Header Ads



வெலே சுதா கூறிய சகல விடயங்களையும், பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு சவால்

சர்வதேச போதைப் பொருள் வியாபாரி எனக் கூறப்படும் வெலே சுதா வாக்குமூலத்தில் வெளியிட்டதாக கூறப்படும் அனைத்து நபர்களின் பெயர்களையும் வெளியிடுமாறு சவால் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெலே சுதா தொடர்பான விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் பெயர் பேசப்பட்டது. வெலே சுதாவின் வாக்குமூலத்தில் சொல்லப்பட்ட சகல தகவல்களை வெளியிடுமாறு நான் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்றேன்.

வெலே சுதா என்ன கூறினார் என்பதை நாட்டுக்கு தெரியப்படுத்துங்கள். பொலிஸ் ஊடகப் பேச்சாளரால் முடிந்தால், அவற்றை வெளியிடுமாறும் நான் சவால் விடுக்கின்றேன்.

மக்களை ஏமாற்றுவதற்காகவே வெலே சுதா சம்பந்தமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹெரோயின் போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்ற உண்மையான நோக்கமில்லை எனவும் மகிந்த யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இதற்கு பதிலளித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, முடிவடையாத விசாரணை ஒன்றின் சகல தகவல்களையும் நாட்டுக்கு தெரியப்படுத்த முடியாது.

வெலே சுதா என்ற சமந்த குமார தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெறுகிறது என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

வெலே சுதாவின் இலங்கை பிரதிநிதி கைது

சர்வதேச ஹெரோயின் வியாபாரியான வெலே சுதா என்ற சமந்த குமார என்பவரின் இலங்கைக்கான பிரதான பிரதிநிதியாக செயற்பட்டவர் ஹபரணையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுராஜ் அஹமட் என்ற இந்த நபர் ஹபரணை மொரகஹாவெவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.

அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் அவரை 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

வெலே சுதாவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் கொழும்புக்கு வெளியில் இருக்கும் ஆடம்பர வீடுகள் தொடர்பாகவும் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.