Header Ads



முஸ்லிம்கள் மேற்கொண்ட பொறுப்புக்களை, நான் மன நிறைவோடு நினைவுகூர்கிறேன் - சஜித்

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் 44வது வருடாந்த மகாநாடு கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச சிறப்புச் சொற்பொழிவாற்றினார். அதன் தமிழாக்கம் இங்கு தொகுத்து வழங்கப்படுகின்றது. 

இன்று முஹர்ரம் அல்லது இஸ்லாமிய புதுவருடத்தின் முதல் நாள். முதலில் நான் உங்கள் அனைவருக்கும் எனது புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  இன்று அதிதிகள் பெரும்பாலானோரது உரைகளைச் செவிமடுத்துக் கொண்டிருந்த போது, நான் சிறிது நேரம் பாராளுமன்றத்தில் இருந்தேனோ என்று நினைத்தேன். கௌரவ மாவை சேனாதிராஜாவின் கருத்துக்களை முன்வைத்ததைத் தொடர்ந்து வழமை போன்று ஆழமான வாத, பிரதிவாதங்களை முன்வைத்த எமது அஸ்வர் அவர்கள் தொடர்பில் நான் ஆச்சரியப்படப்போவதில்லை. ஏனெனில் அவர் ரணசிங்க பிரேமதாச அரசியல் பல்கலைக்கழகத்தில் சிறந்த பட்டமொன்றை பெற்றவர் என்ற காரணத்தினாலாகும். எனது கருத்தை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வருமோ என நான் நினைத்தேன். அது எவ்வாறெனினும் எனது சகா கௌரவ பிரதமர்களது தலைமையில் நடைபெறுகின்ற அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் 44 ஆவது வருட மகாநாட்டிற்கு எனது வாழ்த்தையும் இதயத்தின் உள்ளிருந்து வெளியாகும் ஆசிர்வாதத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 

மிகவும் கௌவரத்துக்குள்ளான, இந்த நாட்டின் மனங்கவர் அரசியல்வாதியொன்றைப் போன்றே எமது முன்னாள் சபாநாயகருமான காலஞ்சென்ற அல்ஹாஜ் எம்.ஏ.பாக்கிர் மாக்கார் அவர்களது சிந்தனைக்கேற்ப இந்த இளைஞர் முன்னணி உருவாகியிருக்கிறது. இஸ்லாமிய இளைஞர் சமூகத்தை பயங்ரகரவாதத்தில் சிக்காதவாறு ஜனநாயகப் பிரவாகத்தின் பங்காளிகளாக்கி, இனங்களுக்கிடையே சகோதரத்துவத்தை கட்டியெழுப்பும் நோக்கிலான பாரிய பொறுப்பொன்றை அவர்கள் மீது சுமத்துவதே இவ்விளைஞர் முன்னணியை உருவாக்கியதன் நோக்கமாகும். இன்று பல்வேறுபட்ட அரசியல் கொள்கைகயைக் கொண்ட அதிகமானோர் அந்தக் கொள்கைகளை ஒரு பிரச்சினையாக கருதாது இவ்விளைஞர் முன்னணியூடாக பொருளாதார, அரசியல் இலக்குகளை நோக்கி உறுதியோடு பயணிப்பதற்கு முடிந்திருக்கிறது. இது மிக வரவேற்கத்தக்கதொன்றாகும். இது தொடர்பில் இந்த இளைஞர் முன்னணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். 

முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையே சுமார் நூறு வருட கால இடைவெளிக்குள் மிக உறுதியான தொடர்பு இடம்பெற்றிருப்பதற்கான சான்றுகள் இருக்கின்றன. இலங்கை மக்களிடையே ஒரே தாயின், ஒரே தந்தையின் குழந்தைகளைப் போன்ற சகோதரத்துவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளது. சோனக மக்களுக்கு 'மரக்கல' என்ற பெயர் வந்தது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கும்போது தெரியவருவது, எமது நாட்டை ஆட்சி செய்த சிங்கள மன்னர்களைப் பாதுகாப்பதற்கு அன்றைய இஸ்லாமிய மக்கள் மேற்கொண்ட கடமையொன்றாகும். கண்டியை ஆட்சி செய்த அரசரொருவருக்கு வெளிநாட்டு ஆக்கிரமிப்புச் சக்தியொன்று அச்சுறுத்தல் மேற்கொண்டபோது அந்த அரசன் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டது மகியங்கனைப் பிரதேசத்திலுள்ள பங்கரகம்மன என்ற இடத்திலாகும். அங்கு வீடொன்றில் பால் கறந்து கொண்டிருந்த பெண்ணொருவர் "மன்னரது உயிரைக் காப்பாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சி காரணமாக எதிரிகளின் கரத்தினால் தன்னுயிரை இழந்த முறை வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. "என்னைக் காத்த இரத்தம்' அல்லது என்னைக் காத்தெடுத்த இரத்தம்' பிற்காலத்தில் "மரக்கலே' ஆகி அதன்பின் மரக்கல என மருவியிருப்பதென்பதும் நாம் அறிந்த விடயம். 

எமது நாட்டை வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுப்பதற்கு கலாநிதி ரி.பி.ஜாயா அவர்களைப் போன்றே சேர் ராசிக் பரீத் அவர்களும் மேற்கொண்ட உன்னத கடமையை எமக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மறக்க முடியாது. அதேபோல் இஸ்லாமிய மக்களுக்கு மிகுந்த சேவையாற்றிய டாக்டர் எம்.ஸீ.எம்.கலீல், பதியுதீன் மஹ்மூத் உட்பட முஸ்லிம் தலைவர்கள் அன்று மேற்கொண்ட பொறுப்புக்களை நான் இந்த சந்தர்ப்பத்தில் மன நிறைவோடு நினைவு கூர்கிறேன். அதேபோன்று அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளை பிரதிநிதித்துவப்படுத்திய கடந்த காலத் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். ரிஸ்வி சின்னலெப்பை, என்.எம்.சஹீட், எமது முன்னாள் அமைச்சர் எனது அன்புக்குரிய இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், என்.எம்.அமீன், ரஷீத் எம். இம்தியாஸ் போன்ற அதன் முன்னாள் தலைவர்களினால் மேற்கொள்ளப்பட்ட என்றும் அழியாத சேவைகள் இன்றும் அனைவரதும் போற்றுதலுக்கு இலக்காகியிருக்கிறது. 

முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் மேற்கொள்கின்ற சமூக நல சேவைகளைப் போன்றே அரசியல் பயிற்சி, மக்கள் ஆபத்துக்குள்ளாகின்ற போது அவர்களை வாழ்விப்பதற்காக வழங்கிய ஒத்துழைப்பு, சக்தி போன்ற அனைத்தையும் நாம் கண்டிருக்கின்றோம். இதிலிருந்து அந்தப் பாரிய பொறுப்பை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு முன்வந்திருக்கும் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஐ.உதுமாலெப்பையெனும் புதிய தலைவருக்கு அதற்கான சக்தியும், தைரியமும், அதிர்ஷ்டமும் கிட்டுவதற்கு பிரார்த்திக்கின்றேன். 

நாம் இன்று பயங்கரவாதத்திலிருந்து மீண்ட இலங்கையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது நாடு யுத்த வெற்றி கொண்ட நாடு. மூன்று தசாப்த காலமாக இந்த நாடு எதிர்கொண்ட கொடூர புலிப் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துள்ளது. எதிரிக்கு கௌரவமளிப்பது அரசியல் துறையில் மிக அரிதாகும். மைக்றோபோனை கையிலெடுத்தாலும், மேடையொன்றில் ஏறினாலும் நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது தசம் ஒன்பது வீதம் அரசியல்வாதிகள் ஜெபிக்கின்ற  மந்திரமேயுள்ளது. அவர்கள் காட்ட முயல்வது தன்னை போன்ற சிறப்பான ஒருவர், தமது கட்சியைப் போன்ற சிறந்த கட்சியொன்று இந்த உலகில் எப்போதும் உருவானதில்லை என்பதாகும். இந்த சம்பிராயத்திலிருந்து விலகி அரசியல் பொறாமை, குரோதம், வைராக்கியம் போன்றவற்றிலிருந்து நீங்கி யுத்த வெற்றிக்கான முழு கௌரவத்தையும் தற்போதைய அரசாங்கத்துக்கு வழங்குவதற்கு நான் விரும்புகின்றேன். 

எனினும் இலங்கை குரூர யுத்தத்திலிருந்து மீண்டு ஐந்தரை வருடங்களின் பின்னரும் எமது மக்களது முகங்களை நோக்குகின்ற போது அந்த முகங்களில் இன்னமும் மகிழ்ச்சியை காண்பதற்கில்லை. அந்தப் புலி யுத்தம் இடம்பெற்ற காலத்தை விட இறந்த  நிலையிலிருந்த முகங்களாகவே அதனை நான் காண்கின்றேன். இது கவலைக்குரிய விடயம். இவ்வாறான நிலை இடம்பெறுவதையிட்டு  நாம் கவலை கொள்ள வேண்டும். யுத்த வெற்றிக்கான நன்றியுணர்வை ஆளும் கட்சிக்குப் பெற்றுக் கொடுக்கும் அதேவேளை யுத்தத்தை வெற்றி கொண்ட போதிலும், இன்னும் சமாதானத்தை வெற்றி கொள்ள முடியாமல் போயுள்ளமை தொடர்பில் நாம் வெட்கப்படவேண்டும். இனங்களுக்கிடையேயும் மதங்களுக்கிடையேயும் இணக்கப்பாடு, நற்புறவு, சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதற்கு நாடென்ற ரீதியில் எமக்கு முடியாமல் போயிருப்பது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும். இன்று நாட்டை நிர்வகிக்கின்றவர்களும் கட்சி, எதிரணி அனைவரும் அரசியல்வாத, பேதங்கள், கொள்கை கோட்பாடுகள், தர்க்கங்களை புறந்தள்ளிவிட்டு, இதயசுத்தியோடு எமது நாட்டு மக்களிடையே நற்புறவு, நல்லிணக்கம், சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்போடு செயற்படவேண்டும். 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டதும், ஆபத்துக்களை எதிர் கொண்டதும், சிங்களம், தமிழ், மலே, பேகர் போன்ற இந்த நாட்டின் ஒட்டு மொத்த மக்களாகும். யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் சமாதானத்தின், சகோதரத்துவத்துக்கான கரங்கள் நீட்டப்பட்டு மீண்டும் நாடென்ற வகையில் ஒன்றிணைவதற்கு நாம் தயாராக வேண்டியிருந்தது. சிங்களம், தமிழ், முஸ்லிம், பேகர் போன்ற அனைத்து இனங்களுக்கும், பௌத்தம், கத்தோலிக்க, இந்து, இஸ்லாம் போன்ற மதங்களை பின்பற்றுகின்ற அனைவருக்கும் சொந்தமான இலங்கை எங்கள் அனைவரினதும் தாயகமாகும். அங்கு தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும். 

எமது நாட்டை வீழ்த்துவதற்கு "டயஸ்போராக்கள்' நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் நாம் கேள்விபடுகிறோம். எனினும் "தமிழ் டயஸ்போராக்களையும், எல்.ரீ.ரீ.ஈ. டயஸ்போராக்களையும் வெவ்வேறாக பிரித்தறியக் கூடிய தெளிவும், அறிவும், ஞானமும் இருக்கவேண்டும். தமிழ் டயஸ்போரா மற்றும் எல்.ரீ.ரீ.ஈ. டயஸ்போரா அல்லது புலி டயஸ்போரா எனக் கருதப்படுவது இரண்டு. ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் பிரிவினை வாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் அல்லர். இந்த வேறுபாட்டை அறிந்து கொள்ளும் வரை எமது நாட்டில் சமாதானம், நற்புறவு, நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது. நாம் அனைவரும் ஐக்கிய இலங்கையொன்றுக்காக செயற்படும் மக்கள். நாம் அர்ப்பணிப்போடு செயற்படுவது நாட்டின் இறைமை, சுயாதிபத்தியம், அரசியல் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காகும். தேசப்பற்று, தேசாபிமானம் எவருக்கும் உரித்துறுதியெழுதி வழங்கப்படவில்லை. அது எந்தவொரு பிரிவுக்கோ, கட்சியொன்றுக்கோ மாத்திரம் சொந்தமானதொன்றல்ல. அதன் பங்காளிகளான மக்களும் நாட்டின் மீது அன்பு கொண்டவர்கள். இவர்கள் நாடு இரண்டு படுவதை விரும்பமாட்டார்கள். 

இன்று நாட்டை கூறுபோடுவதற்கான சதியை மேற்கொள்ள முயற்சிப்பதும், இனங்களுக்கிடையே மற்றும் மதங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை சிதைப்பதற்கு முயற்சிப்பதும் அதற்கெதிரான பிரிவினரே. இந்த நாட்டில் ஒருமைப்பாடு, ஐக்கியத்தை எதிர்பார்க்கின்ற பெரும்பான்மையானோரது கருத்தை மலினப்படுத்துவதற்கு மிகச் சிறிய சிறுபான்மையினரான இனவாத சக்திகள் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் "மீண்டும் பிரிவினைவாதமொன்றுக்கான விதையை இவர்கள் விதைத்துக் கொண்டிருப்பதென்பதாகும். இது எனது நாடு. நான் இலங்கைப் பிரஜை. நான் ஒதுக்கப்படுதலுக்கு, வேறுபாட்டுக்கு என்றும் ஆளாகியதில்லை. எனது இனம், மதம், கோத்திரம், குலம், அரசியல் கட்சி எதுவானாலும் எனக்கு இந்த நாட்டில் உரித்தான உரிய இடத்தைப் போன்று உரிமையும் இருக்கிறதென இந்த நாட்டிலுள்ள அதிபெரும் பெரும்பான்மை மக்கள் நினைக்கக்கூடிய நாளொன்றில் இந்த நாட்டில் இனவாதத்தைப் போன்று பிரிவினைவாதமும் தோல்வியைத் தழுவும். 

பிரிவினைவாதத்தை யுத்த காலத்தில் மாத்திரம் தோல்வியடையச் செய்ய முடியாது. பிரிவினை வாதத்தை தோற்கடிக்கச் செய்ய முடிவது இனப் பிரிவுகளின் மனங்களை வெல்வதனாலாகும். சுயாட்சி பற்றிய கருத்துக்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஏன் மீண்டும் சுயாட்சி தொடர்பிலான வாதம் முன்வைக்கப்படுகின்றது. நாம் அனைவரும் ஏற்றுக் கொண்ட, அங்கீகரித்த 13வது அரசியலமைப்பு திருத்தத்தை வேறுபாட்டுத் தன்மை, தலையீடுகளின்றி மக்கள் அங்கீகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் ஏற்ப ஒழுங்காக நடைமுறைப்படுத்துவோமானால் சுயாட்சித் தேவை அவசியப்படுவதில்லை. சுயாட்சி யோசனைக்கு புத்துயிரூட்டி மீண்டுமொருமுறை பிரிவினைவாத விஷக் கிருமியை பரப்புவதற்கு சுற்றாடலை தயார்படுத்துவது தேசாபிமானமா? தேசப்பற்றா, தேசத்துரோகமா? 

எமக்கு எப்போதும் "கறுப்பு ஜூலை' யொன்றின் மூலம் நாட்டுப் பிரச்சினையை தீர்க்க முடியாது. எமக்கு எப்போதும் "கறுப்பு ஜூன்' ஒன்றின் மூலமும் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியாது. இன்று நாட்டில் இடம்பெறும் வேறுபாடுகளை நாம் இனங்காண வேண்டும். எதற்கும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. 13வது அரசியலமைப்புத் திருத்தம் ஐக்கிய இலங்கைக்குள் அமுல்படுத்த முடியுமென உச்ச நீதிமன்றம் கூட ஏற்றுக் கொண்டிருக்கிறது. 13வது அரசியலமைப்பு திருத்தத்தை எனது தந்தை அன்று பாராளுமன்றத்தில் முன்வைத்தது அவ்வுச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்தேயாகும். அது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகமானதென அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பின் எந்தவொரு காரணத்துக்காகவும் எனது தந்தை அதனை பாராளுமன்றத்துக்கு முன்வைத்திருக்கமாட்டார். நாம் எவருக்கும் பயப்படத் தேவையில்லை. எமது நாட்டு மக்கள் தொடர்பில் நாம் சந்தேகப்படுவதேன்? மக்களது வாக்குகளால் நியமனம் பெறுகின்ற முதலமைச்சரொருவரை  காலில் படிந்திருக்கும் தூசியின் அளவுக்காவது கருத்திலெடுக்காது ஒரு புறமாக தூக்கியெறிவது ஏன்? யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வடக்கு மக்கள் அவர்களது அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார்கள். கிழக்கு மக்களும் அவர்களது அபிப்பிராயத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த மக்கள் குரலுக்கு, மக்கள் ஆணைக்கு, மக்களது ஆலோசனைகளுக்கு நாம் சிறந்த பதிலை வழங்கவேண்டும். அதுவே ஜனநாயகம். 

நாம் பேச வேண்டியிருப்பது உண்மையான தேசாபிமானம் தொடர்பிலாகும். கொடூரமான தொனியில் பேசுவதால் மாத்திரம், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு சக்தி தொடர்பில் பேசுவதால் மாத்திரம் ஒருவர் தேசப்பற்றாளராக முடியாது. 

  தேசாபிமானம் செயற்பாட்டு ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தமது செயற்பாடுகள் காரணமாக நாடு துண்டாடலுக்குள்ளாகக் கூடாது. தமது செயற்பாடுகள் காரணமாக சமாதானம், நற்புறவு, ஒற்றுமை வளர்ச்சியடையுமாயின் அதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும். இனங்களுக்கிடையே நல்லுறவு, நல்லிணக்கம்,நட்புறவு கட்டியெழுப்பப்படுவதால் தான் எமது நாட்டின் இறைமை பாதுகாக்கப்படுகிறது. அவ்வாறின்றி மேடைகளில் ஏறி நாட்டிலுள்ள பல்வேறு வகையான சிறுபான்மையினர்களை அகௌரவப்படுத்தி அவர்களது பிரசாவுரிமையை அவமரியாதைக்குள்ளாக்கி என்றைக்கும் எமது நாட்டை பாதுகாக்க முடியாது. அதனால் இடம்பெறப் போவது நாட்டுக்கெதிரான எதிரிகளது கருத்து பரவலடைவதற்கு வழியேற்படுத்துவதாகும். 

உலகம் பூராகவும் புத்த பெருமானார் கூட அன்று உபதேசம் செய்தது "வைராக்கியத்தினால் வைராக்கியத்தை இல்லாதொழிக்க முடியாது' சிறந்த சிங்கள பௌத்தம் என்பது அதற்கேயாகும். இன்று பல்வேறுபட்ட "காட்போர்ட்' சிங்கள பௌத்தர்கள் இருக்கிறார்கள். அவர்களது தாக்குதல்களுக்கு நாங்களும் இலக்காகிறோம். எனினும் நாம் அவை தொடர்பில் அதிர்ச்சிடையமாட்டோம். நான் கிறிஸ்தவ தேவாலயமொன்றுக்கு, முஸ்லிம் பள்ளிவாசலொன்றுக்கு, இந்து கோயிலொன்றுக்கு சென்று உதவி செய்தால் நான் சிறுபான்மையினர் கையாளென இணையதளங்களிலும், வெப் தளங்களிலும் வெளிப்படுத்துகிறார்கள். இதனால் நான் தயங்கப் போவதில்லை. ஏனென்றால் நான் கலப்படமற்ற சிங்கள பௌத்தன் என்ற காரணத்தினாலாகும். கலப்படமற்ற சிங்களம் என்பது ஏனைய இனத்தவர்களோடு கைகோர்த்துக் கொண்டு நல்லிணக்கத்தோடு இருப்பதாகும். உலகம் பூராகவும் புத்த பெருமானாரவர்கள் உபதேசம் செய்திருப்பது அனைத்து உயிரினங்களும் கவலையற்றிப்பாயாக, ஆரோக்கியம் கொண்டிருப்பாயாக, நோயற்றிருப்பாயாக, வைராக்கியமற்றிருப்பாயாக, கவலையிலிருந்து மீட்டெடுப்பாயாக, நன்மையளிப்பாயாக என்றவாறாகும். அவ்வாறின்றி ஒரு இனத்துக்கு ஒரு மதத்துக்கு ஒரு பிரிவினருக்கு மாத்திரம் கவலையற்றிருப்பாயாக, ஆரோக்கியமாயிருப்பாயாக, நோயற்றிருப்பாயா என அன்னவர் உபதேசிக்கவில்லை. இந்த உலகில் தார்மீகமாக உயிர் வாழும் அனைத்து மக்களுக்கும் இந்தப் பிரார்த்தனை பொருந்துகிறது. நாம் ஸ்ரீ தலதா கடவுளை வழிபடம் போது, ஸ்ரீ மகா போதி கடவுளை வழிபடும் போது அந்த அறக் குளிர்ச்சியினால் அந்த அற நெறியின் வாசனையினால் எமது இதயங்கள் உணரும் ஒரே உணர்வாவது எமது நாட்டில் பல்வேறுபட்ட இன, மத, வகுப்பு, கட்சி, குல, கோத்திரங்களும் உரிய மக்கள் சுகம் பெறுவார்களாக என்றவாறாகும். அனைவரும் இன்பமடைவார்களாக என்றவாறாகும். பௌத்த மதத்தின் உண்மையான அர்த்தமும் அதுவே. 

40 வருட காலமாக சிறப்பான சமூக செயற்பாடுகளில் ஈடுபட்ட உங்கள் அனைவரிடமும் உண்மையான பௌத்தத்தை இனங்கண்டு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன். உண்மையான பௌத்த கொள்கைகளை இனங்காணுங்கள். மிகச் சிறியளவிலான கடும்போக்குவாதிகளால் சமூகத்தினுள் வைராக்கியம், தவிடு பொடியாக்குதல், தீயிடல், அழித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு முயற்சித்தால் அது பெரும்பான்மையானோரது கருத்தல்ல. எப்போதும் எமது கருத்துக்களை மாத்திரம் வலுக்கட்டாயமாக வெற்றி கொள்ளச் செய்வதால் நாட்டில் உண்மையான சமாதானம், உண்மையான நிலைப்பாடொன்றை கட்டியெழுப்ப முடியாது. எமது நாட்டில் இருக்க வேண்டியது விகாரைகளை நிர்மாணிக்கும் யுகமொன்றேயன்றி விகாரைகளை உடைத்துத் தள்ளும் யுகமல்ல. பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், கோவில்களை தீக்கிரையாக்கும் யுகமொன்றல்ல. அவற்றை பாதுகாப்பது எந்தவொரு நிர்வாகப் பொறிமுறையினதும் பொறுப்பாகும். அந்த தேசிய பொறுப்புக்கருதி ஆட்சியாளர்கள் அர்ப்பணிக்க வேண்டும். அன்று ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்கள் பௌத்த சாசனத்தை பாதுகாப்பதற்கு பௌத்த சாசன அமைச்சொன்றை உருவாக்கியபோது, இஸ்லாமிய மார்க்க நடவடிக்கைகளுக்கான அமைச்சொன்றை உருவாக்குவதற்கும் அவர் மறந்துவிடவில்லை. அதேபோன்று இந்து மத நடவடிக்கைகளுக்காகவும், கத்தோலிக்க, கிறிஸ்தவ மத நடவடிக்கைகளுக்காகவும் அமைச்சுக்களை உருவாக்குவதற்கும் மறந்துவிடவில்லை. எம் அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு இந்த பயணத்தை தொடர வேண்டும். 

இந்த நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்து தற்போது ஐந்தரை வருடங்களாகியும் குரூர யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அதிகமானோர் இன்னும் அகதி முகாம்களில் அல்லது நலன்புரி முகாம்களிலேயே இருக்கின்றனர். நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எம் அனைவரதும் கடமையாகும். எந்தவொரு பயங்கரவாதமும் மீண்டும் தலைதூக்குவதைப் பார்ப்பதற்கு எமக்கு எந்தவொரு தேவையும் இல்லை. நாம் பயங்கரவாதத்தை, அல்லது வேறேதேனும் அனர்த்தமொன்றினூடாக அரசியல் நன்மைகளை அடைந்து கொள்ள முயற்சிக்கும் பிற்போக்குவாத பிரிவினரொன்றல்ல. தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தும் அதேவேளை புலிப் பயங்கரவாதிகளால் தமது காணிகளை இழந்திருக்கும் மக்களுக்கு அவர்களது காணிகளுக்கு மீண்டும் சென்று வாழ்ந்து தமக்கென வீடொன்றை நிர்மாணித்துக் கொண்டு வாழக் கூடிய உரிமை தமிழ், முஸ்லிம், சிங்கள இனங்களுக்குரிய அந்த இடம் பெயர்ந்த அப்பாவி மக்களுக்கு இல்லையா? இந்த விடயம் தொடர்பில் எமது அவதானத்தை செலுத்த வேண்டியுள்ளது. 

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் 44வது வருடாந்த மாநாடு நடைபெறுகின்ற இவ்வேளையில் எமது இனம், மதம், கட்சி, வகுப்பு, குலம், கோத்திரம் எதுவாக இருந்தாலும் எமது ஒரே இலக்காக இருக்கவேண்டியது நாட்டை வெற்றி பெறச் செய்வதாகும். எமது ஒரே நோக்கம் நாட்டைப் பாதுகாப்பதாகும். குறுகிய வாத, பேதங்களை அடிப்படையாகக் கொண்டு ஏனைய இனத்தவர்களை நசுக்குகின்ற "கறுப்பு ஜூலை' "கறுப்பு ஜூன்' போன்ற துரதிஷ்டமான செயற்பாடுகளினால் எமது தாயகத்தை பாதுகாத்துக் கொள்ள முடியாது. அவ்வாறெனின் சிங்கள, முஸ்லிம், தமிழ் என்றவாறு வாத பேதங்களை ஏற்படுத்திக் கொள்ளாது ஒரே நாட்டில் ஐக்கியமாகவும், ஒற்றுமையாகவும் வாழக்கூடிய இயலுமை அனைவருக்கும் கிட்டும் யுகமொன்று நாட்டில் உருவாகட்டும். குறுகிய வாத, பேதங்களூடாக அரசியல் நன்மை பெற எத்தனிக்கும் குழுவினர் தோல்வியடையட்டும் என பிரார்த்திக்கின்றேன். 

தமிழில் எம்.எச். அமீர் ஹம்ஸா

No comments

Powered by Blogger.