Header Ads



ரணில், ஓட்டுனராக இருக்கும் பஸ்ஸில் ரவூப் ஹக்கீம்..!

(ஹஸீர்)

'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர பகைவனும் இல்லை' என்பது பிரபலமான வாக்கியமாகும். கால சூழ்நிலைகளுக்கேற்ப கூட்டுச் சேர்வதும், பிரிவதும், குற்றஞ் சாட்டுவதும், பாராட்டுவதும், தோளில் தூக்கி வைத்துக்கொண்டு சுற்றுவதும்.... என்ற அரசியல் நடைமுறை எல்லா தேசங்களிலும் வழக்கத்தில் உள்ளது. அதிலும் ஆசிய உபகண்டத்தில் இது சற்று மிதமிஞ்சியே பின்பற்றப்பட்டு வருகின்றது. கொள்கை, கோட்பாடு மாத்திரமல்லாமல் பதவி, பணம், பயமுறுத்தல்; (பிளக்மெயிலிங்), ஊடக ஆதிக்கம்.... என்று பலதும் இவ்வாறான சூழ்நிலைகளுக்கு காரணமாக அமைகின்றன.  

2015 தொடங்கும் போதே தேசிய அரசியலை சூடு பறக்கும் சுறுசுறுப்பான களமாக அமைக்கப்போகும் தேர்தல் ஒன்றுக்கான எதிர்பார்ப்பு பலமாக இருக்கும் இச்சூழ்நிலையில் மேற்கூறிய அனைத்தும் பல்வேறு முகங்களுடன் உலா வர தொடங்கியுள்ளன. இந்தப் பேய், பூதங்கள் எல்லாம் மொத்தமாக முஸ்லிம் காங்கிரஸை முற்றுகையிட ஆரம்பித்தாகிவிட்டது. வதந்திகள், ஊகங்கள் என்று எக்கச்சக்கமான செய்திகள் பத்திரிகைகளிலும், வலைத்தளங்களிலும் உலா வருகின்றன. 

'ரணில் ஓட்டுனராக இருக்கும் பஸ்ஸில் நான் பயணியாக ஏற மாட்டேன்' என்று மர்ஹூம் அஷ்ரப் குறிப்பிட்ட சொற்பிரயோகம் ஹக்கீமின் 2001 பாராளுமன்றத் தேர்தலில் தொடங்கி 2010 பாராளுமன்ற தேர்தல்வரை எதிரணியினரால் ஹக்கீம் ரணில் உறவை விமர்சிக்க பரவலாக பாவிக்கப்பட்டதாகும். பெரும்பாலான முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களும் ரணில் - ஹக்கீம் உறவில் அதிருப்தியுற்று அந்த பஸ்ஸில் இருந்து ஹக்கீம் இறங்க மாட்டாரா என்று ஆதங்கத்தோடு இருந்ததும் மறுக்க முடியாததாகும். ஆனால் இன்று எல்லாம் தலைகீழாகி இருக்கின்றது. 

அஷ்ரப் இன்று உயிருடன் இருந்தால் அவரே அவரின் வார்த்தைகளை மீறியிருப்பாரா என்று கற்பனை பண்ணி பாருங்கள். நானும் கற்பனை பண்ணிப் பார்த்தேன். 'சரியான நேரத்தில் எடுக்கும் பிழையான முடிவும், பிழையான நேரத்தில் எடுக்கும் சரியான முடிவும் பிழையானதே' என்ற மர்ஹூம் அஷ்ரபின் மற்றொரு பொன்மொழி என் ஞாபகத்துக்கு வந்து குழப்பியடிக்கிறது. 

கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட 'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர பகைவனும் இல்லை' என்பது அரசியல் வாதிகளின் நடவடிக்கையின் போக்கை சொல்லுவதற்காகவே பயன்படுத்தப்பட்டிருந்தாலும் இப்போது அது 'மகா ஜனங்களின்' மனோநிலையை பிரதிபலிப்பதாக மாறியுள்ளது. முக்கியமாக முஸ்லிம் மக்களை அதுவும் ரணிலுடன் ஹக்கீம் கொண்டிருந்த உறவை விமர்சித்தவர்களின் இன்றைய மனநிலையை பிரதிபலிப்பதாக உள்ளது. 

2001 – 2010 காலப்பகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் ரணில் எதிர்ப்பு மனோநிலையை புறக்கணித்து, ஹக்கீம் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்திருந்த போது பல்வேறு விதமான அழுத்தங்களுக்கும், அவமானங்களுக்கும், பயமுறுத்தல்களுக்கும், காட்டிக்கொடுப்புகளுக்கும் மாத்திரமல்லாமல் கட்சியின் பிளவுக்கும் முகங்கொடுக்க வேண்டி இருந்தது என்பதை இன்று அவரை விமர்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் முற்று முழுதாக மறந்து போய் இருக்கிறார்கள். இவ்வாண்டு நடபெற்ற மத்திய மாகாண சபை தேர்தல், ஊவா மாகாண சபை தேர்தல் என்பனவற்றின் தேர்தல் மேடைகளில் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஹக்கீமை தோல் வேறு  சதை வேறாக பிய்த்து பிய்த்து பிரச்சாரம் செய்தார்கள். 

ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்காத ஹக்கீம் ஏதோ மன்னிக்க முடியாத பெரும் பாவம் செய்யும் ஒருவராக ஐக்கிய தேசிய கட்சி அபிமானிகளால் அக்கு வேறு ஆணி வேறாக அலசப்பட்டார்;.

ஹக்கீம் மஹிந்தவுக்கு தரகர் வேலை பார்ப்பதாகவும், ஆளும் கூட்டணிக்கு முஸ்லிம சமூகத்தை விற்று விட்டதாகவும் பந்தி பந்தியாக எழுதப்பட்டது. துண்டு பிரசுரங்கள் தூள் கிளப்பின. அண்மையில் நடந்து முடிந்த ஊவா தேர்தல் களத்தில் ஹக்கீம் எதிர்ப்பு பிரச்சாரத்திலே ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் பிரிவினர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஐக்கிய தேசியக் கட்சி மேடை பீரங்கிகளும் முழங்கின. 

இப்போது அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளர் ஒருவரை கனவு கண்டு கொண்டிருந்த அனைத்து மக்களினதும் அபிலாசைகளை தூர எறிந்து அவசர அவசரமாக ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்று ரணிலை தூக்கிப் பிடித்து நிறுத்தியுள்ள அக்கட்சியினர் மீண்டும் ஹக்கீம் புராணம் ஓதத் தொடங்கியுள்ளனர். 

உள்ளுர் ஆட்சி சபை, மாகாணசபை, பாராளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் என எந்த ஒரு தேர்தலிலும் ஒரு போதும் மஹிந்தவை ஆதரிக்காத, இவ் ஆளும் அரசுக்கு வக்காளத்து வாங்காத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2010 பொதுத் தேர்தல்வரை ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக பல அர்ப்பணிப்புகளை செய்து கழுத்தறுப்புக்கு ஆளாகியுள்ளது என்பதை கிஞ்சித்தும் கவனத்தில் எடுக்காது விமர்சிப்பவர்களுக்கு ரணில் ஓட்டுனராக இருக்கும் பஸ்ஸிற்கு ஹக்கீம் பெட்ரோல் அடித்த செலவுகளை கணக்கு காட்டுவது பொருத்தமாக இருக்கும். 

2001 : 90களின் முற்பகுதியில் கட்சி தலைமையை பொருப்பேற்ற ரணில் ஒருபோதும் வெற்றி பெற முடியாதவர் என்று விமர்சிக்கப்பட்ட போது, 2001ல் மாவனெல்லை இனக்கலவரத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் காரணமாக சந்திரிக்காவின் ஆளுகையில் இருந்த பாராளுமன்றத்தை ஒரு வருட ஆயுளோடு கவிழ்த்து ஐக்கிய தேசியக் கட்சியை பாராளுமன்றத் தேர்தலில் வெல்ல வைத்து, ரணிலை பிரதமராக்கினார். 

2004 : ஜே.வி.பி 10 சுதந்திரக்கட்சி சதியில் ரணிலின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பொதுத் தேர்தல் நடாத்தப்பட்ட போது, ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவென்று ஹக்கீம் பகிரத பிரயத்தனம் செய்தும் சொற்ப ஆசன வித்தியாசத்தில் அது சாத்தியமாகாது போனது. ஆட்சி அமைக்க அறுதிப் பெரும்பான்மை அற்றிருந்த சந்திரிக்காவின் அழைப்பை ஐக்கிய தேசியக் கட்சிக்காக தூக்கி எறிந்ததன் காரணத்தால் ரிஷாத், அமீர் அலி, நஜீப் ஏ. மஜீத், ஹூஸைன் பைலா, பாயிஸ் ஆகிய ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி அமைச்சர்களாகி முஸ்லிம் காங்கிரஸ் வாக்கு வங்கியின் பகற் கொள்ளை காரர்களானார்கள். அன்று ஹக்கீம் ஐக்கிய தேசியக் கட்சிக்காக நின்றிருக்கா விட்டால் இன்று வடக்கில்; மு.காவுக்கு சவால் விடுக்க ஒரு மக்கள் காங்கிரஸ் தோற்றம் பெற்றிருக்க மாட்டாது.

2005 : ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவை எதிர்த்து ரணில் களம் இறங்கிய இந்தத் தேர்தலில் வரலாறு காணாத பெரும் ஜன வெள்ளத்துடனான மாபெரும் மாநாடொன்றை கல்முனையில் நடாத்தி நாடு பூராகவும் சூறாவளிப் பிரச்சாரங்களை செய்து ரணிலுக்கு (ஐக்கிய தேசியக் கட்சிக்கு) நாடு தழுவிய ரீதியில் முஸ்லிம் வாக்காளர்களை அணி திரட்டினார். வெற்றி வாய்ப்பு தமிழர்களின் தேர்தல் புறக்கணிப்பால் சொற்ப வாக்குகளால் ரணிலுக்கு கை நழுவி போனது. 

2007 : 2008க்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் ஆளும் கூட்டணியை தோற்கடித்து மீண்டும் ஒரு பொதுத் தேர்தலுக்கு செல்வதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சி கதிரையில் அமர்த்த ஆளும் அரசின் பங்காளிகளாக இருந்து அமைச்சுப் பதவிகளை எறிந்து விட்டு முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறி வந்தது. ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியால் தொண்டமானையோ, ஜே.வி.பியினரையோ  வளைத்து போட முடியாமல் போன கையாலாகதனத்தால் ஹக்கீம் மீண்டும் ஒருதடவை தோல்விக்கு ஆளானார். 

2008 : முதலாவது கிழக்கு மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட போது அதிரடியாக ஹக்கீம் ஹஸன் அலி, பஷீர் சேகு தாவூத் ஆகியவர்கள் பாராளுமன்ற ஆசனங்களை துறந்து கிழக்கு மாகாண சபை தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறங்கினர். முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான கிழக்கில் நடைபெற்ற முதலாவது மாகாணசபை தேர்தலில் கட்சி அதன் சின்னத்தை கைவிட்டு, ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்தில் அதனை ஆட்சியில் அமர்த்துவதற்காக மாபெரும் தியாகம் ஒன்றை செய்தது. பராளுமன்ற உறுப்பினராக, இருந்த ஒரு கட்சித் தலைவர் மாகாண சபை தேர்தல் ஒன்றில் வேட்பாளராக இறங்கியது அதுவே முதல் தடவையாகும். தவிசாளர், செயலாளர் நாயகம்  ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியை வெல்ல வைப்பதற்காக இதுவரை எந்த ஐக்கிய தேசியக் கட்சி காரரும் செய்யாத அந்தத் தியாகத்தை செய்தார்கள். 

தொடர்ச்சியாக எல்லா மாகாணச் சபைத் தேர்தல்களிலும் அனைத்து மாவட்டங்களிலும் தோல்விக் கண்டு வருகின்ற ஐ.தே.கவிற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் திருகோணமலை மாவட்டத்தை வென்று கொடுத்தார்.
(1995ம் ஆண்டிற்குப் பின்னர் 2008ல் திருகோணமலை மாவட்டத்தை மட்டுமே ஐ.தே.க வென்றுள்ளது. அதுவும் ஹக்கீமின் கைங்கரியத்தால்) 

1ஃ3 பங்கு சிங்கள வாக்காளர்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியால் சிங்கள வாக்குகளை அள்ள முடியாது போனதால் அந்தத் தேர்தலில் கைகெட்டிய வெற்றியை வாயில் போட்டுக் கொள்கிற வாய்ப்பு தவறிப் போனது எதிரணியின் அமீர் அலி, சுபைர், உதுமாலெவ்வை ஆகியோர் பயில்வான்களாக உருவானார்கள். ஐ.தே.க வினால் முஸ்லிம் காங்கிரஸ்; இலவுகாத்த கிளியாக்கப்பட்டது. 

2010 ஜனவரி (ஜனாதிபதித் தேர்தல்) : பொன்சேகாவை ஜனாதிபதி ஆக்குவதன் மூலம் ரணிலை பிரதமராக்கி ஐ.தே.க வை ஆட்சியில் அமர்த்தலாம் என்கிற நம்பிக்கையுடன் ஹக்கீம் சுழல்காற்றாய் சுழன்று சண்ட மாருதமாய் நின்றார். பொத்துவில் தொடங்கி திருகோணமலை ஊடாக வன்னியைத் தொட்டு புத்தளம் வரையிலும் வீசிய 'பொன்சேகா புயலின்' வேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 'அரசமரம்' அப்பிரதேசங்களில் இருந்து வேரோடு கழற்றி சுழற்றி எறியப்பட்டது. ஆனாலும் வழமையைப்போலவே இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் தெற்கில் உள்ள சிங்கள பெரும்பான்மை வாக்குகளை திரட்டி எடுக்க முடியாத ஐ.தே.க வினது பலவீனம் காரணமாக மு.காவின் மூக்குடைப்பட்டது. 

2010 ஏப்ரல் (பாராளுமன்றத் தேர்தல்) : மஹிந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதைத் தடுக்கவும், ஐ.தே.க வை ஆட்சியில் அமர்த்தி ரணிலை பிரதமராக்கவும் முடியும் என்பதால் பொதுச்சின்னமான அன்னச் சின்னத்திலேயே பொது அணியாக களமிறங்க மு.கா. முழு மூச்சுடன் பேச்சுவார்த்தைகளை செய்தது. ஆனாலும் யானைச் சிங்கிலிகளால் கால் விலங்கு போடப்பட்டுள்ள ஐ.தே.க அதனை கழற்றிவிட்டு வர மறுத்து வீறாப்பு பேசியது. தாய்நாட்டின் ஜனநாயகத்தை காப்பதற்கும், ஐ.தே.க வை ஆட்சியில் அமர்த்தி ரணிலை பிரதமராக்கவும் மு.கா அதன் வரலாற்றிலேயே இல்லாத தியாகம் ஒன்றை இத்தேர்தலில் செய்தது. ஐ.தே.க விற்கு அதிக ஆசனங்களை பெற்றுக் கொடுக்க கட்சியின் மரச்சின்னத்தை முழுவதுமாக விட்டுக் கொடுத்து, நாடு முழுவதிலும் யானைச் சின்னத்தில் போட்டியிட்டது. 

ஐ.தே.கவின் கோட்டை என்று சொல்லப்படும் கொழும்பின் வரலாற்றில் முதல் தடவையாக அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களும் தோல்வியடைந்ததற்கு அக்கட்சியின் பிழையான தேர்தல் அணுகுமுறையே காரணமாகும். ஆனாலும் ஹக்கீமின் ஆற்றல், அணுகுமுறை, நுட்பம் மிகுந்த சாணக்கியம் என்பன காரணமாக கண்டி மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெற்றதன் மூலம் கச்சை அவிழ்ந்துவிழ இருந்த ஐ.தே.கட்சியின் அம்மணம் மறைக்கப்பட்டது. 

ஆனாலும் ஒரு போதும் இல்லாதவாறு மரச்சின்னத்தை ஐ.தே.க.விற்கு விட்டுக் கொடுத்ததன் விளைவாக இன்று பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி கேள்வி கேட்கும் தகுதியை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இழந்து நிற்கிறது. எந்த ரணிலை ஆட்சிபீடம் ஏற்றுவதற்காக சின்னத்தை விட்டுக் கொடுத்ததோ அதே ரணில் மு.கா. தலைமையின் உரிமையை பாராளுமன்றில் பறிக்கும் கேவலத்தை அரங்கேற்றியுள்ளார். 

அன்று ஐ.தே.க 2010 பாராளுமன்றத்த் தேர்தலில் ஜே.வீ.பி பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் என்பனவற்றுடன் இணைந்து அன்னச் சின்னத்தில் களமிறங்கியிருந்தால் மூன்றில் இரண்டை கனவிலும் காண முடியாத 125 -128 ஆசனங்களுடன் மகிந்தவின் பாராளுமன்றம் மட்டுப்படுத்தப் பட்டிருக்கும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு மகிந்த நின்றிருக்க முடியாது. ரணில் இலகுவாக வென்று அமர்ந்திருக்கலாம்.

முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே. கட்சியுடன் இணைந்து இறங்கிய பொதுத் தேர்தல்களில் செய்துகொள்ளப்பட்ட தேர்தல் உடன்படிக்கைகளை ரணில் இரண்டு தடவைகளிலும் நிறைவேற்றியுள்ளார். அவ்விரு தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்திருந்தாலும் கட்சிக்குள் உருவான மோதல், முறுகல்களை பொருட்படுத்தாது முஸ்லிம் காங்கிரஸிற்கு தேசிய பட்டியல் ஆசனங்களை ஒப்பந்தப் படியே அளித்து அவரின் நம்பகத தன்மையை நிரூபித்திருக்கிறார். 

தேர்தல் உடன்படிக்கைகளை எதிர்பார்ப்புடன் செய்துக் கொள்ள கூடிய ஒரு கட்சி தலைமை இருக்கிறதென்று சொன்னால் அது ரணில்தான் என்பதில் முஸ்லிம் காங்கிரஸ் நம்பிக்கை வைத்தாகவேண்டும்.  

மொத்தத்தில் புத்தாயிரமாம் ஆண்டு பூத்ததில் இருந்து இன்றுவரை ரணில் ஓட்டுனராக உள்ள பஸ்லில் கண்டக்டராக இருந்த ஹக்கீம் - 

ஒரு தேர்தலில் காற்றுப்போன டயர்களை மாற்றியும்,  மறு தேர்தலில் எஞ்சின் ரிப்பேர் செய்யப்போய் மஜான் பூசிக் கொண்டவராகவும்  இன்னொரு தேர்தலில் தனியனாக தள்ளு ஸ்டார்ட் கொடுத்தவராகவும்  அடுத்து வந்த தேர்தல் ஒன்றில் பஞ்சரான டயர்களை உருட்டிக் கொண்டு போய் புதிய டயர் வாங்கி வருபவருமாக தசாவதாரங்கள் எடுத்திருக்கின்றார். 

அந்த ரீ கண்டிஷன் பஸ் செங்குத்தான பாதையில் சிரமம் இன்றி பயணிக்கும் என்கின்ற நம்பிக்கை வலுவடைவதால் நிறையப் பயணிகள் பொதிகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் பொதிகளுடன் வரும் பயணிகள் ஏற்றப்பட மாட்டார்கள் என்று பஸ் சங்கம் கூறுவதுதான் பிரச்சினையாக இருக்கிறது. 

இப்போது எஞ்சின் ரீ ஹோல் செய்யப்பட்டு, டிங்கரிங் முடித்து புதுப் பெயின்ட் விசிறப்பட்டுக் கொண்டிருக்கிற ரணிலின் பஸ்சிற்கு ஹக்கீம் ரைட் சொல்லி விசில் ஊத வேண்டும் என்கிற ஆதங்கத்தில் பலரும் அவரை திட்டியும், வசை பாடியும் வாய்க்கு வந்தவாரெல்லாம் ஏசியும், கை வளைந்த கோலத்திலெல்லாம் கிறுக்கியும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். 
ஆனாலும சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

1 comment:

  1. திரு ஹஸீர் அவர்களே, அன்று கள நிலவரம் புரியாமல் ஹக்கீம் அவரின் சுய நலத்துக்காக ரணிலுக்கு ஆதரவாக இருந்தார் என்பதை கட்டுரையாளர் கவனத்தில் கொள்ளாமல் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

    அன்று ரணில் தோற்றது அவரின் புலிகளுடனான பேச்சு வார்த்தை தான் என்பது யாவரும் அறிந்ததே.

    ஹக்கீமுக்கு எது விருப்பம் என்பதை விட முஸ்லிம்களுக்கு எது நல்லம், முஸ்லிம் மக்களின் விருப்பம் என்ன என்பதை அறிந்து முஸ்லிம் காங்கிரஸ் தனது அரசியல் பயணத்தை முன் நகர்த்த வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.