Header Ads



ஜனாதிபதி மைத்திரியே எமது தலைவர் - அதாஉல்லா

(எம்.ஏ.றமீஸ்)

தற்போதுள்ள தேர்தல் முறைகள் மாற்றப்படுவது சிறுபான்மையினருக்கு பாரிய ஆபத்தாக அமையும் என தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸின் பதினோராவது பேராளர் மாநாடு இன்று(29) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில், தற்போதுள்ள அரசாங்கம் தேர்தல் கால வாக்குறுதிகளின் பிரகாரம் தேர்தல் முறைகளை மாற்ற முயற்சிக்கின்றது. இத்தேர்தல் முறை மாற்றமானது சிறுபான்மை மக்களுக்கும் சிறுபான்மைக் கட்சிகளுக்கும் ஓர் ஆபத்தான சூழ்நிலையினைத்தான் உருவாக்கும். தேர்தல் முறையிலே தொகுதிவாரி முறை அமுல்படுத்தப்படுமானால் சகோதரர் ரவூப் ஹக்கீமுக்கு பாராளுமன்ற பிரதிநதித்துவம் செல்வதற்கான தொகுதி இல்லாமலேயே போய்விடும்.

தேர்தல் ஆணையாளரை நாம் சந்திக்கின்றபோது ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கின்ற இன விகிதாசாரத்தின் அடிப்படையில் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையில் அதிகாரங்கள் குறைக்கப்படுவது சிறுபான்மையினருக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இருக்குமானால் சிறுபான்மையினர் பாரிய நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறைமையினை மாற்றியமைக்கும் முயற்சிக்கு நாம் ஆரம்பத்திலிருந்து ஆதரவினை வழங்கவில்லை. சிறுபான்மையினரின நன்மைக்காக இருக்கினற பிடியே நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையாகும். நாம் மக்களின் நலனில் குறிப்பாக சிறுபான்மை மக்களின் நலனை மையமாக வைத்து எமது கட்சியின் நடவடிக்கைகளை நகர்த்திச் செல்வதே இதற்குக் காரணமாகும்.

குழப்பமானதோர் அரசியல் சூழ்நிலையில் நாம் தற்போது நிதானமாக நின்று செயற்பட்டு வருகின்றோம். எமது தேசிய காங்கிரஸின் அடித்தளத்தினைப் பலப்படுத்துவதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்து நாம் செயற்பட்டு வருகின்றோம்.

இந்த அரசாங்கத்தின் மூலம் தேர்தல் முறை மாற்றப்பட வேண்டுமாக இருந்தால் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் மாவட்ட ரீதியாக சிறுபான்மையின மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப புதிய தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். இதன்மூலம் சிறுபான்மை இன மக்களுக்கு நன்மை ஏற்படும்.

நாங்கள் எப்போதும் ஒரே கொள்கையின்பால் இயங்குகின்றவர்கள். நாம் எடுத்த தீர்மானத்தின்பால் விலகி நிற்காமல் ஒரே நிலைப்பாட்டில் இருந்து செயற்படுவதனால் நாம் இப்போதும் கௌரவமாக பார்க்கப்படுகின்றோம். தற்போது அரசாங்கம் மாறியிருக்கின்றது. ஆனால் எமது தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கின்றார். நாம் அவருக்க எமது ஆதரவினை வழங்கி வருகின்றோம். கடந்த தேர்தலுக்கு முன்னர் தேர்தல் முறைமையினை மாற்றியமைக்க வேண்டும் என சில அரசியல்வாதிகள் கூறிவந்தனர். ஆனால் இப்போது அவர்களும் எமது நிலைப்பாட்டிற்கு ஆதரவு வழங்குவதாக தேர்தல் முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

நாம் கடந்த காலத்தில் பல்வேறான தீர்மானங்களை மக்களின் நன்மை கருதி எடுத்து செயற்பட்டுள்ளோம். ஆதனை சிலர் அக்காலத்தில் எதிர்த்தாலும் காலம் அவர்களுக்கு எமது தீர்மானம் சரி என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கின்றது. பதவிகளுக்காக நாம் தீர்மானம் எடுப்பவர்களல்ல. நமது சமூகத்தின் நிம்மதிக்காகவும் சமாதானத்திற்காகவும் எமது தீர்மானங்கள் அமைகின்றன.

இதன்போது தேசிய காங்கிரஸின் புதிய உயர்பீட உறுப்பினர்கள் தெரிவு செயற்பட்டனர். இதன்போது தேசிய தலைவராக  முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, சிரேஸ்ட பிரதிச் செயலாளர் நாயகம் டாக்டர் ஏ.உதுமாலெவ்வை, தேசிய அமைப்பார் முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, மக்கள் தொடர்பு இணைப்பாளர் மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் அன்சார் மௌலானா, தேசிய பொருளாளர் ஜே.எம். வொசீர், இளைஞர் அமைப்பாளர் ஜே.பி.ஜே சம்பத், பிரதி உதவிச் செயலாளர் நாயகம் ஏ.அஹமட் சக்கி,மகளிர் விவகார அமைப்பாளர் மல்லிகா பளிங்கார உள்ளிட்ட நிருவாகத்தினர் தெரிவு செய்யப்பட்டனர்.

இம்மாநாட்டின்போது புதிய தேர்தல் முறை அமுல்படுத்தப்பட வேண்டுமாக இருந்தால் சிறுபான்மையினருக்கும் சிறுபான்மைக் கட்சிகளுக்கும் பாதிப்பில்லாத தொகுதிவாரி தேர்தல் முறையை அமுல்படுத்த வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

1 comment:

  1. தம்பி அதாவுல்லா என்னமா ஏங்கி போய்டீங்க பார்க்க பரிதாபமாக இருக்கு உங்க அவ்லியாமார் பாவாமார் பார்த்த சாத்திரம் பலிக்காததால ஏங்கி போய்டியலோ?

    ReplyDelete

Powered by Blogger.