத்தை வாக்குப் பதிவுகள்  தொட்டாலும், இந்த முறை நடக்கின்ற தேர்தலில் வாக்குப் பதிவு 62 முதல் 72 சதவீதம் அளவிலேயே பதிவாகும் என்பதும் கொழும்பு ரிப்போர்ட் மேற் கொண்ட ஆய்வுகளில் தெரிய வருகின்றது.

No comments

Powered by Blogger.