Header Ads



பாகிஸ்தானில் பதற்றம் - அரசிற்கு இன்று இறுதி நாள் என்கிறார் இம்ரான் கான்

பார்லிமென்ட் தேர்தலில் முறைகேடுகள் செய்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வெற்றி பெற்றதாகவும், அவர் மீது கொலை வழக்கு இருப்பதால் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக்கூறியும் அவருக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மற்றும் முஸ்லிம் மத தலைவர் தாஹிருல் காத்ரி ஆகியோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் போலீசார் இடையே நடந்த மோதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 300 பேர் காயமுற்றனர். இதனால் பாகிஸ்தானில் பதட்டம நிலவுகிறது . 

கடந்த சில நாட்களாக இஸ்லாமாபாத்தில் பார்லிமென்ட் கட்டிடம் அருகே போராட்டம் நடத்திவந்த இரு தலைவர்களும் இன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் வீட்டை முற்றுகையிட போவதாக தெரிவித்தனர். அதன் படி தங்கள் கட்சி தொண்டர்கள் 25,000 பேருடன் ஷெரிப் வீட்டை நோக்கி அவர்கள் சென்ற போது போலீசார் கண்ணீர் புகை குண்டுவீச்சு மற்றும் ரப்பர் குண்டுகளையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வீசினர். இதில் 300 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொண்டர் ஒருவர் உட்பட ஏழு பேர் பலியாகியுள்ளதாக தெரிகிறது. ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். அதே சமயம் போராட்டக்காரர்கள் 100 பேரை போலீசார் கைது செய்துவிட்டனர்.

லாகூர், கராச்சியில் பரவுகிறது போராட்டம்:பாகிஸ்தானில் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீ்ப்பிற்கு எதிராக,தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் மற்றும் பாக்., அவாமி தெஹ்ரிக் தலைவர் காத்ரியும் போராட்டம் நடத்தி அவரை பதவியிலிருந்து விலக வலியுறுத்துகின்றனர்.இந்நிலையில் போராட்டம் லாகூர் மற்றும் கராச்சியில் பரவியுள்ளது. லாகூரில் பல கடைகள் வன்முறைக்கு இரையாகியுள்ளன. ஜியோ டிவி தாக்கப்பட்டுள்ளது.

வன்முறைக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பே காரணம் என காத்ரி கூறியுள்ளார். ஷெரீப் சகோதரர்கள் பதவி விலக மறுப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி தொண்டர்கள் யாரும் பின் வாங்க மாட்டார்கள் என இம்ரான் கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அரசிற்கு இன்று இறுதி நாள் என தெஹ்ரீக் இ இன்சாப்,கட்சி தலைவர் இம்ரான் தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்கள் மத்திய பேசிய இம்ரான்கான் இவ்வாறு கூறினார்.

No comments

Powered by Blogger.