Header Ads



'கருப்பு ஒக்டோபர்' வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 24 வருட பூர்த்தி - மீள்குடியேற்றம் உறுதி செய்யப்படுமா..?

(அபூ ஆயிஷா)

1990 ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடமாகாணத்தில் வாழ்ந்த சுமார் 75 ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள், 24 மணி நேர அவகாசத்தில், விடுதலைப் புலிகளால் சொத்துக்கள் எல்லாம் பறிக்கப்பட்ட நிலையில், உடுத்திய உடையுடன், சுமார் 300 ரூபா கைப்பணத்துடன் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டனர். இம்முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இம்மாதத்துடன் 24 வருடங்களாகின்றன.

24 வருடங்களாக இம்மக்கள் வாழ்வதற்கு சொந்த இடமின்றி, தொழில் செய்வதற்கு தகுந்த தொழிலின்றி அகதி முகாம்களிலும், மீள்குடியேற்றக் கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். யுத்தம் முடிவுற்ற பின்னரும் ஏன் இம்மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேறச் செல்லவில்லை. அங்குள்ள தொழில்களைச் செய்து தமது பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அங்குள்ள கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை மேம்படுத்துவதற்காக முயற்சிக்காமல் புத்தளம் மற்றும் நாட்டின் ஏனை பகுதியிலுள்ள அகதி முகாம்களிலும், மீள்குடியேற்றக் கிராமங்களிலும் வாழ்கிறார்கள்? இவற்றுக்கான காரணம் என்ன? இவற்றுக்குத் தீர்வே இல்லையா? என பலரும் பல கேள்விகளைத் தொடுத்த வண்ணமே உள்ளனர்.

மீள்குடியேற்றத்தைத் தடுப்பதில் முதன்மையானது காணிப் பிரச்சினை
1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டபோது சுமார் 75 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இருந்தார்கள். அப்போது சுமார் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் குடும்பங்கள்தான் இருந்தன. இவை தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதிகரித்தவர்களுக்கு குடியிருப்பதற்கு போதிய காணி வசதி இல்லை. இதுவரை அரசாங்கமும் அவற்றைத் தீர்த்து வைக்க முயற்சிக்கவுமில்லை.

உதாரணமாக மன்னார் மாவட்டத்தில், மன்னார் தீவுப்பகுதி மற்றும் மாந்தைப் பகுதியில் மீள்குடியேறுகின்றவர்களுக்கு குடியிருப்புக் காணி மற்றும் ஏனைய அத்தியாவசியத் தேவைகள் இன்னும் நிறைவேற்றிக் கொடுக்கப்படவில்லை. மன்னார் முசலி மற்றும் நானாட்டான் பகுதியில் குடியேறுகின்ற மக்களுக்கும் போதிய குடியிருப்புக் காணி வசதிகள் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை.

முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கும் குடியிருப்புக்கான காணி வழங்கப்படவில்லை. இவர்கள் மீள்குடியேற வழியின்றி, இன்னும் புத்தளம் மற்றும் நாட்டின் ஏனை பகுதியிலுள்ள அகதி முகாம்களிலும், மீள்குடியேற்றக் கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். மேலும், முஸ்லிம்கள் வாழ்ந்த முக்கிய சில நகரங்கள், வீடுகள் உரியவர்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் கடற்படையினரின் பராமரிப்பில் இருக்கின்றன. அவர்களிடம் கேட்டால் அவைகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இவைகள் குறித்து முஸ்லிம் அரசியல்வாதிகளோ ஏனைய முஸ்லிம் சிவில் அமைப்புக்களோ இதுவரை எதுவும் பேசவுமில்லை, செய்யவுமில்லை. 

பாராளுமன்றத்தில் உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து எத்தனை முறை பேசப்பட்டுள்ளன. ஆனால், முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் பேசியதாக இல்லை.
வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைத் தடுக்கும் காரணிகளில் இவை முக்கியமானதாகும். இவற்றை உரிய முறையில் தீர்த்துக் கொடுப்பது உரியவர்களின் கடமையாகும். இவற்றுக்கு நிரந்தரத் தீர்வின்றியே இம்மக்கள் அகதி முகாம்களிலும் தற்காலிக கொட்டில்களிலும் தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர். மீள்குடியேறியவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இவைகளும் மீள்குடியேற்றத்தைத் தடுக்கின்றன.

தொழில் பிரச்சினை

விவசாயம்

வடமாகாண முஸ்லிம்கள் மீன்பிடி, விவசாயம் என்பவற்றையே தமது ஜீவனோபாயத் தொழிலாகச் செய்கின்றனர். இவற்றில் பெரும்பாலானவர்கள் விவசாயத்தையும் ஏனையவர்கள் மீன்பிடியையுமே மேற்கொள்கின்றனர். அதுவும் வருடத்திற்கு ஒரு முறை மழையை நம்பி செய்யும் தொழிலாகவே விவசாயத் தொழிலைச் செய்கின்றனர். அத்தொழிலையும் திறம்படச் செய்வதற்கு போதிய வசதிகளின்றி அவதிப்படுகின்றனர். சுமார் 20 வருடங்களாக செயலற்று இருந்த நீர்ப்பாசனக் குளங்கள் இன்னும் புனரமைப்புச் செய்யாப்படாமல் இருக்கின்றன. அவ்வாறே நீர்பாசனக் குளங்களிலிருந்து வயல்களுக்கு நீரைக் கொண்டு செல்கின்ற வாய்க்கால்களும் இன்னும் திருத்தியமைக்கப்படவில்லை. அதனையும் அந்தந்த காலங்களில் விவசாயிகளே திருத்தியமைக்கின்றனர்.

இவ்வாறு பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்படுகின்ற  விவசாயம் இறுதி நேரங்களில் போதிய நீரின்றி வாடி அழிகின்றன. அவ்வாறே அதிக மழை பெய்ததும் நீர் வழிந்தோடுவதற்கு போதிய வாய்க்காலின்மையாலும் இவர்களின் விவசாயங்கள் அழிந்துள்ளன. கடும் மழையினாலும், கடும் வரட்சியினாலும் மீள்குடியேறிய விவசாயிகள் 2010 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர். இறுதியில் தொழிலைக் கைவிட்டு பாரிய நஷ்டத்தையும் அடைந்துள்ளனர்.

இவ்வாறு மீள்குடியேறியவர்கள் விவசாயத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கண்ட முகாம்களில் வாழ்கின்ற வடமாகாண முஸ்லிம்கள் மீள்குடியேறுவது குறித்து பலமுறை சிந்திக்கின்றனர்.  இவர்களுக்கு அரசாங்கமும், எம் அரசியல்வாதிகளும் உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பார்களா? அவர்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பார்களா?

மீன்பிடி

மீள்குடியேறிய பெரும்பாலான மீனவர்கள் தங்களது தொழில்களை மாற்றிக் கொள்ளலாமா என நினைக்கின்றனர். அதாவது, இந்திய மீனவர்களின் வருகையால் எம் மீனவர்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். இதனை அரசாங்கமும் கண்டு கொள்ளாமல் இருப்பதாக அம்மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறே இன்னும் கடற்படையினரின் பாஸ் நடைமுறையில் உள்ளது. அதாவது, கடற்படையினரிடம் பாஸ் எடுக்கின்றபோது தொழிலாளிகள் மூவரின் பெயர்களை ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்பட்டவர்களேதான் தொழிலுக்குச் செல்ல வேண்டும். அவர்களில் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ சுகயீனம் ஏற்பட்டால் அன்றைய நாள் குறித்த நபர் இன்னொருவரை இணைத்துக் கொண்டு தொழிலுக்குச் செல்ல முடியாது. எனவே, அவரின் அன்றைய தொழில் பாதிப்படைகின்றது. இப்படி எத்தனையோ தொழிலாளிகள் தொழில்களை இழக்கின்றார்கள். கடன்பட்டு ஆரம்பித்த தொழிலை கடன் சுமைகளையும் இறக்கிக் கொள்ள முடியாமல், குடும்பச் செலவு, பிள்ளைகளின் கல்விச் செலவு என பல சுமைகள் அவர்களின் முதுகுகளில் சுமத்தப்பட்டுள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர்.

அத்தோடு, பெரும்பான்மை சமூகத்தவர்களின் வருகையால் இப்பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஏனைய கடற்றொழில் அதிகாரிகள் முஸ்லிம்களைப் புறக்கணித்துவிட்டு அவர்களைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற நடைமுறை வடக்கில் பெரும்பாலான இடங்களில் காணப்படுகிறது. இவைகளை யாரிம் முறையிடுவது எனத் தெரியாமல் நாளாந்தம் மன வேதனையோடு வாழ்கின்றனர். இவ்வாறு பாகுபாடாக நடந்து கொள்கின்றமையால் முஸ்லிம் மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். 

இவர்களின் பிரச்சினைக்கு உன்மையான நிரந்தரத் தீர்வு கிடைக்குமா? அவர்களும் சுதந்திரமாக தொழில் செய்ய வாய்ப்பெடுத்திக் கொடுக்கப்படுமா? இவைகளுக்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்? என்ற கேள்விகளோடு அலைகடல் மேலே அலையாய் அலைவது போல் இவர்களது வாழ்வும் அலைகிறது. இவ்வாறான சூழ்நிலையும் ஏனைய முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைத் தடுக்கின்றது. முஸ்லிம்கள் மீள்குடியேறக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கிறர்களா என்றும் எண்ணத் தோன்றுகிறது.

கல்வி

வடக்கில் பெரும்பாலான முஸ்லிம் பாடசாலைகள் இன்னும் கட்டிட வசதிகளோ, துறைசார் பாட ஆசிரியர்களோ இன்றி காணப்படுகிறது. இவ்விக்கட்டான சூழ்நிலையிலேயே மீள்குடியேறியவர்களின் பிள்ளைகள் கல்வியை கற்று வருகின்றனர். வடமாகாணத்தைச் சேர்ந்த தரமான துறைசார் பாட ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் புத்தளம் மற்றும் நாட்டின் ஏனைய பாகங்களில் தொழில் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களை வடமாகாண சபையின் கீழ் இயங்குகின்ற மாகாணப் பாடசாலைகளுக்கு மாற்றம் செய்து வடமாகாணத்தின் கீழ் கொண்டு வருவதற்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.

அவ்வாறு மாற்றத்தை மேற்கொண்டாலும், மீள்குடியேற வருகின்ற ஆசிரியர்கள் குடியிருப்பதற்கு காணி, வீடு இன்றி தவிக்கின்ற நிலையே காணப்படுகின்றது. இவைகளுக்கு யார் பொறுப்பு?

சுமார் 20, 25 வருடங்களின் பின்னர் புத்தளத்திலோ அல்லது நாட்டின் ஏனைய பகுதியிலோ அரசாங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஒரு சில உதவிகளைக் கொண்டும், தங்களின் சம்பளத்தில் சிலவற்றையும் சேர்த்து கட்டிய வீட்டை விட்டு விட்டுட்டு, சொந்த இடத்தில் மீண்டும் காணி இன்றி, வீடின்றி அகதி வாழ்வொன்றை வாழ எந்த கற்ற மனிதன்தான் விரும்புவான். சொந்த இடத்தில் வாழ்கிறோம் என்ற பெருமைக்காக இவ்வாறான கஷ்டத்தை எதிர்நோக்கத்தான் வேண்டுமா? அவ்வாறுதான் கஷ்டத்தோடு சமூகக் கடமையைச் செய்தாலும் இந்த சமூகம் அந்த ஆசிரியர்களுக்கு என்ன உதவி உபகாரம் செய்யப் போகிறது?.

துறைசார் பாட ஆசிரியர்களின் பற்றாக்குறையுடனும், பௌதீக வளப் பற்றாக்குறையுடனுமே வடமாகாண முஸ்லிம் பாடசாலைகள் இயங்குகின்றன. இவைகளை கருத்தில் கொண்டும் வெளியேற்றப்பட்ட பெரும்பாலான முஸ்லிம்கள் மீள்குடியேறாமல், தொடர்ந்தும் அகதி முகாம்களிலும், மீள்குடியேற்றக் கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அங்கு தங்களது பிள்ளைகளின் கல்வியையாவது வழர்த்துக் கொள்ளலாம் என்ற நோக்கில் வாழ்கின்றனர். இப்பாடசாலைகளின் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு கிடைக்குமா? இப்பாடசாலைகளிலும் துறைசார் ஆசிரியர்கள் உட்பட போதிய வளங்கள் பகிரப்படுமா? இந்த அப்பாவி முஸ்லிம்களின் பிள்ளைகளும் கல்வியில் சிறந்து விளங்குவார்களா? இக்கேள்விகளுக்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்?

சுகாதாரம்

கடந்த 20 வருடங்களுக்கு மேல் காடுகளாகக்கப்பட்ட வடமாகாணத்தில் பெரும்பாலான பகுதிகள் தற்போது காடழிக்கப்பட்டு மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. அப்பிரதேசங்களில் பல வகையான நச்சுப் பாம்புகள் மற்றும் ஏனைய ஊர்வனவும் வாழ்ந்துள்ளன. இந்நிலையிலேயே வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் அமைகின்றது. எனவே, இவ்வாறான நச்சுப் ஊர்வனயினால் தாக்கப்பட்டால் அதற்கான உரிய வைத்தியம் பெறுவதற்கு போதிய வைத்தியசாலை வசதிகள் இல்லை. 

மேலும், பெரும்பாலான வடமாகாண மீள்குடியேற்றப் பிரதேசங்களில் போதிய வைத்தியசாலைகளே இல்லை. அவ்வைத்தியசாலைகளில்  வைத்தியர்களோ, தாதியர்களோ இல்லை. அவ்வாறு வைத்தியர்கள், தாதியர்கள் இருந்தாலும் அவர்களும் மாற்று மொழி பேசுபவர்களாகவே இருக்கிறார்கள். எனவே, இது ஒரு பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.

அத்தோடு தாய் சேய் மருத்துவம் இன்னும் அபிவிருத்தி செய்யப்படவில்லை. ஒரு தாய் குழந்தைப் பேறுக்காக குறிப்பிட்ட பிரதேசங்களிலுள்ள அரசாங்க கிராமிய மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டால், அத்தாயை பிரதான வைத்தியசாலைக்கு அழைத்துச் சொல்வதற்கான போக்குவரத்து வசதிகள் இல்லை.
இக்காரணிகளும் பெரும்பாலானவர்களின் மீள்குடியேற்றத்தைத் தடுக்கின்ற முக்கிய நிகழ்வாகக் காணப்படுகின்றது.

நிர்வாகம்

பெரும்பாலான மீள்குடியேற்றப் பிரதேசங்களிலுள்ள அரச நிர்வாகம் இவர்களின் மீள்குடியேற்றத்தில் மந்தமாக செயற்படுவதாக தெரிவிக்கின்றனர். உதாரணமாக – மீள்குடியேறச் செல்பவர்களுக்கு முதலில் ஒரு தற்காலிக குடியிருப்பு வசதி, 25 ஆயிரம் பெறுமதியான வீட்டு உபகரணங்கள், குடிநீருக்கான வசதி என்பவற்றை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இது குறித்த பிரதேச செயலகத்தின் கடமையாகும்.

ஆனால், மீள்குடியேற்றப் பிரதேசங்களிலுள்ள பிரதேச செயலாகங்கள் இச்சேவையை வழங்குவதில் பின்னிற்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வுதவியை அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்வதாக இருந்தாலும் அதற்கும் ஜனாதிபதி செயலகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்கின்றர்.
எனவே, இவ்வாறான நிர்வாக செயற்பாடும் இவர்களின் மீள்குடியேற்றத்தைக் குறைக்கின்றன.

முடிவுரை

சுமார் 20 வருடங்களாக யுத்தத்தின் காரணமாக சொந்த இடத்தில் மீள்குடியேற முடியாமல் தவித்த வடமாகாண முஸ்லிம்கள், தற்போது யுத்தம் நிறைவு பெற்றுள்ள இந்நேரத்திலும் தமது சொந்த இடத்தில் மீள்குடியேறி சுதந்திரமாக வாழ்வதற்கு வழியின்றித் தவிக்கின்றனர்.

அவர்களின் மீள்குடியேற்றத்திற்கு காணி, தொழில், சுகாதாரம், கல்வி, நிர்வாகம் என பல்வேறு பிரச்சினைகள் தடையாக இருக்கின்றன. இவைகளை அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள், முஸ்லிம் சமூக நிறுவனங்கள் தீர்த்துத் தருமா? அல்லது அவர்களை தொடர்ந்தும் அகதி முகாம்களிலும், மீள்குடியேற்றக் கிராமங்களிலுமா வாழ வைக்கப் போகிறார்கள் என்ற ஏக்கத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளுக்கு அவர்களின் அரசியல் பிரதிநிதிகளின் பங்கு என்ன? என அவர்களே கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, 25 ஆவது வருடமும் இவர்கள் அழுவதே விதியென்றால், எம் தேசத்தினதும், எம் சமூகத்தினதும், எம் அரசியல்வாதிகளினதும் பொறுப்புத்தான் என்ன? என்று இம்மக்கள் அங்கலாய்க்கின்றனர். 

இன்றே இணைவோம், அவர்களின் கண்ணீரைத் துடைப்போம், அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம். அனைவரையும் அழைக்கின்றனர்.

No comments

Powered by Blogger.