Header Ads



லிபியாவும் இஸ்லாமிய போராளிகளின் கரங்களில்...!

லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பென்காசி நகரை கைப்பற்றி விட்டதாக இஸ்லாமிய போராளிகள் அறிவித்துள்ளனர்.

அந்நாட்டின் அதிபராக இருந்த கடாபி கொல்லப்பட்டதையடுத்து அங்கு போராளிகளின் கை மேலோங்கி வருகிறது. நாளுக்கு நாள் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதால் தலைநகர் திரிபோலியில் செயல்பட்ட தங்கள் தூதரகத்தை கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்கா இழுத்து மூடியது. ஐ.நா அமைப்பு, பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளும் தங்களது தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றுள்ளன.

லிபியாவின் பெரும் பகுதியை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய போராளிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

நாளொன்றுக்கு சுமார் 14 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தித் திறன் கொண்ட லிபியாவில் போராளிகளால் நிகழ்த்தப்படும் வன்முறையும், அவை சார்ந்த பலிகளும் அங்குள்ள மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளன.

இது வரை வன்முறைக்கு நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ள நிலையில், உயிர் பயத்தில் நாட்டை விட்டு குடும்பம், குடும்பமாக வெளியேறும் மக்கள் அண்டை நாடான துனிசியாவில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். தினந்தோறும் ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்கள் துனிசியாவுக்குள் வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
  
இந்நிலையில்,லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பென்காசி நகரை கைப்பற்றி விட்டதாகவும், அந்நகரம் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகவும் அமெரிக்காவால் தீவிரவாத இயக்கம் என்று அறிவித்து தடை செய்யப்பட்ட அல் கொய்தாவுடன் தொடர்புடைய அன்சர் அல் ஷரியா என்ற இஸ்லாமிய போராளிகள் இயக்கம் இன்று அறிவித்துள்ளது.

பென்காசியின் ராணுவ தலைமையகம் உள்பட அனைத்தும் தங்கள் வசமாகி விட்டதாக அன்சர் அல் ஷரியா இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார். பென்காசி ஷுரா குழு உறுப்பினர்களில் ஒருவரும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். 

No comments

Powered by Blogger.