Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் முடிவு, மக்கள் விரும்புகின்ற முடிவா..? மக்களைப் பாதுகாக்கின்ற முடிவா..??

-நவாஸ் சௌபி-

முதலில் இங்கு குறிப்பிடும் கருத்துக்களை மஹிந்த மீது கொண்டுள்ள தனிப்பட்ட விருப்பத்தினாலோ அல்லது அவரது ஆட்சி தொடர வேண்டும் என்ற நாட்டத்தினாலோ நான் எழுதவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு படியுங்கள். மேலும் அரசாங்கத்துடன் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒட்டுமொத்த அபிப்பிராயப்படி மைத்திரியை ஆதரிக்கும் முடிவினை எடுக்கப் போவதாக கசிந்துள்ள தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகிறது.

நடக்கவிருக்கும் தேர்தல் முடிவானது சூதாட்டத்தின் முடிவு போன்றது  அதிஷ்டமும் தந்திரமும் நிறைந்தது. இந்த சூதாட்ட தேர்தலின் இறுதி முடிவு என்பது எப்படியும் அமையலாம் இதற்கு அரசுக்குள் இருப்பவர்கள் வெளிச் செல்கிறார்கள், மக்கள் அரசாங்கத்தின் மீது எதிர்ப்புணர்வுடன் இருக்கின்றார்கள், மைத்திரியின் கூட்டத்தில் மக்கள் வெள்ளம் அதிகம், இந்த அரசாங்கம் முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்தியது போன்ற காரணங்களும் கதைகளும் தேர்தல் முடிவில் எந்தளவு செல்வாக்கு செலுத்தும் என்பது நம்பகமில்லாதவை.

இதற்கப்பால் எந்தவொரு தலைமையும் மக்கள் விரும்புகின்ற முடிவினை எடுப்பதற்கு எத்தனிப்பதிலுள்ள அரசியல் எதிர்காலத்தை ஒன்றுக்குப் பத்து தடைவ நன்கு சிந்திக்க கடமைப்பட்டுள்ளது. இதில் மக்கள் விரும்புகின்ற முடிவினைவிடவும் மக்களைப் பாதுகாக்கின்ற முடிவினை எடுப்பதே தீர்க்கதர்சனமான தலைமைத்துவ முடிவாகும். மக்களின் நிலைப்பாட்டில் நியாயம் காண்பதற்கு அப்பால் மக்களுக்குரிய நிலைப்பாட்டை அரசியலில் தேடிப்பிடிப்பது தலைமையின் பொறுப்பாகும்

முஸ்லிம் மக்கள் மஹிந்தவின் ஆட்சியை விருப்பமில்லாதிருக்கின்றார்கள் என்ற ஒரு காரணத்தை மட்டும் வைத்துக் கொண்டு முடிவினை எடுப்பது அதற்குப் புறம்பாகவுள்ள எதிர்கால அரசியல் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு என்பவற்றை முற்றாகப் புறம்தள்ளுவதாகவே அமைந்துவிடுகிறது. 

மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனம்வரைப் பார்த்துவிட்டோம் அதன்படி நாம் எதிர்பார்க்கும் எந்த தீர்வினையும் மைத்திரியின் வெற்றியின் பின்னராக அமையும் அரசாங்கத்துடன்; பேசியே பெறமுடியும் என்பது தெளிவாகிவிட்டது. அப்படியானாலும் அதில் நாம் கரையோரமாவட்டத்தைக் கூட உறுதியாகப் பெறமுடியுமா? அதற்கு இப்போதுள்ள முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் யாராவது உத்தரவாதம் கூறுவார்களா? அவ்வாறு கூறினாலும் அது தேர்தல் கால உடன்படிக்கைக்கான வழக்கமான வாக்குறுதியாக காற்றோடு கலக்குமே தவிர நிறைவேறும் காரியமாகாது.

எனவே மைத்திரியுடன் இணைய வேண்டிய இப்போதைய தருணத்தைக் கடந்த முஸ்லிம் காங்கிரஸ் அவருடன் இணைவதற்கு அடுத்துள்ள ஒரேஒரு தருணம் அவரது வெற்றியின் பின் அமையும் அரசாங்கத்தில் இணைவதாகவே இருக்கும். புதிய ஆட்சியில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்றப் பலம் மைத்திரி அரசுக்கு கட்டாயம் தேவைப்படும்வகையில் அந்த இணைவு அவசியமாகலாம். இதன்படி மைத்திரியுடன் இணைவதற்குரிய காலம் இதுவல்ல அவரது வெற்றி அறிவிக்கப்படும்வரை முஸ்லிம் காங்கிரஸ் தனது நிதானத்தை தொடர வேண்டும்.

தற்போதுள்ள அரசிலிருந்து 42 அமைச்சர்கள் மஹிந்தவுக்கு பகிரங்க பிரச்சாரம் செய்யாமலிருக்கின்றார்கள் அவர்களுள் பெரும்பாலானவர்கள் மிகவிரைவில் மைத்திரியுடன் இணையலாம் அதனால் மைத்திரியின் வெற்றியை ஓரளவுக்கு ஊகிக்க முடியும் என்ற எதிர்பார்ப்புகளுடன் இப்போது முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரியுடன் இணையும் முடிவினை எடுக்க நினைத்தால் அது ஓரளவுக்கு நியாயமானதுதான் ஆனால் அத்தகைய அரசதரப்பு அமைச்சர்கள் மாறியதன் பின் அவர்களுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் மாறுவதே உசிதமானது. அவர்களுக்கு முன் முன்டியடித்துக் கொண்டு, மைத்திரியும் அவசரமாகவாருங்கள் என்று அழைக்காத நேரத்தில் ஏன் மாற வேண்டும். 

அடுத்து மைத்திரியுடன் இணைவதற்கான முடிவு ஒட்டுமொத்த முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது அபிப்பிராயங்களைத் தெரிவித்த நிலையில்தான் எடுக்கப்படவிருப்பதாக தெரியவந்துள்ள நிலையில் அவர்களது அபிப்பிராயம் அவ்வாறு இருப்பதற்கான அரசியல் காரணம் மக்களின் விருப்பத்தை அடியொட்டி இம்முடிவினை எடுத்தால்தான் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் அவர்கள் தங்கள் கதிரைகளை பிடித்துக்கொள்ளலாம் என எண்ணுவதிலும் உண்மை இல்லாமல் இல்லை.

அப்படியானால் இதுவரைகாலமும் மஹிந்தவுடன் இருந்துவிட்டு இறுதியில் இவ்வாறு மைத்திரியுடன் மாறிக்கொண்டால்  இதற்குமுன் மஹிந்தவுடன் இருந்தது பிழை என்றாகாதா? இதன்படி மஹிந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்தது என்று நாங்கள் விமர்சித்தால் அந்த அரசாங்கத்தில் இணைந்திருந்வர்கள் எல்லோருக்கும் அதில் பங்கிருக்கிறது என்றுதானே பார்க்க வேண்டும். அந்தப் பங்கு மஹிந்தவைவிட்டு விலகுவதால் மட்டும் இல்லையென்றாகிவிடுமா? எனவே மஹிந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களுக்கு செய்த பாவத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஒரு பங்கீடு அந்த அரசாங்கத்தில் இருந்தமைக்காக இருக்கத்தான் செய்கிறது. அந்தப் பாவத்தைக் கழுவ மைத்திரியுடன் இணைய வேண்டுமாக இருந்தால் அதனை இப்படி அவரசப்பட்டுச் செய்யாமல் மஹிந்த அரசுடன் இதுவரை நிதானமாக இருந்ததுபோல் இருந்துவிட்டு மைத்திரியின் வெற்றி உறுதியானபின் ஓடுகின்ற வெற்றிவெள்ளத்தில் சென்று கழுகிக்கொள்ளலாமே.

அத்தோடு முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியுடன் இருந்தால்தான் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் தங்களுக்குவாக்களிப்பார்கள் என்று கருதி மைத்திரியை ஆதரிக்கும் முடிவை அவர்கள் எடுக்க நினைத்திருந்தால் அதற்கு மாற்றமாக வெற்றி மஹிந்தவின் பக்கம் வந்தால் அப்போது ஆட்சியின் பக்கம் சார்ந்து செல்லும் மனநிலை மக்களுக்குள் இயல்பாகவந்துவிடாதா? அப்போது பாராளுமன்றத் தேர்தலையும் மஹிந்தவின் ஆட்சியையும் வைத்துக் கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் கண்ணைப் பிதட்டும் நிலை ஏற்படாதா? 

எனவே பாராளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் வாக்களிக்கும் மனநிலையை இத்தேர்தல் மூலம் அறிய முடியாது அதனை ஜனாதபதித் தேர்தலின் முடிவின் பின்னர்தான் மிகத் தெளிவாக கணிக்க முடியும் அதுவரை தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்த்துமுடிவினை எடுப்பதாக கூறிவந்ததுபோல் இனி தேர்தலில் யார் வெற்றிபெறுவார் எனப் பார்த்து முடிவினை எடுப்பதாக கூறிக்கொண்டு இருக்கின்ற காலத்தையும் கடத்திவிடுவது இப்போதைக்கு எல்லாவகையிலும் நன்மையானதாகலாம். மறுபக்கம் இந்த ஜனாதிபதித் தேர்தல் நமக்குரிய தேர்தலும் அல்ல இதில் நாம் முட்டிமோதி மண்டையை உடைப்பதற்கு.

இதில் இன்னுமொரு முக்கிய விடயம் முஸ்லிம் காங்கிரஸ் தனது முடிவினைப் பகிரங்கமாக அறிவித்து தனக்காக தேர்தல் பிரச்சாரத்தை செய்ய வேண்டும் என்று மஹிந்தவும் விடாப்பிடியாக எதிர்பார்ப்பதாகத் தெரியவில்லை அவ்வாறு எதிர்பார்த்திருப்பின் முஸ்லிம் காங்கிரஸ் அதன் முடிவை அறிவிக்க இவ்வளவு காலதாமதம் வழங்கப்பட்டிருக்காது.  அத்துடன் கல்முனைக்குத் தனது விஜயத்தை செய்த மஹிந்த முஸ்லிம் காங்கிரஸின் முடிவினை எதிர்பார்க்காமல்தான் வந்து சென்றிருக்கிறார். மஹிந்தவைப் பொறுத்தவரை முஸ்லிம் காங்கிரஸ் தனது தேர்தலுக்குப் பிரச்சாரம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை அது இப்போதைக்கு தனது அரசாங்கத்தை விட்டு வெளியேறாமல் இருந்தால் அதுவே போதுமானது என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதாகவே தெரிகிறது. 

இப்;படி முஸ்லிம் காங்கிரஸின் வருகையால் தனக்கான வாக்குகளைப் பெற்றுத்தர முடியாது என்று மஹிந்தவும் முஸ்லிம் காங்கிரஸ் இல்லாமல் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என மைத்திரியும் உள்ள நிலையில் துரதிஷ்ட்டவசமாக இத்தேர்தல் முஸ்லிம் காங்கிரஸின் கைகளுக்கு எட்டாத தேர்தலாகவே ஆகிவிட்டது. எனவே இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் முடிவினை வைத்து புதியதொரு அரசியல் ஒழுங்கினை அமைத்துக்கொள்ள அமைதிகாப்பதே இப்போதுள்ள அரசியல் காய்நகர்த்தலாகலாம்.

இதனையும் மீறி ஒரு முடிவினை அறிவித்தாக வேண்டும் என்றால் தோற்றாலும் அது மஹிந்தவை ஆதரிப்பதாக அமைவதே அரசியல் நன்மையாகும். அந்த முடிவில் சேதாரமிருக்காது. அவ்வாறில்லாது மைத்திரியின் பக்கம்தான் தங்களின் முடிவினை எடுத்தாக வேண்டுமானால், இதுவரைகாலமும் மஹிந்தவுடன் இருந்து முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் சிலவற்றை கையோடு நிறைவேற்றியதற்கான விசுவாசம் என்ன என்ற கேள்வி எழுகிறது அல்லவா? இது மஹிந்தவை இன்னும் ஆத்திரப்படுத்தி அவரைவிட்டு வெளியேறுகின்ற ஒரு அரசியல் நம்பிக்கை துரோகமில்லையா? இப்படி சில பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுவிட்டு இடை நடுவில் அத்தனையும் அவ்வாறே போட்டுவிட்டு கட்சிமாறினால் பெற்ற தீர்வுகளுக்கான எதிர்கால நிலைமை என்னவாகும்? இதனால் யார் பாதிக்கப்படுவார்கள் என்று கொஞ்சமாவது சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? மைத்திரியோடுதான் சேர வேண்டுமானால் இப்படி மஹிந்தவுடன் கோரிக்கைகள் எதனையும் முன்வைத்து நிறைவேற்றாமாலே அப்போதே விலகி இருக்கலாமே. அவ்வாறில்லாது இப்போது விலக நினைப்பது மேலும் பகைமையை வளர்ப்பதாக அமையாதா? 

இது இவ்வாறு இருக்க மைத்திரியுடன் சேர்வது மக்களின் உணர்வுகளுக்கும் விருப்பத்திற்கும் மதிப்பளித்துத்தான் என்று கூறினால் இதைவிடப் பொய் வேறொன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்காக மக்களின் விருப்பத்திற்குத்தான் இந்த முடிவினை எடுத்தோம் என்று அவசரப்பட்டு சத்தியங்கள் செய்யாதீர்கள் ஏனென்றால் நாளை நீங்கள் எப்படி மாறுவீர்கள் என்று உங்களுக்கே தெரியாது. (இந்ததேர்தலில் அரசியல்வாதிகள் அதிகமான இடங்களில் சத்தியம் செய்யும் நிலைமையும் ஏற்பட்டதால் இதனைக் கூறினேன்) 

இப்படி சமூகத்தின் உணர்வுகளுக்கும் விருப்பத்துக்கும் மதிப்பளித்து மஹிந்தவைவிட்டு விலகுவதானால் எப்போதோ அல்லவா விலகி இருக்க வேண்டும் அதற்கான தருணங்கள் எத்தனையோ இருந்தும் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு இப்போது மக்களின் உணர்வுகளோடும் விருப்பத்தோடும் விலகுவதாக ஏன் விளையாடப் போகின்றீர்கள்? இதில் என்ன உண்மை இருக்கிறது.

ஆகவேதான் இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் கடைப்பிடித்திருக்கும் நிதானம் மிகச் சிறந்த தலைமைத்துவ இருப்பாகத் தெரிகிறது. இந்நிதானம் கலையாமல் அப்படியே இருந்து, இருக்கின்ற காலத்தை கடத்திவிடுவது குறைந்தபட்சம் கட்சிபிளவுபடுவதையாவது காப்பாற்றும் இதற்காக கட்சிவழக்கமாகச் செய்கின்ற மூன்று விடயங்களில் உலமாக்கள் சந்திப்பு மற்றும் பையத் ஆகிய இரண்டும் செய்யப்பட்டிருக்கிறது மூன்றாவதான உம்றாப் பயணம் ஒன்றையும் கட்சியிலுள்ள முக்கியமானவர்களை அழைத்துக்கொண்டு சென்றுவந்தால் உள்ள காலம் சரியாக முடிந்துவிடும். இதை விட இருக்கின்ற காலம் வேறு எந்த முடிவுக்கும் பொருத்தமான காலமல்ல.

கட்சி என்பது பாராளுமன்ற உறுப்பினர்களை உற்பித்தி செய்கின்ற ஒன்றாக மட்டும் இருக்க முடியாது அதனால் சமூக இருப்பைக் கூட காப்பாற்ற முடியாது என்றபிறகு அத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களின் அபிலாஷைகளுக்கு கட்சி இடமளிக்க முடியுமா? 

1 comment:

  1. இவர்கள் என்ன முடிவு எடுத்தாதான் மக்களுக்கு என்ன? மக்கள் ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.