Header Ads



பிரபாகரன் எமது மக்களை அகதிகளாக்க, எமது அரசியல்வாதிகள் எம்மை அடிமைகளாக்கினர் - அஸ்மின் அய்யூப்


நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் நேற்று 22.10.2014 புதன்கிழமை வவுனியா குருமன்காடு மனிதவள மேம்பாட்டு நிலையத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்களின் தலைமையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் MR.நஜா முஹம்மத் அவர்களின் வழிகாட்டலிலும் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அத்துடன் அரசியல் பிரமுகர்கள், சமூக சேவை நிறுவன பிரதிநிதிகள், பள்ளிவாயல் நிருவாகிகள், அரச உத்தியோகத்தர்கள் என பல மட்டங்களையும் சேர்ந்த பலரும் பங்கெடுத்தனர்.

வடக்கு மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த பல்வேறு முயற்சிகள் இதுவரை உரிய பலாபலன்களைப் பெற்றுத்தரவில்லை. திட்டமிடப்படாத குடியேற்றம் இடம்பெறுகின்றது. மக்கள் பல்வேறு அசௌகரிகங்களை எதிர்கொள்கின்றார்கள், ஒருசில அரசியல்வாதிகளின் முறைகேடான நடவடிக்கைகள் மீள்குடியேற்றத்திற்கு பாதிப்பாக அமைத்திருக்கின்றது என பலவாறான கருத்துக்களை நிகழ்வில் கலந்துகொண்டோரால் முன்வைக்கப்பட்டன.

இதன்போது உரையாற்றிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் MR,நஜா முஹம்மத், "நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்போடு மேற்கொண்ட ஒப்பந்தமானது வடக்கு முஸ்லிம்கள் மீள்குடியேற்றத்திற்கு வழி சமைத்திருக்கின்றது எனவும் இதனை வடக்கு மக்கள் எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என்பது வடக்கு சிவில் சமூகத்தை சார்ந்த ஒருவிடயமாகும். எவ்வாறாயினும் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கு எல்லாவிதமான ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு நாம் தயாராக இருகின்றோம்" என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் கருத்துத் தெரிவிக்கும்போது, "வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் திட்டமிடப்படாத ஒரு விடயமாக இருப்பினும் இங்கிருக்கின்ற சூழ்நிலைகளை புரிந்துகொள்ளாமல் இருப்பதும், கொள்கை திட்டமிடல்களுமின்றி இருப்பதும் ஒருவித சவாலாகும். விடுதலைப் புலிகளின் தலைவர் எமது மக்களை அகதிகளாக்கினார், எமது அரசியல்வாதிகள் எம்மை அடிமைகளாக்கினார்கள். சுயமாக சிந்திக்கவும், செயற்பாடுகளை முன்னெடுக்கவும் திராணியற்ற சமூகமாக இன்று நாம் மாற்றப்பட்டிருக்கின்றோம், தங்கி வாழ்கின்ற நிலை மேலோங்கி இருக்கின்றது. இதனை நிவர்த்திக்கும் பொறுப்பு வடக்கு முஸ்லிம் சிவில் சமூகத்தைச் சார்ந்தது" என்று குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலின் இறுதியில் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வகையில் 25 பேர் கொண்ட 'வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம்' என்ற அமைப்பும் ஸ்தாபிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.