Header Ads



கோத்தபாய ராஜபக்ஷவை பிரமராக்கும் திட்டத்தில் ஞானசாரர்

TW

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியைப் பெற்றுக்கொடுப்பதே ஞானசார தேரரின் இலக்கு என்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலையில் ஜனாதிபதி மஹி்ந்த ராஜபக்ஷ தனது மூத்த மகன் நாமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது குறித்து தீவிரமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.

அவருக்கு போட்டியாக வரக்கூடிய அமைச்சர் பசில் ராஜபகஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு அரசியல் ரீதியான பின்னடைவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் ஜனாதிபதி மறைமுகமாக ஊக்குவிக்கின்றார்.

இந்நிலையில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை விட பிரதமர் பதவியைப் பெற்றுக் கொள்வதில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றார்.

ஜனாதிபதியை வற்புறுத்தி அடுத்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவது அவரது நோக்கமாக உள்ளது. இதற்கான பிரச்சார நடவடிக்கைகளையும் அவர் தொடங்கிவிட்டார்.

எனினும் கோத்தபாயவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக்குவதன் மூலம் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து ஒதுக்கி வைக்க ஜனாதிபதி ஆர்வம் கொண்டுள்ளார்.

இதனை நன்றாக ஊகித்து வைத்துள்ள கோத்தபாய ராஜபக்ஷ, தற்போது பொது பல சேனா அமைப்பின் மூலம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து, பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ள காய் நகர்த்தி வருகின்றார்.

இந்த நோக்கத்துக்காகவே அவர் பொதுபல சேனா அமைப்பை உருவாக்கியிருந்தார். சிங்களவர்களின் பாதுகாவலனாக தன்னை காட்டிக்கொண்டு, சிங்கள வாக்குகளை பெருமளவில் அறுவடை செய்வது அவரது நோக்கம்.

அத்துடன் பிரதமர் பதவிக்கு நாமலை விட கோத்தபாய தான் பொருத்தமானவர் என்ற பிரச்சாரத்தை நாடு முழுவதும் முன்னெடுக்கும் பொறுப்பு பொதுபல சேனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்காக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு கோடிக்கணக்கான ரூபா பெறுமதியில் ஒரு கார் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுபல சேனா அமைப்பு தனக்கு கொடுக்கப்பட்ட பணியில் தற்போதைக்கு ஓரளவுக்கு வெற்றி கண்டுள்ளது. மேலும் செப்டெம்பர் மாத இறுதியில் கொழும்பில் பாரிய பிக்குமார் ஒன்றுகூடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதன்போது, கோத்தபாயவை பிரதமர் பதவியில் அமர்த்துமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்படவுள்ளது.

இதற்கிடையே ஆளும் கட்சியின் முக்கிய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிரிசேன, அமைச்சர் விமல் வீரவங்ச, அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் ஆதரவையும் கோத்தபாய பெற்றுக் கொண்டுள்ளார். இவர்களின் உதவியுடன் தற்போது நாமலுக்கு எதிரான அரசியல் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

No comments

Powered by Blogger.