Header Ads



மஹிந்த ராஜபக்ஸவை பழிதீர்க்கும் பிரித்தானியா - உபுல் ஜோசப்

கொமன்வெல்த் அமைப்பின் தலைவரால், கொமன்வெல்த் நாள் நிகழ்விலோ, கொமன்வெல்த் போட்டிகளிலோ பங்கேற்க முடியாது போனது இதுவே முதல்முறை என்று - சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.  இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் கார்வண்ணன். 

ஸ்கொட்லாந்தின், கிளாஸ்கோவில் நடைபெறும் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்காததற்கான காரணங்களை விபரித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அனுப்பியுள்ள கடிதம், இதுவரை வெளிவராத உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. 

சிறிலங்கா அதிபருக்கு எதிரான, புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை ஒடுக்க, பிரித்தானிய அரசாங்கம் தவிறிவிட்டதாக, அதில் காரணம் கூறப்பட்டிருந்தது. 

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தனது கடிதத்தில், பிரித்தானியாவில், எலிசபெத் மகாராணி முடிசூடி 60 ஆண்டுகளை நிறைவடைந்ததை முன்னிட்டு நடத்தப்பட்ட வைர விழா நிகழ்வில், கலந்து கொண்ட சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் வாகன அணி மீது ஆர்ப்பாட்டக்காரர்கள், வெற்றுப் போத்தல்களையும், கொள்கலன்களையும் வீசியதாக குறிப்பிட்டிருந்தார். 

இதில் பல செய்திகள் இருந்தன. 

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நாடு திரும்பியதும், அவருக்குப் பாதுகாப்பு வழங்கிய பிரித்தானியக் காவல்துறைக்கு சிறிலங்கா அரசாங்கம் அப்போது நன்றி தெரிவித்திருந்தது.  சிறிலங்கா அதிபரின் பயணத்துக்கு பிரித்தானியக் காவல்துறை பாதுகாப்பு அளிப்பதைக் காட்டும் ஒளிப்படம் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது. 

அதன் மூலம், புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்புகளையும் மீறி, சிறிலங்கா அதிபருக்கு பாதுகாப்பையும் அங்கீகாரத்தையும் பிரித்தானிய அரசாங்கம் வழங்கியது என்று உள்ளூர் மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.  எவ்வாறாயினும், சில ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்கா அதிபரின் வாகன அணி வெற்றுப் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களால் தாக்கப்பட்டதாக, அதே அரசாங்கத்தினால் கூறப்பட்டுள்ளது. 

கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் சிறிலங்கா அதிபர் பங்கேற்காதமைக்கு இதுவே காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.  மகிந்த ராஜபக்ச கொமன்வெல்த் தலைவராக இருக்கிறார்.  அதன் தலைவரான பின்னர், நடக்கும் முதலாவது கொமன்வெல்த் போட்டி இது.  கொமன்வெல்த் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர், கொமன்வெல்த் நாள் பிரித்தானியாவில் கொண்டாடப்பட்டது. 

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, கொமன்வெல்த் தலைவரான பின்னர், எலிசபெத் மகாராணியை இன்னமும் சந்திக்கவில்லை.  கொழும்பில் நடந்த கொமன்வெல்த் தலைவர்களின் கூட்டத்தில் மகாராணி கலந்து கொள்ளவில்லை.  அவர் தனது பிரதிநிதியாக இளவரசர் சாள்சை அனுப்பியிருந்தார்.

கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளின் போது, எலிசபெத் மகாராணியை சந்திக்க மகிந்த ராஜபக்ச எதிர்பார்த்திருந்தார்.  ஆனால், புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெறலாம் என்பதால், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு 100 வீதம் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும், நிகழ்வைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் பிரித்தானியா கேட்டுக் கொண்டது. 

கொமன்வெல்த் நாள் நிகழ்வில் பங்கேற்காத, கொமன்வெல்த் அமைப்பின் முதலாவது தலைவராக மகிந்த ராஜபக்சவே இருக்கிறார்.  அந்தச் சந்தர்ப்பத்தில், பிரித்தானியாவை மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டவில்லை.  தனக்கு மற்றொரு வெளிநாட்டு பயணம் இருப்பதால், கொமன்வெல்த் நாள் நிகழ்வில் பங்கேற்கமாட்டேன் என்றே அவர் அறிவித்தார். 

ஆனால் இந்த முறை, கொமன்வெல்த் போட்டியில் சிறிலங்கா அதிபர் பங்கேற்காதமைக்கு, புலம்பெயர் தமிழர்களை ஒடுக்க பிரித்தானியக் காவல்துறை தவறிவிட்டதே காரணம் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. 

பாதுகாப்புக் காரணங்களுக்காக, இந்தப் பயணத்தைத் தவிர்க்கும்படி, பிரித்தானிய அரசாங்கம் மகிந்த ராஜபக்சவுக்கு அதிகாரபூர்வமற்ற வகையில் ஆலோசனை கூறியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.  அதனால் அவர், முன்னர் வெற்றுப் போத்தல்கள், கொள்கல்கள் வீசப்பட்டதாக பிரித்தானிய அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டுமாறு, தனது வெளிவிவகார அமைச்சரைப் பணித்திருக்கலாம். 

எவ்வாறாயினும், கொமன்வெல்த் மாநாட்டைக் கொழும்பில் நடத்துவதற்காக, நாட்டு மக்களின் பில்லியன் கணக்கான ரூபா பணத்தை சிறிலங்கா அரசாங்கம் செலவிட்டிருந்தது.  அது நாட்டு மக்கள் கடுமையாக உழைத்துச் சம்பாதித்த பணம்.  இறுதியில், கொமன்வெல்த் அமைப்பின் தலைவரால், கொமன்வெல்த் நாள் நிகழ்விலோ, கொமன்வெல்த் போட்டிகளிலோ பங்கேற்க முடியாது போனது. 

கொமன்வெல்த் தலைமைப் பதவியை வைத்துக் கொண்டுள்ள சிறிலங்கா இந்தச் சூழலில் அதிகம் சோர்வடைந்து விட்டது.  கொமன்வெல்த் மாநாட்டை இங்கு நடத்தும், செலவுமிக்க முடிவை எடுப்பதற்கு முன்னதாக, சிறிலங்கா அரசாங்கம் இவற்றையெல்லாம் மதிப்பீடு செய்திருக்கும். 

2009 மே 18ம் நாள், போர் முடிவுக்கு வந்த நாளன்று சிறிலங்காவை ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தை முற்றுகையிட்டன.  அப்போதைய பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட்டை தமிழ்ப் புலியாகச் சித்திரித்து, பாரிய எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. 

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரித்தானியத் தூதரகத்தின் ஜன்னல்களின் மீது கூழ் முட்டைகளையும். தக்காளிகளையும் வீசியெறிந்தனர்.  அங்கு நடப்பதை ஒன்றும் அறியாதது போன்று சிறிலங்கா அரசாங்கம் பாசாங்கு செய்தது. இந்தப் பழியைத் தீர்த்துக் கொள்வதற்கு பிரித்தானியாவுக்கு கிடைத்துள்ள வாய்ப்பே இது.

No comments

Powered by Blogger.