Header Ads



'எல்லா முஸ்லிம்களும் கெட்டவர்கள்' - ஞானசார தேரர் தெரிவிப்பு

http://www.jaffnamuslim.com/2013/08/blog-post_7170.html - (பகுதி 1)

'ஹலால்' உணவு முறைமை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக மொறகொடவால் எடுக்கப்பட்ட முயற்சிக்கு உறுதுணையாக இருந்த சிறிலங்கா வர்த்தக சம்மேளனத்தின் பங்குகளை 'கீல்ஸ்' நிறுவனம் கொண்டுள்ளது. இங்கு பரிமாறப்படும் உணவுக் கையேட்டில் விடுதியானது 'நிர்வான' எனப் பெயரைப் பயன்படுத்தியிருந்தது. இந்த விடுதியானது மத உணர்வுகளைக் காயப்படுத்துவதாக குற்றம் சாட்டிய பொது பல சேன புத்த பகவான் பயன்படுத்தி நிர்வான என்ற பதத்தை உணவுக்குப் பயன்படுத்தியதாகவும் கூறியதுடன் மட்டுமல்லாது, செம்மஞ்சள் நிற உடையணிந்த இராணுவப் பிக்குகள் பொது பல சேனவின் பொதுச் செயலர் கலாகொட அத்தே ஞானசார தலைமையில் விடுதியை முற்றுகையிட்டதுடன், விடுதி முகாமையாளர் காவற்துறையால் விசாரிக்கப்பட்டார். 

"இந்த விடுதியில் வழங்கப்படும் மதுபானம், நடனம் மற்றும் ஏனையவை வரவேற்கத்தக்கது. ஆனால் 'நிர்வான' என்ற பெயரில் உணவுப் பட்டியலை அவர்கள் ஏன் பயன்படுத்துகிறார்கள்? இதனை புத்தர் மிகப் பொருத்தமாகவே பயன்படுத்தியிருந்தார். நாங்கள் எந்தவொரு மதத்தையும் மதிக்கிறோம். இந்தப் பதத்தை விடுதியொன்றில் பயன்படுத்த முடியாது" எனவும் விதனேஜ் தெரிவித்திருந்தார். 

சிறிலங்காவின் உத்தியோகபூர்வ மதமாக பௌத்தம் இருக்க வேண்டும் என பொது பல விரும்புகிறது. 1978ல் நிறைவேற்றப்பட்டு தற்போதும் நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பின் பிரகாரம், சிறிலங்காவானது தனது குடிமக்கள் தமக்கு விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதற்கான அனுமதியை வழங்குகிறது. ஆனால் இந்த அரசியல் யாப்பின் பெரும்பாலான இடங்களில் பௌத்தம் என்கின்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இந்துமதம், இஸ்லாம் மற்றும் கிறீஸ்தவம் தொடர்பாக இங்கு குறிப்பிடப்படவில்லை. பௌத்தமதமானது 1815ல் பிரித்தானிய கொலனித்துவ ஆட்சி சிறிலங்காவில் தொடரப்படுவதற்கு முன்னர் தோன்றிய மதமாகக் காணப்படுவதாக பொதுபல சேன கூறுகிறது. 

"பிரித்தானிய கொலனித்துவ காலத்தின் முன்னர் சிறிலங்காவில் நாம் எவ்வாறான வாய்ப்புக்களைக் கொண்டிருந்தோமோ அவை எல்லாம் எமக்கு மீளக்கிடைக்க வேண்டும் என நாம் நினைக்கிறோம்" என விதனேஸ் தெரிவித்துள்ளார். 

பல நூற்றாண்டுகளாக சிறிலங்காவில் பெரும்பாலான மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றியிருந்தார்கள். இன்று சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் 15 சதவீதத்தினர் தமிழ் மக்களாக உள்ளனர். கிறிஸ்துவுக்கு முன் 4ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்துப் புராணமான இராமாயணத்தில் சிறிலங்காவில் எப்போது இந்து மதம் தோன்றியது என்பது தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1624ல் போர்த்துக்கேயரால் முற்றுகையிடப்பட்ட யாழ்ப்பாண இராச்சியத்தின் அரச மதமாக இந்துமதம் காணப்பட்டது. 

ஆனால் இந்தக் கருத்தை பொதுபல சேன வரலாற்றுத் தகவல்களில் அறிந்தது போல் தெரியவில்லை. சிறிலங்காவில் இந்துமதமானது இரண்டாம் மதமாகவே காணப்படுவதாக விதனேஜ் கூறுகிறார். "சிறிலங்காவுக்கு பிரித்தானியர் வருவதற்கு முன்னர், பௌத்தமானது அரச மதமாகக் காணப்பட்டது. இதனால் தற்போது மீண்டும் பௌத்தம் உத்தியோகபூர்வமாக அரச மதமாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும்" என விதனேஜ் வலியுறுத்துகிறார். 

நாங்கள் விதனேஜ் உடன் உரையாடிக் கொண்டிருந்த போது உயரமான 40வயது மதிக்கத்தக்க ஒருவரும் கலந்து கொண்டார். பொது பல சேன அமைப்பின் பொதுச் செயலரான கலகொட அத்தே ஞானசாரா என விதனேஜ் அவரை அறிமுகப்படுத்தினார். இவர் இந்த அமைப்பின் நிறுவுனர்களில் ஒருவராவார். சிறிலங்காவில் பௌத்த மதத்திற்கு எவ்வாறான அச்சுறுத்தல்கள் உள்ளன என்பது தொடர்பாக அவர்கள் இருவரும் எமக்கு விளக்கினர். 

சிறிலங்காவி;ன மொத்த சனத்தொகையான 20 மில்லியன் மக்களில் 75 சதவீதமான சிங்கள பௌத்தர்கள் வாழும் ஒரு நாட்டில் எவ்வாறு பௌத்தமதம் அச்சுறுத்தலுக்கு உட்படுவதாக கருதுவதாக நான் அவர்களிடம் வினவினேன். அத்துடன் சிறிலங்காவில் வாழும் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு பொது பல சேன மீதே குற்றம் சாட்டப்படுவதற்கான காரணம் என்ன எனவும் நான் வினவினேன். முஸ்லீம்களுக்குச் சொந்தமான புடைவை வர்த்தக நிலையத் தொடரான Fashion Bug மீதான தாக்குதலுக்கு தாம் பொறுப்பாளி அல்ல என அவர்கள் கூறினார்கள். 

முஸ்லீம்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பற்றிக் கூறியபோது ஞானசாரா மிகவும் கோபங் கொண்டார். "இவர்கள் தொடர்பாக எம்முடன் கதைக்க வேண்டாம். எந்தவொரு முஸ்லீம்களும் கூடாதவர்கள் தான். அவர்கள் இங்கு நிலவும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்" என ஞானசாரா கூறினார். "எல்லா முஸ்லீம்களுமா?" என நான் அவரிடம் கேட்டேன். "ஆம். எல்லா முஸ்லீம்களும் தான். முஸ்லீம்களின் தீவிரவாதத்தை ஒழிக்க நான் விரும்புகிறேன். அவர்கள் எமது கலாசாரத்தை அழிக்கக் கூடாது. பௌத்தர்கள் மிகவும் அமைதியானவர்கள்" என ஞானசாரா கூறினார். 

தம்மைச் சூழ பல்வேறு கலாசாரப் பிரச்சினைகள் நிலவுகின்ற போதிலும் சிறிலங்காவில் வாழும் பௌத்தர்கள் மிகவும் சகிப்புத் தன்மையுடன் வாழ்வதாக விதனேஜ் தெரிவித்தார். "முஸ்லீம்கள் மிகவும் அமைதியாக வாழ்கிறார்கள். முஸ்லீம்களுக்கு இங்கு எல்லா வசதிகளும் உள்ளன. கொழும்பு மேயர் ஒரு முஸ்லீம் ஆவார்" என விதனேஜ் தெரிவித்தார். "உங்களது நாட்டில் முஸ்லீம் ஒருவர் மேயராக இருப்பதற்கு நீங்கள் அனுமதிப்பீர்களா?" என அவர் என்னிடம் வினவினார். 

"ஆம். அவுஸ்திரேலியாவில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட முஸ்லீம்கள் சிலர் உள்ளனர்" என நான் பதிலளித்தேன். "இந்த மாகாணத்தின் ஆளுநர் ஒரு முஸ்லீம் ஆவார். இதனால் முஸ்லீம்கள் இங்கு அமைதியாக வாழ முடியாது என நீங்கள் கூறமுடியாது" என விதனேஸ் என்னிடம் கூறினார். 

பொதுபல சேனவின் பொதுச் செயலர் ஞானசாரா, ஒரு சில நிமிடங்களின் முன்னர் சிறிலங்காவில் வாழும் முஸ்லீம்கள் அனைவரும் கூடாதவர்கள் எனக் கூறியதாலேயே நான் இவ்வாறு கூறவேண்டியேற்பட்டதாக விதனேஜ்ஜிடம் தெரிவித்தேன். இந்துக்கள், கத்தோலிக்கர்கள், வெளிநாட்டவர்கள் தொடர்பாகவும் இவர்களுடன் பொதுபல சேன ஏதாவது பிரச்சினையைக் கொண்டுள்ளதா எனவும் நான் கேட்டேன். 

"நாங்கள் தீவிரவாதக் குழுக்கள் மற்றும் அடிப்படைவாதிகள் போன்றவர்களுக்கு எதிரானவர்கள் மட்டுமே" என அவர் பதிலளித்தார். "பௌத்த அடிப்படைவாதிகள் இல்லையா?" என நான் கேட்டேன். "எங்கே?" என ஞானசாரா என்னிடம் கேட்டார். "இங்கேயும் இருக்கலாம்" என நான் பதிலளித்தேன். பொது அமைப்புக்களைச் சேர்ந்த பிரபலமான பல்வேறு சிறிலங்கர்கள் மத சார் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு எடுத்துவரும் நடுநிலையான பல்வேறு நகர்வுகள் தொடர்பாக நான் எடுத்துக் கூறினேன். 

குறிப்பாக இராஜதந்திரியும், கல்விமானுமான டயான் ஜெயதிலக மற்றும் அரசியல்வாதியான மிலிந்த மொறகொட போன்றவர்கள் 'கலால்' உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக எடுத்த முயற்சிகள் தொடர்பாக நான் விளக்கினேன். டயான் ஜெயதிலக மற்றும் மொறகொட ஆகிய இருவரும் பொது பல சேனவின் தீவிரவாதம் தொடர்பாக வெளிப்படையாகப் பேசினார்கள். 

"அவர்கள் முட்டாள்கள். அவர்கள் பௌத்தத்தை எதிராகப் பேசுகின்றவர்களிடமிருந்தும், கத்தோலிக்கர்கள் மற்றும் ஏனையவர்களிடமிருந்து நிதியைப் பெறுகின்றனர்" என ஞானசாரா கூறினார். இராஜதந்திரியும், சிறிலங்காவின் ஐ.நாவுக்கான முன்னாள் தூதருமான ஜெயதிலக மற்றும் முன்னாள் அமைச்சருமான மொறகொட ஆகியோர் முட்டாள்களா? என நான் குறுக்குக் கேள்வி கேட்டேன். 

"ஆம். அவர்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. நீங்கள் அவர்களுடைய குடும்பப் பின்னணியைப் பார்க்க வேண்டும். அவர்கள் பௌத்தர்களா? பௌத்த கலாசாரத்தை அழிப்பதற்காக தேவாலயங்களால் சில குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜெயதிலகவின் பின்னணி பௌத்தரல்ல. மிலிந்தவும் பௌத்தரல்லர்" என ஞானசாரா குறிப்பிட்டார். 

அதிபர் ராஜபக்ச ஒரு நல்ல பௌத்தனா? என நான் ஞானசாராவிடம் கேட்டேன். இதேபோன்று அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்ச தொடர்பாகவும் கேட்டேன். அப்போது அவரது கோபம் திடீரென நின்றிருந்தது. "ஆம். அதிபர் ராஜபக்சவின் மனைவி கத்தோலிக்கர். இல்லையா?" என ஞானசாரா கூறினார். 

நான் அவ்வாறு தான் நினைக்கிறேன். இதனால் ஏதாவது பிரச்சினையா? என நான் கேட்டேன். "இல்லை. எந்தவொரு பிரச்சினையும் இல்லை" என அவர் பதிலளித்தார். 

"நாங்கள் ஏழை மக்கள் என்பதாலேயே மேற்குலக மற்றும் ஏனைய வெளிநாட்டு ஊடகங்கள் என்பன எம்மீது ஊடகப் போரை மேற்கொள்ள விரும்புகின்றன. நாங்கள் அனைத்துலக அழுத்தங்களால் அச்சுறுத்தப்படும் மிகச் சிறிய நாட்டைச் சேர்ந்தவர்கள். அதாவது வெளிநாட்டு ஊடகங்களாகிய உங்களிடம் பணம் உள்ளது. அதனால் நீங்கள் எமது நாட்டுக்குப் பயணம் செய்ய முடிகிறது. நாங்களும் உங்களது நாட்டுக்கு வந்து உங்களது பிரதமருடன் நேர்காணல் மேற்கொள்ள விரும்புகிறோம். ஆனால் எம்மிடம் பணம் இல்லை. ஆனால் உங்களிடம் போதியளவு பணம் உள்ளது" என ஞானசாரா சிங்கள மொழியில் கூறியதை ஆங்கிலத்திற்கு மொழி மாற்றிய போது விதனேஜ் கூறினார். 

"பௌத்தத்தை அழிப்பதற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றை அனைத்துலக ஊடகம் கொண்டுள்ளது. அத்துடன் பௌத்தர்கள் எவ்வளவு தீவிரவாதிகள் என்பதை உலகிற்கு காண்பிக்க இந்த ஊடகங்கள் முயல்கின்றன. ஆனால் அவுஸ்திரேலியாவில் உங்களது பிரதமர் தீவிரவாதக் கருத்துக்களைக் கூறினாலும் கூட இது தொடர்பாக எவரும் கதைக்க மாட்டார்கள். தயவு செய்து எங்களுக்கு பணம் தாருங்கள், அதன் மூலம் நாங்கள் உங்களது பிரதமர் என்ன கூறுகிறார் என்பதை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவோம். நாங்கள் வெளிநாட்டு ஊடகங்களிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. உங்களில் பெரும்பாலானவர்கள் மறைமுகமான நிகழ்ச்சி நிரலுடன் வருகிறீர்கள். பொது பல சேன தொடர்பாக பொய்யான பரப்புரைகள் உலகெங்கும் பரப்பப்படுகின்றன" என ஞானசாரா கூறினார். 

பொது பல சேனவின் தலைவர்களைக் குழப்பும் விதமாக மிக அண்மையில் சீன அரச செய்தி நிறுவனமான Xinhua செய்தி வெளியிட்டிருந்தது. 2005லிருந்து ராஜபக்ச அரசாங்கத்திற்கு சீனாவானது பல்வேறு நிதி மற்றும் ஏனைய உதவிகளை வழங்கி வருகிறது. சிறிலங்கா அதிபரின் சொந்த இடமான அம்பாந்தோட்டையில் பல்வேறு கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்வதற்கும், தமிழ்ப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெல்வதற்கான இராணுவ உதவிகளையும் சீனா வழங்கியிருந்தது. 
ஆனால் யூலை 08ல், சிறிலங்காவில் உள்ள முஸ்லீம்கள் தமது முகங்களை மூடிய உடைகளை அணிவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியதாக சீனச் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது. 

சீனர்களின் கருத்துப் பிழையானது. சிறிலங்காவில் முஸ்லீம்கள் தமது முகங்களை மூடி உடையணியக் கூடாது எனத் தாம் குறிப்பிடவில்லை எனவும், தமது முகங்களை மூடி உடையணியும் எவருக்கும் தடைவிதிக்க வேண்டுமென்றே தாம் கோரியதாக பொதுபல சேனவின் பிரதம நிறைவேற்று இயக்குனர் விதனேஜ் தெரிவித்தார். "இங்கு இவ்வாறான ஒரு முறைமை தேவையில்லை" என அவர் வலியுறுத்தினார். 

"நாங்கள் ஒருபோதும் இஸ்லாம் மதத்தைக் கேலிப்படுத்தவில்லை. முகமூடி அணிவது சிறிலங்காவில் தடைசெய்யப்பட வேண்டும் என்றே கூறியிருந்தோம்" என அவர் மீள வலியுறுத்தினார். 

பொது பல சேன ஏன் அடிக்கடி இந்திய உயர் ஆணையகத்தின் முன் நின்று ஆர்ப்பாட்டம் செய்வதாக நான் கேட்டேன். "இந்தியா பௌத்த கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டும்" என விதனேஜ் பதிலளித்தார். "இந்தியா என்ன செய்யவில்லை?" எனக் கேட்டேன். 

இந்திய மாநிலமான பீகாரில் உள்ள புத்தகாயாவில் யூலை 07 அன்று குண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் குண்டுவெடிப்புக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லீம் தீவிரவாதிகளும், இந்துத் தீவிரவாதிகளும் 'மாவோயிஸ்ட்' இராணுவக் குழுவுமே காரணம் என தென்னாசிய அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தினர். 

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப் புலிகளின் ஆதரவாளர்களே இதற்குக் காரணம் என சிறிலங்காவின் பிரதமர் அறிவித்திருந்தார். "புத்தகாயா என்பது புத்த பெருமான் பிறந்த இடமாகும். இது பாதுகாக்கப்பட வேண்டும்" என விதனேஸ் கூறினார். 

பௌத்தர்களின் உண்மையான பாதுகாவலன் எனத் தன்னைத் தானே கூறிக் கொள்ளும் பொது பல சேனவுக்கு புத்தரின் பிறப்பிடம் புத்தகாயா இல்லை என்பது தெரியவில்லை. புத்தர் தற்போது நேபாளம் எனக் கூறப்படும் நாட்டிலேயே பிறந்ததாக பௌத்தர்களின் ஒருசாரார் கூறுகின்றனர். இந்தியா மற்றும் நேபாளத்தின் பல்வேறு இடங்களைப் புத்தர் பிறந்த இடமாக மதசார் தொல்லியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் பீகாரில் இவர் பிறந்ததாகக் குறிப்பிடவில்லை. 

புத்தர் முத்திநிலை அடைந்த இடமே புத்தகாயா என பௌத்தர்கள் நம்புகின்றனர். பீகாரின் புத்தகாய எனும் புனித இடத்தில் பௌத்தம் தோன்றியது எனக் கருதப்படலாம். ஆனால் இது தொடர்பில் பொது பல சேன வேறுவகையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய உயர் ஆணையகம் முன்பாக ஏன் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதாக நான் கேட்ட வினாவை நியாயப்படுத்துவதற்காகவே விதனேஜ் இவ்வாறான ஒரு விளக்கத்தை வழங்கியிருந்தார். 

சிறிலங்காவில் பெரும்பான்மை சிங்கள மக்கள் பேசுகின்ற சிங்கள மெரிஜ உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது போல், இந்து மற்றும் முஸ்லீம் சமூகங்கள் பேசுகின்ற தமிழ் மொழியானது உத்தியோகபூர்வ மொழியாக பிரகடனப்படுத்தப்படுமா என நான் விதனேஜ்ஜிடம் வினவினேன். பிரித்தானியாவிடமிருந்து சிறிலங்கா சுதந்திரம் பெற்ற பின்னர், 1956ல் சிங்களம் மட்டும் சட்டம் வரையப்பட்டது. இதன் மூலம் சிறிலங்காவின் சனத்தொகையில் 25 சதவீதமான தமிழ் மொழி பேசும் மக்களின் மொழி உரிமை மறுக்கப்பட்டது. இதுவே பின்னர் தமிழர் வாழும் வடக்கில் நீண்ட கால யுத்தம் ஒன்று தொடரப்படுவதற்குக் காரணமாக இருந்ததாக நம்பப்படுகிறது. 

போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகளின் பின்னர், மீண்டும் இந்த மொழிப் பிரச்சினை தலைதூக்கியது. ராஜபக்ச அரசாங்கத்தால் நீர்த்துப் போகச் செய்வதற்கு முயற்சி எடுக்கப்படும் 13வது திருத்தச் சட்டத்தில் தமிழ் மொழி உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டு தமிழ் மக்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

"நீங்கள் வரலாற்றை விளங்கிக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது. இது போன்ற கேள்வியை நீங்கள் கேட்கமுடியாது. நாங்கள் தமிழ் மக்களுடன் எந்தப் பிரச்சினையையும் கொண்டிருக்கவில்லை. அடுத்த மாதம் தமிழர் பகுதியில் நாங்கள் பெரிய ஆர்ப்பாட்டங்களை நடாத்தத் திட்டமிட்டுள்ளோம். நாங்கள் அங்கு வரவேண்டும் என தமிழ் மக்கள் விரும்புகின்றனர். நாங்கள் ஒருபோதும் தமிழ் மக்களைக் கொல்லவில்லை. நாங்கள் பயங்கரவாதிகளையே கொன்றோம்" என விதனேஸ் கூறினார். இங்கு விதனேஜ் 'நாங்கள்' என வலியுறுத்திக் கூறியது என்பதை நான் கவனித்தேன். 

இந்தப் பிக்குகள் எம்முடனான நேர்காணலை முடித்தனர். நானும் புறப்படுவதற்குத் தயாரானேன். ஞானசாரா, விதனேஜ்ஜைக் கூப்பிட்டு சிங்களத்தில் மிகச் சுருக்கமாக அறிவித்தல் ஒன்றை வழங்கியதை நான் அவதானித்தேன். "ஞானசாரா, எல்லா முஸ்லீம்களும் கெட்டவர்கள் நகைச்சுவையாகவே கூறினார். நாங்கள் முஸ்லீம்களை எவ்விதத்திலும் வெறுக்கவில்லை" என விதனேஜ் கூறினார். 

சிறிலங்காவானது தன்னை 'சொர்க்கபுரி' எனக் கூறிக்கொள்வதற்கு இன்னமும் நீண்ட பயணம் செல்ல வேண்டும்.

4 comments:

  1. No use of commenting on the foolish, communal, uncivilized and unethical statements of third grades.

    One think I have to say on your last sentence. Sri Lanka was once upon a time paradise, but now its moving fastly towards hell.

    ReplyDelete
  2. Nyanasaara..!!!!!!!!!!
    All Muslims bad..?? i think you was born in illegitimate way... sometime your fathersS should be..many..no choice.! its mean in arabic word "HARAMI"

    ReplyDelete
  3. no time to read also we are does'nt care like this stupid poeple and this is the first crezy man

    ReplyDelete
  4. நீண்ட அறிக்கையான போதும் விடயங்ககளின் வெளியாக்கல் தேவையானதுதான்.முஸ்லீம்களின் தலைவர்களும்,எம்-பீக்களும்,மாவன்னா சபை உறுப்பினர்களும்,18வது தி-சட்டம் தொடக்கம் திவ நெகும வரை எமது அதிகாரங்களை தாரைவார்த்து கொடுத்துவிட்டு இப்போது தலையில் அடித்து அழுகின்றனர்.இவர்களின் விட்டுக்கொடுப்பு காலத்தில் இவர்களின் பலஹீனங்களை அறிந்த சிங்களவர்களில் சில காட்டுமிரான்டிகளின் திட்டமிட்ட உருவாக்கம்தான் இந்த லஹணத்தான பிபிஎஸ் சாத்தான்கள்.
    இவர்களின் ஒவ்வொரு அசைவும் எமக்கு பிற்கால தேவைக்குட்பட்டதே......

    ReplyDelete

Powered by Blogger.