Header Ads



இலங்கை கிரிக்கெட் குறித்த முக்கிய 3 செய்திகள்..!

இலங்கை இருபதுக்கு-20 கிரிக்கெட் அணியின் தலைவராக லசித் மாலிங்க ஒரு வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் இருபதுக்கு-20, ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் அணியின் உப தலைவராக லஹிரு திரிமான்ன பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஒரு நாள் மற்றும் டெஸட் அணிகளின் தலைவர் பதவியை அஞ்சலோ மெத்தியூஸ் தொடர்ந்தும் வகிப்பா​ர் என இலங்கை கிரிக்கட் தெரிவிக்கின்றது.

......................................

வருடாந்த கிரிக்கெட் ஒப்பந்தத்திற்கு தேசிய குழாம் வீரர்கள் இணக்கம் தெரிவித்ததாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கையின் மூலம் இன்று (23) அறிவித்தது.

ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நடவடிக்கை எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வீரர்களின் பதிலை அறிந்துகொள்வதற்காக அஞ்சலோ மெத்யூஸூடன் தொடர்பினை ஏற்படுத்த நாம் முயற்சித்த போதும் அது கைகூடவில்லை.

வீரர்களின் ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மூவர் கொண்ட குழுவை நியமித்ததாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பொருளாளர் நுஸ்கி மொஹமட், தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி எஸ்லி டி சில்வா ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அந்த அறிக்கையின் பிரகாரம் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவரான அஞ்சலோ மெத்யூஸூடன் குறித்த குழு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் ஆசிய கிரிக்கெட் சபை நடத்தும் போட்டிகளின் போது இலங்கைக்கு கிடைக்கும் நிதியில் 20 வீதத்தை வீரர்களின் பங்களிப்புக்கு வழங்க வேண்டும் என பேச்சுவார்த்தையின் போது மெத்யூஸ் கோரியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

எனினும், மூவர் கொண்ட குழு இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அந்த பெறுமானத்தை 10 வீதமாகக் குறைக்கவும் இந்த மறுசீரமைப்பை எதிர்வரும் 5 வருடங்களுக்கு செல்லுபடியாக்குவதுடன் எக்காரணம் கொண்டும் அதில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த யோசனைக்கு வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் வீரர்கள் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவார்கள் என்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யோசனை முடிவடைந்த உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருடன் சம்பந்தப்படாது எனவும் அதற்காக 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வீரர்களுக்கு பரிசளிக்கப்படும் என்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

.............................................................................

அயர்லாந்து சுற்றுப்பயணத்தின் போதான போட்டித் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியில் குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் T.M.டில்ஷான் ஆகியோர் உள்ளடக்கப்படவில்லை என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இந்தப் போட்டித்தொடர் எதிர்வரும் மே 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

No comments

Powered by Blogger.