ஹிஜாப்புக்கு எதிராக அசர்பைஜானின் மோசமான தீர்மானம்
அஜர்பைஜான் (ஹிஜாப்பை) வெளிப்படையாகத் தடை செய்யவில்லை என்றாலும், "மதச்சார்பின்மைக் கொள்கையை" மீறுவதாக அரசாங்கம் கருதும் வகையிலான ஆடைகளை பள்ளிகளில் அணிவதைத் தடை செய்துள்ளது. பள்ளிகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வகுப்புகளுக்குச் செல்லவிடாமல் தடுக்கத் தொடங்கியுள்ளது.
அரசின் பொதுக் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கான சீருடை விவரக்குறிப்புகளில் கொண்டுவரப்பட்ட திருத்தமானது, நாட்டின் "மதச்சார்பற்ற கொள்கையை" பிரதிபலிக்கும் வகையிலான ஒரு சீரான ஆடை முறையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அரசுக்குச் சொந்தமான அஜர்பைஜான் செய்தி முகமை (APA) தெரிவித்துள்ளது.
அஜர்பைஜானின் மக்கள் தொகையில் சுமார் 96 சதவீதம் பேர் முஸ்லிம்கள். அந்நாட்டின் அரசியலமைப்பு நாட்டை மதச்சார்பற்றதாக வரையறுப்பதோடு, மத சுதந்திரத்தையும் உறுதி செய்கிறது.
பள்ளிகளிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டபோது மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களைக் கட்டிப்பிடித்து அழுத காட்சிகள் அடங்கிய காணொளிகள் வெளியாகியிருந்தன.
முஸ்லிம் பெண்களைப் பாதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, துருக்கியில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி, இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அழைப்பு விடுத்தனர்.
போராட்டங்களுக்காக, அஜர்பைஜானின் வலுவான கூட்டாளியான துருக்கியை, அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் மறைமுகமாக விமர்சித்தார். தனது புதிய அஜர்பைஜான் கட்சி மாநாட்டில் ஆற்றிய உரையில், துருக்கியை நேரடியாகக் குறிப்பிடாமல், "எங்கள் வாழ்க்கை முறையில் தலையிட வேண்டாம்" என்று அலியேவ் எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.
தகவல் மூலம் - Aljazeera.

Post a Comment