அண்ணல் முஹம்மது ﷺ அவர்கள் ஓமான் மக்களைப் பற்றி உதிர்த்த அந்த நற்சான்றிதழ்


பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் (King Charles III) அவர்கள், உத்தியோகபூர்வமாக லண்டனுக்கு வருகை தந்த ஒமான் நாட்டின் சுல்தானை வரவேற்ற விதம் உலகளாவிய ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளையம் வரவேட்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதுவும் சாதாரண ஆங்கில வரவேற்போடு நின்றுவிடாமல், மன்னர் சார்ல்ஸ் அவர்கள் இஸ்லாமிய ஹதீஸ் கிரந்தங்களின் உச்சமாகக் கருதப்படும் 'ஸஹீஹ் முஸ்லிம்' நூலில் பதியப்பட்டுள்ள புகழ்பெற்ற ஹதீஸ் ஒன்றை, மிகவும் சிரத்தையுடன் அரபு மொழியிலேயே உச்சரித்து ஓமானியர்களை வரவேற்ற அந்தத் தருணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.


லண்டனில் உள்ள வின்சென்ட் அரண்மனையில் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வின்போது, ஒமான் நாட்டின் சுல்தானை வரவேற்றுப் பேசிய பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ், அரபு உலகத்தோடும் இஸ்லாமிய நாகரிகத்தோடும் பிரிட்டன் கொண்டுள்ள நீண்டகால நல்லுறவைச் சுட்டிக்காட்ட விரும்பினார்.


அப்போது அவர், ஓமான் மக்களின் பாரம்பரிய நற்பண்புகளையும், சாந்த சொரூபமான சுபாவத்தையும் பாராட்டிப் பேசும்போது, அண்ணல் முஹம்மது (ஸல்) அவர்கள் ஓமானியர்களைப் பற்றிச் சொன்ன அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நற்செய்தியை அரபு மொழியிலேயே வாசித்தார்.


மன்னர் சார்ல்ஸ் குறிப்பிட்ட அந்த வார்த்தைகள்:

"لَوْ أَنَّ أَهْلَ عُمَانَ أَتَيْتَ، مَا سَبُّوكَ وَلَا ضَرَبُوكَ"


"நீங்கள் ஓமான் மக்களுக்குச் சென்றிருந்தால், அவர்கள் உங்களை ஏசியும் இருக்க மாட்டார்கள், தாக்கியும் இருக்க மாட்டார்கள்!"


அரபு மொழி அல்லாத ஒரு நாட்டின் மன்னர், அதுவும் பிரித்தானியப் பேரரசின் மகுடம் தாங்கிய அரசர், இஸ்லாமிய ஹதீஸ் நூலில் உள்ள ஒரு வரியைத் தன் நாவால் துல்லியமாக உச்சரித்து வரவேற்றது ஓமான் நாட்டுத் தலைவர்களையும், உலக அரங்கில் உள்ள இஸ்லாமிய அறிஞர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


மன்னர் சார்ல்ஸ் மேற்கோள் காட்டிய இந்தச் செய்தி வெறும் வாய்மொழிக் கதையல்ல; இது இஸ்லாமிய ஹதீஸ் கலையின் மிகவும் முக்கியமான  நூலான 'ஸஹீஹ் முஸ்லிம்' நூலில் மிகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் தனது ஸஹீஹ் முஸ்லிம் நூலில், 'ஃபழாயில் அஸ்-ஸஹாபா' (தோழர்களின் சிறப்புகள்) அல்லது தூதுவரின் நற்பண்புகள் தொடர்பான அத்தியாயத்தில் இந்த வரலாற்றைப் பதிவு செய்துள்ளார்.


நபி (ஸல்) அவர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குத் தூதுக்குழு ஒன்றை அனுப்பினார்கள். அந்தத் தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்த ஒரு தோழரிடம், குறிப்பிட்ட ஒரு கிராமத்தாரைச் சந்திக்குமாறு கூறப்பட்டது. அந்தப் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பிய அந்தத் தோழர், தான் சந்தித்த அந்தப் பழங்குடி மக்களின் கடுமையான மற்றும் கரடுமுரடான எதிர்ப்பைப் பற்றி (நபியவர்களிடம்) முறையிட்டார்.


அப்போது அண்ணல் முஹம்மது (ஸல்) அவர்கள், மனிதநேயம் ததும்பும் அந்தப் பொன்மொழிகளைக் கூறினார்கள்:


"நீங்கள் ஓமான் மக்களுக்குச் சென்றிருந்தால், அவர்கள் உங்களை ஏசியும் இருக்க மாட்டார்கள், உங்களைத் தாக்கியும் இருக்க மாட்டார்கள்!"


நபிகளார் ஏன் குறிப்பாக 'ஓமான்' மக்களைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள் தெரியுமா?


தொடக்கக் கால இஸ்லாத்தின் வரலாற்றில், ஓமான் பகுதி மக்கள் தூதரக ரீதியாகவும் வணிக ரீதியாகவும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். எவ்விதப் போர்ச் சூழலும் இன்றி, தாமாக முன்வந்து இஸ்லாத்தின் அமைதி வழியைத் தழுவிய பெருமை ஓமான் மக்களுக்கு உண்டு.


ஓமானியர்களின் பாரம்பரிய குணமே வன்முறையை வெறுப்பதும், விருந்தினர்களை உயிருக்கு நிகராக மதிப்பதும், எந்தவொரு பிரச்சினையையும் பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்ப்பதும்தான். 1400 ஆண்டுகளுக்கு முன்பே முஹம்மது (ஸல்) அவர்கள் ஓமானியர்களின் இந்த உன்னதமான தேசியக் குணத்தை மிகத் துல்லியமாக அடையாளம் கண்டு சான்றிதழ் அளித்துள்ளார்கள்.


இன்றைய நவீன மத்திய கிழக்கு அரசியலிலும் கூட, அனைத்து நாடுகளுடனும் நடுநிலையான நட்புறவைப் பேணி, பிராந்திய அமைதிக்குத் தொடர்ந்து பாடுபடும் ஒரு அமைதிப்பூங்காவாகவே ஓமான் திகழ்ந்து வருகிறது. நபிகளார் அன்றைக்குச் சொன்ன அந்த வார்த்தை, இன்றும் ஓமான் நாட்டின் தேசிய நற்பண்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு மன்னர் சார்ல்ஸின் இந்தப் பாராட்டு ஒரு நேரடிச் சான்றாகும்!


மன்னர் சார்ல்ஸ் இஸ்லாமிய வரலாற்றையும், அரபு கலைகளையும் ஆழ்ந்து வாசித்தவர் என்பதும், இஸ்லாமிய நாகரிகத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டவர் என்பதும் பலரும் அறிந்ததே.


அவர் இதற்கு முன்பும் பலமுறை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் பிற பன்னாட்டு மேடைகளிலும் ஆற்றிய உரைகளில், இஸ்லாமிய உலகின் அறிவியல் பங்களிப்புகள், சுற்றுச்சூழல் தத்துவங்கள் மற்றும் மனிதநேயக் கோட்பாடுகளைப் புகழ்ந்து பேசியுள்ளார். இப்போது ஓமான் சுல்தானை வரவேற்கும் வேளையில், ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸை மிகப் பொருத்தமாக மேற்கோள் காட்டியதன் மூலம், அவர் தன் வரலாற்றுப் புலமையையும், ஓமான் நாட்டின் மீதான வரலாற்று மரியாதையையும் ஒரே வரியில் உலகிற்கு உணர்த்தியுள்ளார்.


பிரித்தானிய அரண்மனையின் பிரம்மாண்டமான வரவேற்பறையில், ஒரு மேற்குலக மன்னர் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸை அரபு மொழியில் மொழிந்து ஓமானியர்களைப் பாராட்டியது, நாகரிகங்கள் மோதிக்கொள்ளும் தளமல்ல இது, மாறாக வரலாற்றின் நல்லம்சங்கள் ஒன்றையொன்று சந்திக்கும் தருணம் என்பதை நிரூபித்துள்ளது.


1400 ஆண்டுகளுக்கு முன்பு பாலைவனத்து மணலில் நின்று அண்ணல் முஹம்மது (ஸல்) அவர்கள் ஓமான் மக்களைப் பற்றி உதிர்த்த அந்த நற்சான்றிதழ், இன்றைக்கும் லண்டன் ராஜ வீதிகளில் எதிரொலித்திருப்பது வரலாற்றின் சுவாரஸ்யமான  உண்மைகளில் ஒன்றாகும்!


✍️ Abdullah Ibnu Naseer 

No comments

Powered by Blogger.