Header Ads



புலிகளின் சொத்துக்களை கைபற்ற அரசாங்கம் போட்டி போடுகிறது - மங்கள சமரவீர

விடுதலைப் புலிகள் அமைப்பின் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியதன் பிரதான பயன் கே.பி. என்ற குமரன் பத்மநாதனுக்கு அவருக்கு பின்னால் இருக்கும் அரசாங்க சக்திகளுக்குமே கிடைக்கும் என ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசாங்கத்தின் இயலாமை அல்லது அறியாமையினால் இது நடந்திருக்கலாம், அல்லது திட்டமிட்ட சூழ்ச்சியில் அடிப்படையில் புலிகளின் தடைநீக்கப்பட்டதாக என்ற நியாயமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு நான் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற போது விடுதலைப் புலிகள் அமைப்பு ஐரோப்பாவிலேயே வலுவான நிதி மற்றும் வர்த்தக கட்டமைப்புகளை நடத்தி வந்தது.

அதற்கு முன்னர் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் முயற்சியால், அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகளை தடை செய்த பின்னர், அந்த அமைப்பின் சகல வங்கி கணக்குகளும், பாரியளவில் நிதியை சம்பாதிக்கும் வர்த்தகங்களும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மாற்றப்பட்டன.

இதன் காரணமாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளை ஒன்றாக இணைத்து ஐரோப்பாவில் மாத்திரமல்லாது ஏனைய பிரதான நாடுகளின் தூதுவர்களின் உதவியுடன் புலிகளை ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புலிகளுக்கு தடை விதிக்க தயங்கிய சில ஐரோப்பிய நாடுகளை அமெரிக்காவின் உதவியுடன் இணங்க செய்து ஒத்துழைப்பை பெற்றோம்.

அன்றைய அமெரிக்க ராஜாங்க செயலாளர் கொண்டலீசா ரைஸ் மற்றும் நிக்கலஸ் பேர்ன்ஸ் ஆகியோர் இதற்கு பெரும் உதவியை செய்தனர்.

ஐரோப்பிய ஒன்றியம் 2006 மே 29 ஆம் திகதி புலிகளுக்கு விதித்த தடையை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இதனால் புலிகள் பெரும் பின்னடைவை சந்தித்துடன் அவர்களின் வர்த்தகங்கள், சொத்துக்கள், வங்கி கணக்குகள் என அனைத்தும் முடக்கப்பட்டது.

அன்றைய வெளிவிவகார அமைச்சு பெற்றுக்கொடுத்த இந்த தடையை தக்கவைக்க இன்றைய அரசாங்கத்திற்கு முடியாமல் போனமை ஆச்சரியம் அளிக்கிறது.

தடை நீக்கம் தொடர்பான வழக்கில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் எவரும் ஆஜராகவில்லை. குறைந்தது தடை நீக்கத்தை எதிர்த்து இலங்கையின் தூதுவர் கூட சத்திய கடிதத்தை நீதிமன்றத்திற்கு அனுப்பவில்லை.

இதனால், அரசாங்கத்தின் திட்டமிட்ட சூழ்ச்சியால், புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்பட்டதா என்ற நியாயமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் 2006 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை முடக்கப்பட்டிருந்த சகல சொத்துக்களும் விடுவிக்கப்படும்.

அப்போது பெயரிடப்பட்டிருந்த புலிகளின் தலைமைத்துவத்தை சேர்ந்த சிலருக்கு மாத்திரமே இந்த சொத்துக்கள் கிடைக்கும்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் அனைவரும் 2009 ஆம் ஆண்டு கொல்லப்பட்டனர். தற்போது இந்த சொத்துக்களுக்கு உரிமை கோரக் கூடிய உயிருடன் இருக்கும் ஒரே தலைவர் அந்த அமைப்பின் சர்வதேச பொறுப்பாளராக செயற்பட்டவரும் 2009 ஆம் ஆண்டு தன்னை புலிகளின் தலைவராக அறிவித்து கொண்டவருமான கே.பி. என்ற பத்மநாதன் மாத்திரமே.

இவர் தற்போது அரசாங்கத்தின் பிரதான செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார். ராஜபக்ஷ அரசாங்கத்தின் அனுசரணையில் அவர் சுகபோகங்களை அனுபவித்து வருகிறார்.

அவர் ஊடாக புலிகளுக்கு சொந்தமான தங்கம், கப்பல்கள் உட்பட ஏனைய சொத்துக்கள் பற்றிய தகவல்களை அரசாங்கம் அறிந்து கொண்டுள்ளது என்பது ரகசியமான விடயமல்ல.

கே.பி ஊடாக இந்த சொத்துக்களை அரசாங்கத்தில் உள்ள சிலர் பெற்றுக்கொள்ளும் தேவை காரணமாகவே ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் தடை நீக்கம் தொடர்பான வழக்கில் அரசாங்கத்தின் தரப்பில் இருந்து எவரும் ஆஜராகவில்லையோ என்ற நியாயமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராஜபக்ஷ அரசாங்கம் தனது சூழ்ச்சியான வேலைத்திட்டத்தை மறைப்பதற்காக வழமைப் போல் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது புலி முத்திரையை குத்தும் முட்டாள்தனமாக முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக புலிகள் அமைப்பில் உயிருடன் இருக்கும் கே.பி., கருணா, பிள்ளையான் போன்ற தலைவர்களை தமது மடியில் வைத்து கொண்டு கொஞ்சி வரும் அரசாங்கம்,

ஐக்கிய தேசியக் கட்சியின் மீது குற்றம் சுமத்துவதை புத்திசாலியமான மக்கள் அருவருப்புடன் நிராகரிப்பார்கள். எனவும் மங்கள சமரவீர தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.