February 15, 2015

''ஒரு கல், இரண்டு மாங்காய்கள்''

-ஏ.எச். சித்தீக் காரியப்பர்-

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விவகாரம் என்பது பாரிய தீ விபத்து  ஏற்பட்டடு  அது உனடியாக அணைக்கப்பட்டது போன்ற பிரமையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இந்த விடயத்தில் மிகுந்த சாணக்கியத்துடன் செயற்பட்டு பிரச்சினையை  இலகுவாக தீர்த்து வைத்துள்ளார்.

எஞ்சிய இரண்டரை வருடங்களுக்கான கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தொடர்பில் இந்தக் கட்சிக்குள் கடந்த இரண்டரை மாதங்களாக சலசலப்பான நிலைமையே காணப்பட்டது. கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலர் இந்த விடயத்தில் இரவும் பகலுமாக கனவு கொண்டிருந்தனர். அதிகமானோர் கண்ட கனவுகள் அவர்கள் மாகாண முதலமைச்சர் ஆசனத்தில் அமர்வது போன்றதாகவும்  அமைந்திருக்கலாம்.

இந்தப் பொறுப்பை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் நீண்ட நாட்களாகவே சிக்கலான நிலைமைகளை கட்சியின் தலைமை எதிர்நோக்கியிருந்தது. ஆனால், அதனை சாணக்கியமாக தீர்த்து வைப்பதன் மூலமே கட்சிக்குள்ளும் வெளியிலும் பிரச்சினைகள் எழாமல் பார்த்துக் கொள்ள முடியுமென தலைமை சிந்திந்துள்ளது.  அதன்படி வாழைப்பழத்தில் ஊசியினை ஏற்றுவது போன்று இந்த விடயத்தை அமைச்சர் ஹக்கீம் நோவாமல் நொந்து கொள்ளாமல் தீர்தது வைத்துள்ளார். முதலமைச்சரை  தீர்மானிப்பதற்கான பொறுப்பை கட்சியின் அரசியல் உயர்பீடம் அமைச்சர் ஹக்கீமிடம் ஏகமனதாக கையளித்திருந்தது. இதன் பின்ரே இந்த விடயம் மேலும் சூடு பிடிக்கவும் தொடங்கியது.

புதிய முதல்வரை நியமிப்பதற்கான கால எல்லை 48 மணி நேரமாக ஹக்கீமினால் முதலில் வரையறுக்கப்பட்டது. பின்னர் அது 72 மணித்தியாலமாக நீடிக்கப்பட்டு அதற்குள் யார்  முதலமைச்சர் என்பதனை அவர் உறுதியாக அறிவித்து விட்டார். ஆனால், அவரது அறிவிப்பு மிகுந்த அதிர்ச்சியாகவே இருந்தது. யாரும் எதிர்பாராத அவரது தீர்மானம் ஒரு சிலரை அதிருப்திப்படுத்தினாலும் பின்னர் வேறு வழி இல்லை என்ற நிலையில் அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கே முதலமைச்சர் பதவி கிடைக்குமென பலராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களில் சிலர், நானா? நீயா? அவரா? முதலமைச்சர் என்ற கேள்வியுடன் காணப்பட்டனர். ஒவ்வொருவரும் தாங்கள் ஆற்றிய பணிகள், கட்சிக்கான அர்ப்பணிப்புகளை  அவர்களாகவே பேசத் தொடங்கி விட்டனர்.

இவர்களின் மன ஆதங்கம் எல்லை தாண்டிய போது ஒருவரை ஒருவர்  மறைமுகமாக விமர்சிக்கும் துணிவில் அவர்கள் காணப்பட்டதனை சில சம்பவங்கள் வெளிக்காட்டியிருந்தன.  இவ்வாறனதொரு நிலைமையானது கட்சியின் தலைவரான ஹக்கீமுக்கு நாடி பிடித்து பார்க்க கூடியதாகவும் இதன் விளைவுகள் எவ்வாறனதாக அமையுமென்று சிந்திக்கவும் சிறந்தததொரு வாய்ப்பினை ஏற்படுத்தியிருந்தது.

மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பிரதேசங்களில் முதலமைச்சர் விவகாரத்தில் கட்சிக்குள் பெரிதாக போட்டி நிலைமை இல்லை என்பதனையும் அம்பாறை மாவட்டத்துக்கு அதனைக் கொடுப்பதால் ஏற்படக் கூடிய விளைவுகளையும் அவர் உணர்ந்து கொண்டிருக்கலாம். இதனை அடிப்படையாக வைத்தே அவர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஹாபிஸ் நஸீருக்கு அந்தப் பதவியை வழங்க தீர்மானித்திருக்கலாம்.

ஹாபிஸ் நஸீரை முதலமைச்சராக பெயர் குறித்து சிபார்சு செய்த போது அம்பாறை மாவட்டத்தில் விசேடமாக, கல்முனையின் சாய்ந்தமருது பிரதேச மக்களிடம்  தாங்கள் ஏமாற்றப்பட்டதான  நிலைம காணப்பட்டாலும் அது கொதிப்பு  நிலைமைக்கு  மாற்றப்பட்டு வீதியில் மக்கள் இறங்கி போராட வேண்டிய நிலைமையை தோற்றுவித்தது. முஸ்லிம்களின் புனித நாட்களில் ஒன்றான வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பதனை விட ஈடுபடுத்தப்பட்டனர் என்பதே சரியானது. அமைச்சர் ஹக்கீமின் கொடும்பாவி கூட அங்கு எரிக்கப்பட்டது. பொலிஸார் களத்துக்கு வந்து நிலைமைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலைமை அங்கு தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னணியில்  கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஜெமீல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அதனை அவர் மறுத்திருந்தார்.

இதேவேளை, கட்சியின் ஒழுங்கு விதிகளை மீறினார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 6 ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலை கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் கட்சியில் வகித்த சகல பதவிகளிலிருந்தும் இடைநிறுத்தினார். ஆனால், இரண்டு தினங்களுக்குள்ளே ஜெமீல் மன்னிப்பு கேட்டுக் கொண்டதனையடுத்து அவர் மீதான தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டன. அப்போதுதான் ஆர்ப்பாட்டம் நடத்தி கொடும் பாவி எரிக்கச் செய்யப்பட்ட  மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதனை உணர்ந்து வேதனைப்பட்டனர்.

இந்த விடயத்தில் அமைச்சர் ஹக்கீமின் அரசியல் சாணக்கியம் துல்லியமாக  தெரிந்தது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கியிருந்தால் அந்த மாவட்டத்தில் தீராத பகைமையே தொடர்ந்திருக்கும்.  அதன் மூலம் அந்த மாவட்டத்தில் கட்சியின் இருப்பு சிதறுண்டு போய் சிலவேளைகளின் அதன் பிரதிபலிப்புகள் கிழக்கு மாகாண சபையிலேயே எதிரொலித்திருக்கவும் கூடும்.

இதேவேளை, கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை ஹாபிஸ் நஸீருக்கு வழங்கியமை தொடர்பில் இன்னெரு விடயத்தையும் ஆராய வேண்டியுள்ளது. ஹாபிஸ் நஸீர் முன்னாள் ஆட்சியாளர்களுக்கும் விடேசமாக, முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கும் மிக நெருக்கமானவர். முஸ்லிம் காங்கிரஸ் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது என்று மேற்கொண்ட முடிவிலும் அவர் பெரிதாக திருப்தி கொண்டவராக இருக்கவில்லை என்றே கூறப்பட்டது. எனவே, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவரை மட்டு மாவட்டத்தில் களமிறக்கி அவர் வெற்றியடையும் பட்சத்தில் மஹிந்த ராஜபக்க்ஷவின் விசுவாசிகள் அணி தற்செயலாக வெற்றி பெற்றால் ஹாபிஸ் நஸீர் முஸ்லிம் காங்கிரஸில் தொடர்ந்து இருப்பாரா என்ற ஒரு  சந்தேகமும் ஹக்கீமுக்கு ஏற்பட்டிருக்கலாம். மேலும் ஐக்கிய தேசியக் கட்சிதான் ஆட்சிக்கு வந்தாலும் அவருக்கு மத்திய அரசில் அமைச்சு பதவி ஒன்றினை பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலைமையும் ஏற்படலாம். இதன்படி அவருக்கு ஓர் அமைச்சு பதவியை  வழங்கினாலும் வழங்காவிட்டாலும்  ஏற்படக்  கூடிய நிலைமைகளை ஹக்கீம் நன்கு அறிந்தே அவரை முதலமைச்சராக்கி அடுத்துவரும் இரண்டரை வருடங்களுக்கு அந்த ஆசனத்திலேயே வைப்பதன் மூலம் வரும் முன் காப்போம்  என்றவாறு  செயற்பட்டிருகக்வும் கூடும்.

எது எப்படியிருப்பினும் அமைச்சர் ஹக்கீம் கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற விடயத்தில் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை கொய்துள்ளமை மட்டும்  அவரின் அரசியல் சாணக்கியத்தின் ஊடாக சாத்தியமாகி விட்டது. மலிந்த பொருள் என்ன சந்தைக்கு வராமலா போகும், பொறுத்திருந்து நிலைமைகளை அவதானிப்போம்.

2 கருத்துரைகள்:

'சறுக்கிக் கீழே விழுந்ததையும் சாணக்கிய நகர்வு' என்று விதந்துரைக்கும் காரிய அப்பர்கள் நம்மிடையே இருக்கும் வரை இப்படியான தலைவர்களுக்கு வாழ்வுதான்.

மூத்த ஊடகவியலாளரே, சும்மா ஒருசுத்து சுத்து உள்ளீர்கள். சும்மா போங்க சார்...ஒரு கல்லு இரண்டு மாங்காய் எண்டுக்கு... உங்களுக்கே தெரியும் ஹபீஸ் நசீர் ஒரு மொத்த வியாபாரி.. அவர் தலைமையிடம் நிறைய தாக்கம் செலுத்தி கொண்டுடிருப்பவர். இவர்தான் முதல் அமைச்சர் என்பது எல்லோருக்கும் ஆரம்பத்தில் இருந்தே தெரிந்தவிடயம் தான்.

Post a Comment