Header Ads



ஜெனீவாவில் நடந்தது என்ன..?? (கட்டுரை)


(இன்றைய 25-03-2011 ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரையொன்றை இங்கு மீள பதிவிடுகிறோம்)

ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்.

  ஜெனீவாவிலும், இலங்கையிலும் கடந்த சில வாரங்களாக நிலவிவந்த பரபரப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா சமர்ப்பித்த பிரேணை வெற்றி பெற்றதையடுத்தே தற்போது அடுத்தக்கட்டம் என்ன என்பது பற்றிய பரவலான கேள்விகள் மேலோங்கியுள்ளன.

  கடந்த ஒரு மாதகாலமாக ஜெனீவாவில் நிலவிய நிலவரங்களையும், தற்போது இலங்கை குறித்து அமெரிக்கா கொண்டுவந்த பிரேணை வெற்றிபெற்றுள்ள நிலையிலும் அதன் அடுத்த கட்டம் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

  பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 23 ஆம் திகதி வரையிலான ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்றுமுடிந்துள்ளது. இதற்கு முன்னைய காலங்களில் இவ்வாறான கூட்டத்தொடர்கள் நடைபெற்றுள்ள போதிலும் இம்முறையே இலங்கையர்களும், சர்வதேச சமூகமும் இக்கூட்டத்தொடர் பற்றி தமது அதீத கவனத்தை செலுத்தியிருந்தன.

  இலங்கையர்களினதும், சர்வதேச சமூகத்தினதும் கவனம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் மீது குவிவிந்திருந்தமைக்கு 2 பிரதான விடயங்கள் காரணமாக அமைந்திருந்தன.

1 - அமெரிக்கா இலங்கை பற்றிய பிரேணையை கொண்டுவந்தமை. அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமை

2 - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்தக் கூட்டத்தொடரை முற்றிலும் இலங்கைக்கு எதிராக நோக்கியமையும், அதற்காக மக்களை அணிதிரட்டியமையும்.

  மேற்சொன்ன 2 பிரதான காரணிகளுடன், பல துணைக்காரணிகளும் செல்வாக்குச் செலுத்தவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத்தொடரானது முக்கியத்துவமிக்கதாக அமைந்துவிட்டது.
  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 18 ஆவது கூட்டத்தொடர் கடந்த வருடம் நடைபெற்றபோது கனடா திடீரென இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முயன்றபோதும் போதிய அதரவு இன்மையால் அது கைவிடப்பட்டது.

  கனடா மூலம் நிறைய பாடங்களை கற்றுக்கொண்ட அமெரிக்கா, இலங்கை குறித்து இம்முறை தீர்மானம் கொண்டுவருவதற்கு முன்னர் அதுபற்றி கச்சிதமாக திட்டங்களை வகுத்தது. தீர்மானம் பற்றிய அறிவிப்பை உத்தியோகபூர்வமாக இலங்கை ஆட்சியாளர்களுக்கும் அறியப்படுத்தியதுடன், இந்தியாவின் ஆதரவையும் கோரியிருந்தது. இருந்தபோதும் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயற்பட அப்போது இந்தியா பின்வாங்கியிருந்தது.

  இவ்வாறானதொரு நிலையில் ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியது. இலங்கை அரசாங்கத் தரப்பினர் மிகப்பெரும் பரிவாரங்களுடன் ஜெனீவா வந்தடைந்தனர். முதல்நாள் அமர்விலேயே அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிற்கும் உரையாற்ற அனுமதி கிடைத்தது.

  முதல்நாள் அமர்வையடுத்து சிலநாட்கள் ஜெனீவாவில் தங்கியிருந்த இலங்கை அரசாங்கத் தரப்பினர் பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளையும் சந்திதது இலங்கைக்கு ஆதரவு கோரியிருந்தனர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிலுள்ள சுமார் 25 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டிலேயே இருந்தன. இந்தியாவும் இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்க இணஙகியிருந்தது.

  இலங்கை அரசாங்கத் தரப்பினர் ஜெனீவா இன்டர்கொண்டினண்டல் ஹோட்டலில் பெப்ரவரி 25 ஆம் திகதி வழங்கிய விருந்துபசார நிகழ்வில் பஙகேற்ற ஜெனீவாவுக்கான (Dr Kheya Bhattacharya Deputy Permanent Representative of India to UN)  இந்தியாவின் உதவி இலங்கைக்கு கிட்டுமென உறுதியளித்திருந்தார்.

  இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு தமக்கு கிட்டும் இதன்மூலம் அமெரிக்கா இலங்கை தொடர்பில் கொண்டுவரும் பிரேரணையை தோற்கடித்துவிடலாமென்ற நம்பிக்கையில் ஜெனீவா வந்திருந்த இலங்கை அரசாங்கத்தரப்பினர் நாடு திரும்பியிருந்தனர். இலங்கைக்கு ஆதரவு நிலை காணப்படுவதாக அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் ஒப்புவித்தனர்.

  இந்நிலையில்தான் அமெரிக்கா தனது அடுத்தகட்ட நகர்வை ஆரம்பித்தது. அமெரிககாவிலிருந்து இதன்பொருட்டு 50 உறுப்பினர்களும் ஜெனீவாவுக்கு வரவைழக்கப்பட்டனர். இவர்கள் துணையுடன் ஜெனீவாவுக்கான அமெரிககாவின் சிறப்பு பிரதிநிதியும் இணைந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உறுப்புறமை பெற்றுள்ள அத்தனை நாட்டுப் பிரதிநிதிகளையும் சந்திததனர்.

  அமெரிககாவின் முயற்சிக்கு கைமேல் பலன் கிட்டியது. தமக்கு 25 க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியுமென்பதை அமெரிக்கா இதன்மூலம் நன்கறிந்துகொண்டது. இதையடுத்து இலங்கை பற்றிய ஒரு பிரேணையை வரைபை தயாரித்தது. அதனை உடனடியாக உறுப்பு நாடுகளுக்கும் காண்பித்தது. அவற்றின் சம்மதமும் கிட்டியது.

  அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பிரேணை தயாரித்துள்ளதை அறிந்துகொண்ட இலங்கை அரசாங்கத் தரப்பினர் மீண்டும் அவசரமாக ஜெனீவா வந்தடைந்தனர். அவசர அவசரமாக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்திதது கலந்துரையாடினர். எனினும் இலங்கைத் தரப்பினருக்கு ஏமாற்றம் மிஞ்சியிருந்தது.

  இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக வெளியான செய்தி இலங்கையை திகைப்பில் மூழ்கடித்தது. விருந்தளித்தபோது இலங்கைக்கு ஆதரவு தருவதாக வாக்குறுதி வழங்கிய இந்தியா, பின்னர் பல்டி அடித்ததை இலங்கை தரப்பினரால் ஜீரணிக்கவே முடியவில்லை.

  இதுதொடர்பில் ஞாயிறு தினக்குரலுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஒருவர், இந்தியா நாய் வேலை செய்துவிட்டது என பச்சையாக தனது ஆத்திரத்தை கொட்டித்தீர்த்தார்.

  மேலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் எந்தப்பக்கம் சாய்வது என்ற தீர்மானத்தை மேற்கொள்ளாமல் மௌனம் காத்துநின்ற மொரிசியஸ், பெரு, உருகுவே, சிலி உள்ளிட்ட நாடுகளும் அமெரிககாவின் பக்கம் சாய்ந்தன.

  அத்துடன் இலங்கைக்கு ஆதரவாக செயற்படுவோமென முன்னர் வாக்குறுதி வழங்கியிருந்த சில நாடுகள் தமது நிலைப்பாட்டிலிருந்து விலகி அமெரிககாவுக்கு ஆதரவு அல்லது நடுநிலை என்ற நிலைப்பாட்டை மேற்கொண்டிருந்தன. குறிப்பாக ஜோர்டான், மலேசியா, கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் நடுநிலை வகிக்கப்போவதாக அறிவித்திருந்தன.

  ஜெனீவாவில் இலங்கை பற்றிய தமது முடிவை பல நாடுகள் மாற்றிக்கொள்வதற்கு அமெரிககா மேற்கொண்ட தீவிர பிரச்சாரங்களே பிரதான காரணமாக அமைந்திருந்தது.

  இதனையடுத்து வியாழக்கிழமை, 22 ஆம் திகதி இலங்கை தொடர்பிலான பிரேணையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்பித்து ஜெனீவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எலின் சேம்பர் லெய்ன் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

இலங்கையின் நல்லிணக்கப்பாட்டையும், கடப்பாடுகளையும் ஊக்குவிக்கும் பொருட்டு அமெரிக்கா 1, 2 வரைவுத் திட்டத்தைப் பரிசீலனைக்காகவும், ஒப்புதலுக்காகவும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.  இலங்கையின் நீண்டகால, துயரமான போர் முடிவுற்று மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இலங்கை மக்களுக்கு சமாதானத்தோடுகூடிய ஓர் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நலன்விரும்பி நாடுகளைப்போன்று எனது அரசும் இணைந்து செயற்பட்டுவந்துள்ளது.

கடந்த மூன்று வருடங்களில் நிரந்தர தேசிய நல்லிணக்கப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கும், கடப்பாடுகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும் இலங்கைக்குக் கால அவகாசமிருந்தது.  நாங்கள் அந்த ஆணைக்குழுவின் அறிக்கையை ஆவலோடு எதிர்பார்த்தோம். அதேவேளை, இலங்கை தனது சுய செயற்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமென தெரிந்து கொண்டோம்.  தேசிய நல்லிணக்கப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கும், கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் ஆரோக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இல்லையேல், எட்டும் சமாதானம் நிலைத்துநிற்கும் என்பதற்கில்லை.

இலங்கை அரசின் நல்லிணக்கப்பாட்டுக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடப்பாடுகளை நிறைவேற்ற மேலதிக நடவடிக்கைகள் தேவை. இவ்விவகாரம் ஆணைக்குழுவின் அறிக்கையிலும் இடம்பெறவில்லை. எனவே, காலத்துக்கும், சமபாட்டுக்கும் பொருத்தமான இப்பிரேரணையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பரிசீலனைக்கு உட்படுத்தி ஏற்றுக்கொள்ளவேண்டும். இது தனது சொந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்து ரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையை ஊக்குவிக்குகின்றது. நிரந்தரமான நல்லிணக் கப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கான, காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதை தூண்டுகின்றது.

இதற்கும் மேலாக மனித உரிமைகள் தூதுவர் அலுவலகத்தோடு இணைந்து செயல்படுவதற்கும், ஆக்கபூர்வமான ஆலோசனைகளைப் பெறுவதற்கும் இப்பிரேரணை இலங்கையை வலியுறுத்துகிறது என்றார் அவர்.

இதைத்தொடர்ந்து ஜெனீவா நாட்டுக்கான கியூபா பிரதிநிதியும் உரையாற்றினர் அவரின் உரை முழுவதும் அமெரிககாவை விமர்சிப்பதாகவும், குறித்த பிரேணையை ஒத்திவைக்ககோருவதாகவும் அமைந்திருந்தது. இருந்தபோதும் அதற்கு உடன்பட அமெரிக்கா முற்றாக மறுத்தது. இதையடுத்து இலங்கையின் சார்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரையாற்றினார்.

அவர் தனதுரையில், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், கடந்த 2009 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்தை அது பலவீனப்படுத்தியுள்ளதாகவும் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கையின் விசேட பிரதிநிதி மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறானதொரு தீர்மானத்தை கொண்டுவருவதிலும் பார்க்க போதிய கால அவகாசம் வழங்கியிருக்கலாம் எனவும், கண்ணாடி மாளிகையில் இருப்போர் கல்லெறியக் கூடாதெனவும் உறுப்பு நாடுகள் சூழ்நிலையை உணர்ந்து செயற்பட வேண்டும். அத்துடன் அனுசரணையாளர்களுக்கும் இணை அனுசரணையாளர்களுக்கும் நான் ஒன்றை மட்டும் கூறவேண்டியுள்ளது. அதாவது முதலில் உங்களைத் திருத்திக்கொள்ளுங்கள் என்றார்

   இதையடுத்து  பிரேரணை மீதான வாக்களிப்பு நடைபெற்றது. 

 ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தன. தீர்மானத்துக்கு எதிராக 15 நாடுகள் வாக்களித்துள்ளன. மேலும் 8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.

  இலங்கைக்கு  எதிரான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா, சிலி, கோஸ்ராரிக்கா, கௌதமாலா, மெக்சிக்கோ, பெரு, உருகுவே, ஒஸ்ரியா, பெல்ஜியம், இத்தாலி, நோர்வே, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, கீறீஸ், ஹங்கேரி, போலந்து, மோல்டோவா, ருமேனியா, பெனின், கமரூன், லிபியா, மொரிசியஸ், நைஜீரியா ஆகிய நாடுகள் வாக்களித்தன.

   அதேவேளை, கொங்கோ, மொரிட்டானியா, உகண்டா, பங்களாதேஸ், சீனா, இந்தோனேசியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், கட்டார், சவூதி அரேபியா, தாய்லாந்து, கியூபா, ஈக்குவடோர், ரஸ்யா ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.

  அங்கோலா, பொற்ஸ்வானா, புர்கினா பெஸோ, டிஜிபோட்டி, செனகல், ஜோர்தான், கிர்கிஸ்தான், மலேசியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.

  ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழவில் இலங்கை குறித்த அமெரிககாவின் பிரேணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையல் அடுத்தக்கட்டம் பற்றிய கேள்வி எழுகிறது.

  இலங்கை அரசாங்கம் குறிப்பிடுவது போல இலங்கை அரசாங்கத்தின் எத்தகைய நிகழ்ச்சி நிரலையும் இந்தப் பிரேணை மாற்றியமைக்கப்போவது இல்லைதான். இலங்கை விவகாரத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தலையிடும் எத்தகைய சட்ட ஏற்பாடுகளையும் குறித்த பிரேணை கொண்டிருக்கவுமில்லை என்பதும் உண்மைதான்.

  இருந்தபோதும் இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையிடும் வாய்ப்பை குறித்த பிரேணை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்பது மட்டும் உண்மையாகும்.

  குறித்த பிரேணை நிறைவேற்றப்பட்டுள்ளதை காரணங்காட்டி அல்லது அதனை அடிப்படையாக கொண்டு சர்வதேச சமூகும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் கொடுக்கும் நிலையேற்படலாம். பரேணை மீதான வாக்கெடுப்பு வெற்றிபெற்றதன் பின்னர் அமெரிகக வெளியுறவுத்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையின் சாரம்சமும் இதுவாகத்தான் உள்ளது.

  நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைந்துள்ள விவகாரங்களை நடைமுறைப்படுத்த மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் காலதாமதம் மேற்கொள்ளும் வேளைகளில் இந்த நெருக்கடிகள் மேலும் அதிகரிக்கலாம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழவினை கடந்து, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்குகூட இலங்கை விவகாரம் வியாப்பகம் பெறவும்கூடும்.

  ஏனவே இலங்கை அரசாங்கம் கநற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவின் அறிக்கையை அமுல்படுத்துவதைத்தவிர அரசாங்கத்திற்கு மாற்றுவழிகள் கிடையாது. உலகின் பொலிஸ்காரனுக்கு அடிபணியாவிட்டாலும் பரவாயில்லை. சிங்கள கடும்போக்காளர்களுக்கு தலைசாய்க்காது, உலகின் கோரிக்கைகளை கவனத்திற்கொள்ள வேண்டிய அவசியம் இலங்கை ஆட்சியாளர்களுக்கு உண்டு.

  இலங்கையின் உள்நாட்டு இறைமைக்கு பாதிப்பில்லாத விடயங்களை சர்வதேச சமூகம் முன்மொழியும்போது  அதுகுறித்து சாதகமாக பரிசீலிப்பதும் அவசியமாகிறது. இந்த உண்மைகளை மறைதது, அமெரிகக உற்திப் பொருட்களை பகிஷ்கரித்து, சீனூவின் பக்கம் மாத்திரம் சாய்ந்துவிடுவதால் இலங்கைக்கு விமோசனம் கிடைத்துவிடாது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்..!!


No comments

Powered by Blogger.