Header Ads



அரசியல் அறிவுள்ளவர்கள் தொகை, குறைந்து கொண்டே செல்கிறது - ராஜித சேனாரத்ன

குடு வியாபாரிகள், எதனோல் முதலாளிமார் பாதாள உலகத்தினர் ஆகியோர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகும் இன்றிருக்கும் தேர்தல் முறையை மாற்றி கிராமத்திலுள்ள சாதாரண மனிதன் பாராளுமன்றம் செல்லும் தேர்தல் முறை யொன்றை துரிதமாக கொண்டுவர நட வடிக்கை எடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரித்தார்.

முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் ஜனன தின விழா கொலன்னாவையில் உள்ள அவரது சிலைக்கருகில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். ஜனாதிபதியும் அமைச்சர்களும் பாரதவின் சிலைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இங்கு உரையாற்றிய அமைச்சர், எம்மோடு பல்வேறு மக்கள் போராட்டங்களில் பங்குபற்றிய பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர, பாதாள உலக குண்டர்களினால் பலியாகினார். அன்று முதல் நாம் முன்னெடுத்த போராட்டத்தின் ஒரு அங்கம் இன்று வெற்றி பெற்றுள்ளது. தெற்கிலிருந்த குரூர பயங்கரவாதத்திற்கு எதிராக அன்று நடத்திய போராட்டத்தின் போது பாரத லக்ஷ்மன் மயிரிழையில் உயிர் தப்பினார். அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் இந்த அரசாங்கத்தை சரியாக வழி நடத்தியிருப்பார்.

முன்னாள் ஜனாதிபதியின் தொழிற்சங்க செயலாளராக பணிபுரிந்த வேளை பாரதி லக்ஷ்மன் விரக்தியடைந்தே இருந்தார். சிறந்த ஒருவரை ஆட்சிக்கு கொண்டு வந்தாலும் அவர் பின்னர் மாறியது குறித்து பாரத கவலைப்பட்டார்.

அரசியல் அறிவுள்ளவர்கள் தொகை குறைந்து கொண்டே செல்கிறது. இன்றிருக்கும் தேர்தல் முறை காரணமாக சிறையில் இருக்க வேண்டியவர்கள் பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் இருக்கின்றனர். இவ்வாறானவர்களுடன் ஒன்றாக இருக்க எமக்கு நேரிட்டது. கெசினோ வியாபாரிகள், குடு வர்த்தகர்கள் பாதாள உலக பேர்வளிகள் இன்று அமைச்சர்களாகவும் எம்.பி.களாகவும் இருக்கின்றனர். இந்த தேர்தல் முறை மாற்றப்பட வேண்டுமென நாம் பல காலமாக குரல் கொடுத்தோம்.

இது தொடர்பான திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டாலும் முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர்களின் தலையீட்டினால் அது பாதியில் நின்றுவிட்டது. ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் ஒரு உறுப்பினர் தெரிவாகும் வகையில் புதிய தேர்தல் முறை மாற்றப்படும். இந்த முறை மாற்றப்படாவிட்டால் முதலாளிகளே பாராளுமன்றம் தெரிவாகுவார்கள். கிராமங்களில் உள்ள ஆசிரியர்கள், கிராமிய தலைவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும்.

பொலிஸாரும் தலையீடின்றி தமது கடமைகளை மேற்கொள்ளவும் தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்புகளை மாற்றும் முறையை நிறுத்தவும், அரச சேவை அரசியல் வாதிகள் சொற்படி ஆட்டுவிக்கப்படுவதை நிறுத்தவும் தேர்தல் ஆணையாளருக்கு சுயாதீனமாக செயற்படும் நிலையை ஏற்படுத்தவும் 100 நாள் திட்டத்தினூடாக நடவடிக்கை எடுப்போம்.

ஜே.வி.பி.யின் துப்பாக்கிச் சூட்டினால் இறக்க இருந்த பாரத லக்ஷ்மன் குடு வியாபாரியின் துப்பாக்கி சூட்டினால் பலியானார். அவர் வன்முறையினால் இறந்திருந்தாலும் கவலைப்பட்டிருக்க தேவையில்லை.

பாரதவின் கவனவுகளை நிறைவேற்றுவதே அவருக்கு செய்யும் நன்றிக்கடனாகும்.

No comments

Powered by Blogger.